Pages

Thursday 3 March 2011

காங்கிரஸ் நிர்பந்தம்: பணிகிறது திமுக ?


திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 60 இடங்கள் ஒதுக்கப்படும் என்று தில்லியிலிருந்து நம்பிக்கையான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காங்கிரஸுடனான தொகுதிப் பங்கீடு குறித்த அறிவிப்பை வெள்ளிக்கிழமை (மார்ச் 4) தி.மு.க. வெளியிடும் என்றும் கூறப்படுகிறது.

தி.மு.க.வுடன் கூட்டணி பற்றியும், தொகுதிகள் பற்றியும் விவாதிக்கக் காங்கிரஸ் மேலிடத்தால் அமைக்கப்பட்ட தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.வி. தங்கபாலு தலைமையிலான ஐவர் குழுவின் இரண்டு கட்டப் பேச்சுவார்த்தைகளிலும் சுமுகமான முடிவு எதுவும் ஏற்படவில்லை. இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் தமிழகப் பொறுப்பாளரான குலாம் நபி ஆசாத் கடந்த புதன்கிழமை தி.மு.க. தலைவரும், தமிழக முதல்வருமான மு. கருணாநிதியை அறிவாலயத்தில் சந்தித்துப் பேசினார்.
தில்லி திரும்பிய குலாம் நபி ஆசாத் மீண்டும் ஐவர் குழுவுடன் தமிழக நிலைமை பற்றி விவாதித்தார். தில்லியில் உள்ள அவரது இல்லத்தில் வியாழக்கிழமை மாலை 5.30 மணி முதல் 7.30 மணி வரை இந்த ஆலோசனை நடந்தது.
இந்தக் கூட்டத்துக்குப் பிறகு, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை இரவு சந்தித்து இதுவரை நடந்துள்ள பேச்சுவார்த்தைகள் பற்றிய விவரங்களை அவர் கூறினார். அப்போது சென்னையில் முதல்வர் கருணாநிதியுடன் நடந்த பேச்சுவார்த்தை பற்றியும் சோனியாவிடம் அவர் விவரித்ததாகத் தெரிகிறது.
முதல்வர் கருணாநிதியுடனான தனது சந்திப்புக்குப் பிறகு கொங்குநாடு முன்னேற்ற கழகத்துடன் தி.மு.க. தலைமை உடன்படிக்கை செய்து கொண்டதையும், அவர்களுக்கு ஏழு இடங்களை ஒதுக்கியதையும் பற்றிய விவரங்களையும் குலாம் நபி ஆசாத் சோனியா காந்தியிடம் விளக்கியதாகத் தெரிகிறது. சில குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே செல்வாக்குடைய பா.ம.க.வுக்கு 31 இடங்களையும், விடுதலைச் சிறுத்தைகளுக்கு 10 இடங்களையும், கொங்குநாடு முன்னேற்ற கழகத்துக்கு 7 இடங்களையும் தி.மு.க. அளித்திருக்கும் நிலையில், தமிழகத்தில் அனைத்துத் தொகுதிகளிலும் தனக்கென வாக்கு வங்கி வைத்திருக்கும் காங்கிரஸ் கட்சிக்குக் குறைந்தது 64 இடங்களையாவது தி.ம.க. தலைமை தர வேண்டும் என்று காங்கிரஸார் மத்தியில் பரவலாக எதிர்பார்ப்பு இருப்பது பற்றியும் அவர் கூறியதாகத் தெரிகிறது.
சோனியாவை சந்தித்த பிறகு இரவு 10 மணி முதல் 10.45 வரை மீண்டும் ஐவர் குழுவுடன் ஆசாத் ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது காங்கிரஸ் தலைவர் சோனியாவின் முடிவுகளை குழுவினரிடம் தெரிவித்தார்.
காங்கிரஸுக்குக் குறைந்தது 1991-ல் தரப்பட்டது போல 64 இடங்கள், கூட்டணி ஆட்சி, கூட்டணிக் கட்சிகளின் ஒருங்கிணைப்புக் குழு போன்ற கோரிக்கைகளைக் காங்கிரஸ் கட்சி முன்வைத்ததாகக் கூறப்பட்டு வந்த நிலையில், பா.ம.க., விடுதலைச் சிறுத்தைகள், கொங்குநாடு முன்னேற்ற கழகம் ஆகிய மூன்று கட்சிகளுக்கும் முறையே 31, 10, 7 இடங்களை ஒதுக்கி காங்கிரஸின் கோரிக்கைகளை தி.மு.க. தலைமை மறைமுகமாக நிராகரித்திருப்பதாகக் கூறப்பட்டு வந்தது. கூட்டணிப் பேச்சுவார்த்தையில் சில திடீர் திருப்பங்கள் ஏற்பட்டிருப்பதாகத் தெரிகிறது.
எப்படியும் காங்கிரஸ் கட்சியைக் கூட்டணியிலிருந்து இழந்துவிடக் கூடாது என்று பா.ம.க.வும் கொங்கு முன்னேற்ற முன்னணியும் வலியுறுத்துவதாகவும், தேவைப்பட்டால் இதற்காகத் தங்களது இடங்களிலிருந்து ஐந்து இடங்களை விட்டுக் கொடுக்கப் பாட்டாளி மக்கள் கட்சி தயாராக இருப்பதாகவும் கூடப் பரவலாகப் பேசப்படுகிறது. கடந்த 2006 சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டது போலவே தி.மு.க. 129 இடங்களில் போட்டியிட்டாலும்கூட, பா.ம.க. ஐந்து இடங்களையும், கொங்குநாடு முன்னேற்ற கழகமும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் தலா ஒரு இடத்தையும் விட்டுக் கொடுத்தால், காங்கிரஸின் கோரிக்கையான 64 இடங்களை அளித்து தி.மு.க. கூட்டணியைத் தக்க வைக்கக்கூடும் என்று தெரிகிறது. இன்றைய சூழ்நிலையில் காங்கிரஸைக் கூட்டணியிலிருந்து இழக்க விரும்பாத முதல்வர் கருணாநிதி இதற்கு ஏற்றுக்கொண்டு விட்டதாகவும், தி.மு.க. தரப்பிலிருந்து சிலர் தெரிவித்தனர்.
பா.ம.க. உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் நிலைப்பாடு என்ன என்பதைத் தெரிந்து கொள்ள முடியவில்லை. அந்தக் கட்சிகள் அதிகாரபூர்வமாகக் கருத்துக் கூறாத நிலையில், காங்கிரஸுக்கு 64 இடங்கள் தரப்படுவதை உறுதிப்படுத்த முடியவில்லை. கூட்டணிக் கட்சிகள் தங்களது இடங்களைக் குறைத்துக் கொள்ள முன்வராவிட்டால், தி.மு.க.வேகூட 126 இடங்களில் போட்டியிட முடிவு செய்து 60 இடங்களைக் காங்கிரஸுக்கு ஒதுக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார் காங்கிரஸ் தலைமைக்கு மிகவும் நெருக்கமான மூத்த தலைவர் ஒருவர்.
இன்று முதல்வர் கருணாநிதியுடன் சோனியா காந்தி தொலைபேசியில் பேசக்கூடும் என்றும் அதைத் தொடர்ந்து கூட்டணி அறிவிப்பை தி.மு.க. வெளிடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment