Pages

Thursday 7 April 2011

ஞானாசேகரனை தினரடிக்கும் காங்கிரசு எதிர்ப்பு முன்னணி

வேலூர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரசு வேட்பாளரான ஞானசேகரனை தோற்கடிப்போம் என்று முழக்கமிட்டு தமிழக இளைஞர் எழுச்சிப் பாசறை, தமிழ் தேச மாணவர் இயக்கம், சேவ் தமிழ்ஸ் இயக்கம், சர்வதேச தமிழர் கழகம் மற்றும் சட்டக் கல்லூரி மாணவர்கள் இனைந்து காங்கிரசு எதிர்ப்பு முன்னணி என்று உருவாக்கி காங்கிரசு கட்சியை வீழ்த்துவதற்காக இரவு பகல் பாராமல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். அந்த பரப்புரை அனுபவம் குறித்து சேவ் தமிழ்ஸ் இயக்கத்தின் தோழர் பிரபாகரன் அவர்கள் நம்மிடம் கூறியது....


1991ஆம் ஆண்டு சட்டமன்ற பொதுதேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் போட்டியிட்டு, இராஜிவ்காந்தி கொலையால் விளைந்த பெரும் வெற்றியில் இருந்து துவங்கி கடந்த 20 வருடங்களாக தொடர்ந்து வேலூர் சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சி.ஞானசேகரன். இவர் சட்டமன்றத்திலும் அதற்கு வெளியேயும், ஈழத்தமிழர் விடுதலைக்கு எதிராகவும் விடுதலைப்புலிகளுக்கு எதிராகவும் தொடர்ந்து பேசி வருபவர் என்பதோடுமட்டுமல்லாமல், இலங்கை துணைதூதராக இருந்த அம்சாவுடன் நட்புறவை பேணிவந்தவர் என்பதும் குறிப்பிடதக்கது.
ஈழத்தமிழர் விடுதலை ஆதரவு அமைப்புகள் பலவும், நடைபெறப்போகும் சட்டமன்ற பொதுத்தேர்தலில், காங்கிரஸ் கட்சியை வீழ்த்தவேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்பட்டுவருகிறார்கள். அவர்களில் சில அமைப்புகள் சேர்ந்து காங்கிரஸ் எதிர்ப்பு முன்னணி என்று அமைத்து, வேலூரில் ஞானசேகரனுக்கு எதிராக பரப்புரை செய்து வருகின்றனர்.
தொடர்ந்து 20 வருடங்களாக எம்.எல்.ஏவாக இருப்பதற்கு, ஞானசேகரனுக்கு பெரிய அளவில் தொகுதியில் மக்கள் செல்வாக்கு இருக்குமென்று நினைத்தேன். ஆனால் நான்கு முறை அவர் வென்றதும் கூட்டணி கட்சியின் பலத்தினால்தான் என்று பொதுமக்களில் சிலர் சொல்கின்றனர். 1991இல் அதிமுக கூட்டணி, 1996இல் திமுக கூட்டணி, 2001இல் அதிமுகவுடன் கூட்டணி, 2006இல் திமுகவுடன், இப்போது மீண்டும் திமுகவுடன். கடந்த நான்கு முறையும் ஆட்சியைபிடித்த வெற்றிக்கூட்டணியில் இருந்திருக்கிறார். நேற்று நமது தோழர்கள் தங்கியிருக்கும் பகுதிக்கு பிரச்சாரத்திற்கு வந்தார், உடன் இருந்த சுமார் 50பேரில் குறைந்தது 40பேர் திமுக கரைவேட்டிக்காரர்கள். திமுக, அதிமுக என மாறி மாறி அவர்களது தோள்மீது ஏறிதான் காங்கிரஸ் சவாரி செய்கிறது என்று பலர் சொல்வதை நேற்று நேரில் பார்த்தோம்.
ஆனால் இந்தமுறை ஞானசேகரனின் வெற்றிக்கு மிகப்பெரும் சவாலாக இருப்பவர், காங்கிரஸிலிருந்து விலகி சுயேட்சை வேட்பாளராக களமிறங்கியிருக்கும் வாலாஜா அசேன். வேலூர் தொகுதியில் 50000க்கும் மேல் முஸ்லீம் வாக்காளர்கள் உள்ளனர். பொதுவாக திமுக/காங்கிரஸிற்கு போய் சேரும் முஸ்லிம் வாக்குகளை கனிசமான அளவிற்கு அசேன் பிரிப்பார் என்று எதிர்பார்க்கபடுகிறது. இவர் ஏற்கனவே முன்பு சுயேட்சையாக நின்று வெற்றிப் பெற்றிருக்கிறார் என்பதால், இவர் இந்த முறை வெற்றிபெறக்கூட வாய்ப்பிருப்பதாக சிலர் கூறுகின்றனர். (கூடுதல் தகவல் : வாலாஜா அசேன் முன்பு திமுக, மதிமுக அகிய கட்சிகளில் இருந்தவர். ஈழத்தமிழர் விடுதலைக்கு ஆதரவான செயல்பாடுகளில் பங்களித்திருக்கிறார் என்று சொல்கிறார்கள். மதிமுக பாஜகவோடு கூட்டணி அமைத்தபோது அதிலிருந்தி விலகி காங்கிரஸில் சேர்ந்திருக்கிறார் )

அத்துடன் பாலாற்றின் கரையில் அமைந்திருக்கும் வேலூர் மாநகரம், இன்று வரண்ட பாலைவனமாக மாறிக்கொண்டிருக்கிறது. மிகக் கடுமையான தண்ணீர் பஞ்சம். மக்கள் அனைவரும் காசு கொடுத்து குடிநீர் வாங்கிதான் பயன்படுத்துகின்றனர்.  20 வருடங்கள் எம்.எல்.ஏவாக இருக்கும் ஞானசேகரன் இந்த பிரச்சனையை தீர்க்க எந்த முயற்சியும் செய்யவில்லை. மாறாக குடிநீர் விற்பனை தொழிற்சாலைகளை நடத்திவருகிறார்.
வேலூர் சட்டமன்ற தொகுதி, மிக அடர்த்தியாக மக்கள் விசிப்பிடங்களைக் கொண்ட மாநகரப் பகுதியாகும். நம் தோழர்களின் பரப்புரை வடிவமென்பது -  வேன்போன்ற வாகனத்தில் கட்டப்பட்டிருக்கும் ஒலிபெருக்கியில் காங்கிரஸ் எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பிக்கொண்டே முன்னால் ஒரிருவர் செல்ல, பின்னாலேயே சுமார் 10 பேர் இருபுறமும் உள்ள வீடுகளுக்கு சென்று மக்களிடம் ”காங்கிரஸை தவிர யாருக்கு வேண்டுமானாலும் உங்கள் வாக்குகளைப் போடுங்கள். மறந்தும் காங்கிரஸிற்கு வாக்களித்துவிடாதீர்கள்” என்று சொல்லி துண்டறிகைகளை விநியோகித்து, அத்துடன் சுருக்கமாக நம் கருத்துகளையும் சொல்லி பரப்புரை செய்துவருகின்றனர். ஒலி பெருக்கியில் தேர்தல் பிரச்சார குரல் கேட்டவுடனே, வீட்டுக்குள் இருந்து மக்கள் வாசலுக்கு வந்துவிடுகின்றனர்.  ”காங்கிரஸை தவிர யாருக்கு வேண்டுமானாலும் உங்கள் வாக்குகளைப் போடுங்கள்” என்ற நமது கோரிக்கை அவர்களை வெகுவாக கவர்ந்திளுக்கிறது. நம்முடைய துண்டறிகைகளை மிக நிதானமாக அவர்கள் வாசிக்கிறார்கள். சென்னை மாநகரத்தின் பரபரப்பான சாலைகளில், பொதுமக்கள் கைகளில் நாம் வலுக்கட்டாயமாக துண்டறிக்கைகளை திணிக்கவேண்டும். அவர்கள் நம் கண்முன்னாலேயே அதை படிக்காமல் வீசியெறிந்துவிட்டு செல்வார்கள். ஆனால் வேலூரில் இந்த பரப்புரையின்போது பலரும் வீட்டிலிருந்து இறங்கிவந்து நம்மிடம் துண்டறிக்கைகளை வாங்கிச்சென்று படிக்கிறார்கள். மக்கள் ஆர்வமாக நம்மிடம் பேசுகிறார்கள். நாம் சொல்லும் கருத்துகளுக்கு செவிமடுத்து கேட்கிறார்கள்.
மக்கள் பலரிடம் பேசியதில், தொகுதி முழுவதுவும் ஞானசேகரன் மீது அதிருப்தி நிலவுவதாக தோன்றுகிறது. காங்கிரசை தோர்க்கடிப்போம்! ஞானசேகரனை தோர்க்கடிப்போம்! என்று நம் தோழர் முழக்கமிட்டு செல்வதை பார்க்கும் பொதுமக்கள் முகத்திலெல்லாம் மகிழ்ச்சி, மலர்ச்சி. பலரும் நம் தோழர்களுக்கு கைகொடுத்து வாழ்த்தி உற்சாகப்படுத்தினார்கள்.
காங்கிரஸ் எதிர்ப்பு பரப்புரையில் இன்னும் கொஞ்சம் கடுமையான உழைப்பினை செலுத்தினால், ஞானசேகரனுக்கு தோல்வியின் சுவை என்னவென்று அறியச்செய்யலாம்.


2 comments:

Unknown said...

ஆயிரம் நன்றிகளை முகமறியாமல் உங்களிடம் சமர்பிக்கிறேன்.

Mugundan | முகுந்தன் said...

வீரத்துடன்,உண்மையாக உழைக்கும் அந்த தோழர்களுக்கு மிக்க நன்றி.

Post a Comment