Pages

Monday, 11 April 2011

வேலூர் தொகுதியில் #defeatcongress வேட்பாளர் ஞானசேகரன்


Defeat congress என்ற வலைபூவை நடத்திவரும் திரு. சிவக்குமார் அவர்கள் வேலூரில் தனது பரப்புரை அனுபவத்தை பகிர்ந்துகொள்கிறார்.


நேற்று வேலைகளை முடித்த பிறகு மாலையில் வேலூரில் காங்கிரஸ் வேட்பாளர் ஞானசேகரனுக்கு எதிராக பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கும் சதீஷ் என்பவருக்குத் தொலைபேசினேன்  'வேலூர் பழைய பேருந்து நிலையத்தின் பின்புறம் இருக்கிறோம். மண்டி தெரு என்ற இடத்தில்' என்றார்.

பழைய பேருந்து நிலையம் நிறுத்தத்தில் இறங்கி வெளியில் வந்து கடைத்தெருவிற்குள் நடந்தேன். பிரதான வீதியிலேயே சத்தம் கேட்டது. ஒரு டாடா ஏஸ் வண்டியில் ஒலி அமைப்பு வைத்து, பக்கவாட்டில் தட்டிகளைக் கட்டி பேசிக் கொண்டிருந்தார்கள்.

சதீஷ் பிரதான பேச்சாளர். துண்டறிக்கை வினியோகிக்க நான்கைந்து பேர். துண்டறிக்கை வினியோகித்துக் கொண்டிருந்த கண்ணனிடம் அறிமுகப்படுத்திக் கொண்டேன். என் கையிலும் துண்டறிக்கை நகல்களைக் கொடுத்து வினியோகிக்கச் சொன்னார். சதீஷ் ஓய்வெடுக்கும் போது கண்ணன் ஒலிபெருக்கியைக் கையில் எடுக்கிறார். இடை இடையே 'கோஷம்' என்ற பெயரில் ஒருவர் சொல்ல, நான்கைந்து பேர் சொன்னதைத் திருப்பிச் சொல்வதைச் செய்தார்கள்.

'காங்கிரசுக்கு வாக்களிக்காதீர்கள்'
'காங்கிரசைத் தோற்கடிப்போம்'
'ஞானசேகரனைத் தோற்கடிப்போம்'
'நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும் வாக்களியுங்கள், எந்தக் கட்சிக்கு வேண்டுமானாலும் வாக்களியுங்கள், ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்காதீர்கள். ஞானசேகரனுக்கு வாக்களிக்காதீர்கள்'

'நாங்கள் யாருக்கும் ஓட்டு கேட்டு உங்களிடம் வரவில்லை. எங்களுக்கு வாக்களித்தால் பாலாறும் தேனாறும் ஓடும் என்று பொய் வாக்குறுதி அளிக்க வரவில்லை. காங்கிரசுக் கட்சிக்கு வாக்களிக்காதீர்கள் என்று கேட்கிறோம்'

'ஈழத்தில் 2 லட்சம் தமிழர்களைக் கொலை செய்த காங்கிரசுக்கு வாக்களிக்காதீர்கள்'

'கேட்டாரா, கேட்டாரா ஞானசேகரன் கேட்டாரா
- பாலாற்றுப் பிரச்சனையைக் கேட்டாரா
- குடிநீர் பிரச்சனையைக் கேட்டாரா
- அவர் கேட்டதெல்லாம் கேட்டதெல்லாம்
- தமிழர்களின் உயிரை மட்டும்

'ஞானசேகரனுக்கு வாக்களிக்காதீர்கள். காங்கிரசுக்கு வாக்களிக்காதீர்கள்.'

'தமிழக மீனவர்களைச் சுட்டுக் கொல்லும்
சிங்கள இனவெறி அரசுக்கு
ஆயுதம் கொடுக்கும் காங்கிரசுக் கட்சி,
காங்கிரசு கட்சிக்கு வாக்களிக்காதீர்கள்'

'நம்முடைய விரலால் நம் கண்ணையே குத்துவது போல, நமது வரிப்பணத்தைக் கொண்டு இலங்கை அரசுக்கு ஆயுதங்களையும், ரேடார்களையும் அளித்துத் தமிழர்களைக் கொன்று குவித்த காங்கிரசுக்கு வாக்களிக்காதீர்கள்'

கொத்துக் கொத்தாய் தமிழர்களைக்
கொன்று குவித்த
காங்கிரசுக்கு வாக்களிக்காதீர்கள்

'அன்பார்ந்த வாக்காளப் பெருமக்களே, 15வது சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. உங்களது வாக்குகளைக் கேட்க எல்லாக் கட்சியினரும் வருவார்கள். நாங்கள் கேட்பதெல்லாம், காங்கிரசுக் கட்சிக்கு வாக்களிக்காதீர்கள் என்பதுதான்.

'இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நமது தொப்புள் கொடி உறவுகளைக் கொன்று குவித்தார்கள். நாம் எதுவும் செய்ய முடியாமல் இருந்தோம். ஊடகங்களாலும், காவல்துறையாலும், உளவுத் துறையாலும் நம்மை செயலிழக்க வைத்திருந்தார்கள். இப்போது நம் கையில் ஒரு ஆயுதம் கிடைத்திருக்கிறது. வாக்குச் சீட்டு என்ற ஆயுதம். அதைப் பயன்படுத்தி காங்கிரசைத் தமிழ்நாட்டில் வேரறுப்போம்'

'ஈழத்து மக்களுக்காக நாம் வேறு எதுவும் செய்ய வேண்டாம். களத்தில் இறங்கி ஆயுதம் ஏந்திப் போராட வேண்டாம். வரலாறு நம் கையில் ஒரு வலுவான ஆயுதத்தைத் தந்திருக்கிறது. வாக்குச் சீட்டு. அதைப் பயன்படுத்தி காங்கிரசை விரட்டியடிப்போம்'


'20 ஆண்டுகளாக நான்கு முறை சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுத்து அனுப்பினோம். ஞானசேகரன் என்ன செய்தால் பாலாற்றுப் பிரச்சனையைத் தீர்த்தாரா? பாலாற்றில் தண்ணீர் வரத்தே இல்லை. அதைப்பற்றி காங்கிரசு ஆளும் ஆந்திர அரசிடம் பேசி தண்ணீர் வரச் செய்தாரா?

'மணற்கொள்ளையை எதிர்த்தாரா? இல்லை இல்லை! அதற்குத் துணை போனார்?'

'அரசியலுக்கு வரும் போது சாதாரண நடுத்தரக் குடும்பத்தனராக வந்த ஞானசேகரன் இருபது ஆண்டுகளில் இரண்டாயிரம் கோடிசொத்து சேர்த்திருக்கிறாரே! இதெல்லாம் எங்கிருந்து வந்தது? நமது வரிப்பணம்தான்'

'நாங்கள் யாருக்கும் வோட்டு கேட்டு வரவில்லை. நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும் ஓட்டு போடுங்கள். காங்கிரசுக் கட்சிக்கு மட்டும் ஓட்டு போடாதீர்கள். ஞானசேகரனுக்கு மட்டும் ஓட்டு போடாதீர்கள். உங்கள் பிரச்சனைகளை சட்டமன்றத்தில் பேசக் கூடிய யாருக்கு வேண்டுமானாலும் ஓட்டு போடுங்கள். சுயேச்சை வேட்பாளருக்கு வாக்களியுங்கள். காங்கிரசுக்கு வாக்களிக்காதீர்கள்'


இப்படி முழக்கங்களுடனும், கோஷங்களுடனும் வண்டி மக்கள் நடமாட்டம் நிறைந்த தெருக்கள் வழியே நகர்ந்தது. அகலமான சாலையில் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் வண்டியை நிறுத்தக் கூடிய இடங்களில் 10 நிமிடங்கள் நின்று கோஷம் எழுப்பினார்கள்.

வண்டியின் இரு பக்கங்களிலும் ஈழப்படுகொலையின் நிழல்படங்களை ஃபிளெக்சு தட்டிகளாகக் கட்டியிருந்தார்கள். துண்டறிக்கையில்,

=============
தமிழக வாக்காள பெருமக்களே!
மக்கள் எதிரி காங்கிரசுக்கா உங்கள் வாக்கு?

>> 2 லட்சத்திற்கும் மேற்பட்ட ஈழத்தமிழர்கள் படுகொலை. இந்தியா - இலங்கை கூட்டு சதி. கொலைவெறி காங்கிரசுக்கா உங்கள் வாக்கு?

>> 3 லட்சத்திற்கும் மேற்பட்ட ஈழத்தமிழர்கள் முள்வேலி முகாம்களில். அடிப்படை மனிதாபிமான உதவிகளை கூடச் செய்யத் தடுக்கும் காங்கிரசு அரசு. இவர்களுக்கா உங்கள் வாக்கு?

>> 600க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் படுகொலை. சிங்கள படைக்கு ஆயுதம் கொடுத்து காட்டிக் கொடுக்கும் காங்கிரசு அரசு. இவர்களுக்கா உங்கள் வாக்கு?

>> தமிழர்களின் பாரம்பரிய நிலமான கச்சத்தீவை இலங்கைக்கு தமிழர்கள் அனுமதி இல்லாமல் தாரை வார்த்த காங்கிரசுக்கா உங்கள் வாக்கு?

>> 70,000க்கும் மேற்பட்ட காஷ்மீர் மக்களை கொன்று குவித்த காங்கிரசுக்கா உங்கள் வாக்கு?

>> பாபர் மசூதியை இடித்த சங்கப் பரிவாரக் கும்பலின் கள்ளக் கூட்டாளி காங்கிரசுக்கா உங்கள் வாக்கு?

>> காங்கிரசுக் கொள்கை காந்தியம்(?), காந்தியின் கொள்கை மதுவிலக்கு. மதுவில் தள்ளாடுது வேலூர். தமிழர்களே! என்ன செய்வதாய் உத்தேசம்?

>> ஆரம்பப் பள்ளியில் ஏழைக் குழந்தைகள், ஆசிரியர்கள் இல்லை. அடிப்படை வசதிகள் இல்லை. மறுபக்கம் 1 லட்சத்து 76 ஆயிரம் கோடு ஸ்பெக்ட்ரம் ஊழல். கூட்டுக்களவாணி காங்கிரசு கும்பலுக்கா உங்கள் வாக்கு?

>> 60 ஆயிரம் கோடி காமன்வெல்த் ஊழல். ஊழலின் ஊற்று காங்கிரசுக்கா உங்கள் வாக்கு?

தொடர்புக்கு : காங்கிரசு எதிர்ப்பு முன்னணி  - தமிழ்நாடு
9444204740/9042274271

குறிப்பு: இந்த முன்னணியில் இணைந்து வேலை செய்ய ஆர்வமுள்ள தமிழ் 
இளைஞர்கள் மாணவர்கள் தொடர்பு கொள்ள வேண்டுகிறோம். 

ஊர் கூடி தேர் இழுப்போம் தமிழர்களே.
=============

உரிய அனுமதிச் சீட்டு இல்லாமல் வாகனம் எதையும் பிரச்சாரத்துக்குப் பயன்படுத்தக் கூடாது. சுயேச்சை வேட்பாளர் ஒருவரின் அனுமதிச் சீட்டைப் பயன்படுத்தி வாகனத்தை ஏற்பாடு செய்திருந்தார்கள். வேலூரைச் சேர்ந்த ஒரு இளைஞர் வண்டி ஓட்டுனர். பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள  தன்னார்வலர்கள் சென்னையிலிருந்து வந்திருந்தார்கள். உள்ளூர் பணிகளை ஒருங்கிணைக்க இரண்டு பேர்.

அகலமான கடை வீதியின் (மண்டி வீதி) இரண்டு பக்கங்களிலும் இருக்கும் கடைகளில் துண்டறிக்கையைக் கொடுக்க ஆரம்பித்தேன். தெருவில் ஒலிபெருக்கியில் பேசுவதைக் கேட்டதும், எட்டிப் பார்க்கிறார்கள். என்னவென்று ஒரு கேள்வியுடன் நிற்கிறார்கள். அப்போது துண்டறிக்கையைக் கொடுத்ததும் ஆர்வமாக வாங்கிக் கொள்கிறார்கள்.

'நீங்க இந்த மாதிரி பிரச்சாரம் செய்தா தொந்தரவு எதுவும் வராதா? எதிர்க் கட்சி ஆளுங்க உங்களை மிரட்ட மாட்டாங்களா'
'நம்ம கருத்துக்களைச் சொல்ல ஜனநாயகத்தில் உரிமை இருக்கிறது. அதைத்தானே செய்கிறோம்'

'நீங்க எந்தக் கூட்டணி? எந்தக் கட்சி?'
'எந்தக் கட்சியும் இல்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த படுகொலைகளால் மனம் நொந்து கோபத்தில் இருப்பவர்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த களம் இறங்கியிருக்கிறார்கள். காங்கிரசுக்கு வாக்களிக்காதீர்கள் என்று கேட்டுக் கொள்ள பிரச்சாரம் செய்கிறீர்கள்'

'மொதல்ல கை கொடுங்க! நல்ல உருப்படியான பணியைச் செய்கிறீர்கள்.'
'நீங்களும் சேர்ந்து கொள்ளலாம். உங்க நண்பர்கள் உறவினர்களிடம் செய்தியைக் கொண்டு செல்லுங்கள்'
'ஏற்கனவே செய்துகிட்டுத்தான் இருக்கிறோம்'

'ஏய், இது நம்மக் கட்சி, ரெட்ட இல'
'நீங்கள் எந்தக் கட்சிக்கு வேண்டுமானாலும் வாக்களியுங்கள், எந்தச் சின்னத்துக்கு வேண்டுமானாலும் வாக்களியுங்கள், காங்கிரசுக்கு மட்டும் வாக்களிக்காதீர்கள் என்று கேட்கத்தான் நாங்கள் வருகிறோம்'

நூற்றுக்கணக்கான துண்டறிக்கைகளை வினியோகித்தோம். சாலையின் இரண்டு புறம் இருக்கும் கடைகள், நடந்து செல்பவர்கள், கடந்து செல்லும் ஆட்டோக்களின் ஓட்டுனர்கள் என்று கொடுத்தோம். எந்த இடத்திலுமே கொடுக்கப்பட்ட துண்டறிக்கை தரையில் வீசப்பட்டதைப் பார்க்கவில்லை. வாங்கியவர்கள் எல்லாம் கவனமாகப் படித்துப் பார்த்தார்கள்.

இந்தப் பகுதியில், சிஎம்சியில் சிகிச்சைக்காக வந்திருக்கும் வெளிமாநில மக்களும் காணப்படுவார்கள்.

'தமிழ் நஹீ மாலூம். யே கோன்சா பார்ட்டி கா?'
'கிசீ பார்ட்டி கா நஹீ. காங்கிரஸ் பார்ட்டி கோ வோட் ந தேனே கா'

மிகவும் மக்கள் நெரிசல் நிறைந்த பகுதி. ஆயிரக்கணக்கான மக்கள் ஒரு மணி நேரத்தில் கடந்து செல்வார்கள். வண்டி மெதுவாக நகர்ந்து பக்கவாட்டுத் தெருக்கள் பக்கம் வந்தது. சாட் வண்டி ஒன்றின் முன்பு சாப்பிட்டுக் கொண்டிருந்த ஆட்டோ ஓட்டுனர்களிடம் துண்டறிக்கைகளைக் கொடுத்தேன்.

'காங்கிரசு தமிழ்நாட்டில எதுக்கு? திமுக 25 வருஷம் முன்பாகவே காங்கிரசை விரட்டி அடிக்க வைச்சாங்க. இந்தக் கருணாநிதிதான் கூட்டணி வச்சு உயிர் கொடுத்திருக்கிறாரு'
'ஆமா 1967ல் காங்கிரசுக்குத் தமிழ்நாட்டில் சங்கு ஊதியாச்சு. ஆனால் அதற்குப் பிறகு, கருணாநிதியும் எம்ஜிஆரும் மாறி மாறி காங்கிரசுடன் கூட்டணி வைத்து தாங்கிப் பிடித்திருக்கிறார்கள்'

பக்கவாட்டுத் தெருக்கள் குறுகலானவை. வண்டி போகும் பின்னால் வரும் வாகனங்கள் நெரிசலில் சிக்கிக் கொண்டன. அதனால் நிற்கவே செய்யாமல், நகர்ந்து கொண்டே போனோம்.

எதிரில் வருபவர்கள், என்ன சத்தம் என்று பார்த்துக் கொண்டே நிற்பவர்கள் கையில் 'ஐயா வணக்கம்', 'சார்' என்று சொல்லி துண்டறிக்கையை கொடுத்தோம். கொஞ்சம் வட இந்திய முகமாக தெரிந்தால் கொடுக்கவில்லை.

நான்கைந்து தெருக்களைத் தாண்டி சிஎம்சி பிரதான நுழைவாயில் இருக்கும் சாலைக்கு வந்தது. இங்கு பேருந்துகளும் வாகனங்களும் நெருக்கமாகப் போகும் இடம். சாலையின் எதிர் பக்கத்துக்குப் போய் துண்டறிக்கை கொடுக்க வாய்ப்பில்லை. மெதுவாக நகர்ந்து சாலை சந்திப்பைக் கடந்து கோட்டையின் பக்கவாட்டில் வண்டியை நிறுத்தினோம்.

'நீங்க சத்தம் போடுங்கடா பாடுங்களா! ஒன்னும் கிழிக்க முடியாது' என்று ஒருத்தன் திட்டுறான். என்று சொல்லியபடி ஒருவர் தாமதமாக வந்தார். 'திட்டுறவங்க திட்டட்டும். நாம நம்ம கோஷத்தைப் போடுவோம்'

அங்கிருந்து வேலூர் பைபாஸ் வந்தோம். துண்டறிக்கை கையிருப்பு தீர்ந்து விட்டிருந்தது. 40-50 மட்டுமே மிஞ்சியிருந்தது. 'பர்வீன் டிராவல்ஸ் எங்க இருக்கு? அதில் அனுப்பியிருக்காங்களாம். போய் வாங்கிக் கொள்ளலாம்' என்று விசாரித்தார்கள்.

இரண்டு பேர் சேலத்திலிருந்து வந்திருந்தார்கள். எல்லோரும் நண்பர் ஒருவரின் வீட்டில் கன்னிகாபுரத்தில் தங்கியிருக்கிறார்கள்.

'காலையில் வண்டியை சீஸ் பண்ணி ஸ்டேஷனுக்குக் கொண்டு போயிட்டான். அனுமதிச் சீட்டின் ஒரிஜினல் வண்டியில் இருக்கணுமாம். நம்மிடம் ஜெராக்ஸ் காப்பிதான் இருந்தது.'

'வேறு தொகுதிகளிலும் இது போன்று பிரச்சாரம் செய்ய ஏதாவது சுயேச்சை வேட்பாளரின் அனுமதிச் சீட்டுகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டியதுதான்'

மிகவும் தெளிவாக, தேவையில்லாத விஷயங்களை இழுக்காமல் தமிழர் விரோதம் என்ற ஒரே முழக்கத்தை வைத்து பிரச்சாரத்தை வடிவமைத்திருந்தார்கள். 2ம் தேதி ஆரம்பித்தார்களாம். 11ம் தேதி வரை பிரச்சாரம் தொடரும். இன்னும் 6 நாட்கள்.

'தமிழ் அமைப்புகள் எல்லாம் என்ன செய்கிறார்கள்'
'என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறார்கள்'

புறநகர்ச்சாலையில் நகர்ந்தோம். துண்டறிக்கைகளை மக்கள் கூடும் இடங்களில் வினியோகிக்கலாம் என்று சேர்த்து வைத்துக் கொண்டோம். புதிய பேருந்து நிலையத்திலிருந்து வரும் போது சிஎம்சி நோக்கிப் போகும் சாலையின் முனையில் நிறுத்தினார்கள். அது ஒரு பேருந்து நிறுத்தம். இங்கு வினியோகிக்கலாம்.

பேருந்துக்குக் காத்திருப்பவர்கள், கடந்து போகிறவர்கள், வந்து நிற்கும் பேருந்தில் இருப்பவர்கள் என்று வினியோகித்தோம். நிற்கும் பேருந்தின் முன் பகுதி சன்னல்களில் ஒருத்தரும், பின்பகுதி சன்னல் வழியாக இன்னொருவரும் துண்டறிக்கைகளைக் கொடுத்தோம். வண்டியின் ஒலிபெருக்கி மூலமாக பேச்சு கேட்கும் போது துண்டறிக்கை கொடுப்பது எளிதாக இருந்தது.

எட்டரை மணி வாக்கில் முடித்துக் கொண்டு புறப்பட்டார்கள்.

No comments:

Post a Comment