Pages

Tuesday 5 April 2011

‘ராசாவுக்கு ராசா நான்டா...’’ பிரதமர் துறையில் செயற்கைக்கோள் ஊழல்!


‘‘ராசாவுக்கு ராசா நான்டா...’’
பிரதமர் துறையில் செயற்கைக்கோள் ஊழல்!

மத்திய அமைச்சராக இருக்கும் ஆ.ராசாவின் துறையில் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய்க்கு இழப்பு நடந்திருக்கிறதென்றால்... பிரதமர் என்ன பார்த்துக்கொண்டிருப்பாரா? என்ன இருந்தாலும் கேபினட்டின் தலைவரல்லவா? அதனால்தான் அவரது நேரடிக் கண்காணிப்பில் உள்ள இந்திய விண்வெளித்துறையின் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் 2ஜி மோசடியை விட அதிகமாகவே, 2 லட்சம் கோடி ரூபாய் இழப்புக்கு ஊழல் நடந்திருக்கிறது. ராசா 2ஜி என்றால் பிரதமர் 4ஜி....’’

இப்படித்தான் பேசிக்கொள்கிறார்கள் டெல்லி பத்திரிகையாளர்கள். மேலும், மன்மோகன்ஜி என்றே இதுவரை குறிப்பிட்டு வந்த பிரதமரை இப்போது மன்மோகன்4ஜி என்றும் நாசூக்காக குறிப்பிடுகிறார்கள் அவர்கள்.

2ஜி ஸ்பெக்ட்ரம் அதிர்ச்சியும் இழப்பும் தாங்காமல் இந்திய பாமரனும் பொருளாதாரமும் திகைத்துக் கொண்டிருக்கும்போது... போபர்ஸ் பீரங்கி பேர ஊழலுக்குப் பிறகு பிரதமர் அலுவலகம் மீது நேரடியாக சுமத்தப்படும் ஊழல் குற்றச்சாட்டு இது என்பதால் காங்கிரஸ் கடும் அதிர்ச்சி அடைந்திருக்கிறது.

எதிர்க்கட்சிகளோ, ‘‘நாட்டில் இன்னும் என்னென்ன வகையில் எல்லாம் கொள்ளையடிக்கப் போகிறீர்கள்? உடனடியாக இதுகுறித்து விசாரணை நடத்தவேண்டும்’’ என கண்டனமும் கோரிக்கையும் எழுப்பி வருகின்றன.

இதென்ன 4ஜி ஊழல்?

பிரதமரின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) செயல்பட்டு வருகிறது. இதன் வணிகப் பிரிவுக்கு ஆன்ட்ரிக்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் என்று பெயர். 2ஜி என்றால் செல்போன், இன்டர்நெட் சேவை, 3ஜி என்றால் வீடியோ சேவை, 4 ஜி என்றால் டவரே இல்லாமல் இந்த எல்லா தகவல் தொடர்புகளையும் செயற்கைக்கோள்கள் மூலம் பெறும் வசதி கொண்டது.

இந்தியா ஏவும் செயற்கைக்கோள்கள் மூலம் கிடைக்கும் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றைகளை இதுவரைக்கும் பி.எஸ்.என்.எல். மற்றும் எம்.டி.என்.எல். ஆகிய அரசாங்க தகவல் தொடர்பு நிறுவனங்களே பெற்றுவந்தன. 2ஜி ஸ்பெக்ட்ரத்தைவிட இந்த 4ஜி ஸ்பெக்ட்ரத்தின் மதிப்பு பல மடங்கு உயர்ந்தது. இந்த ஸ்பெக்ட்ரத்தை எஸ் பாண்ட் என்று அழைப்பார்கள்.

இந்நிலையில், 2005&ல் இஸ்ரோ ஏவிய செயற்கைக் கோள்களின் மூலம் கிடைக்கும் ஸ்பெக்ட்ரத்தில் 70 மெகா ஹெர்ட்ஸ் அளவு எஸ் பாண்ட் அலைக்கற்றையை அரசாங்க நிறுவனம் தவிர்த்து முதல் முறையாக பெங்களூருவைச் சேர்ந்த தேவாஸ் மல்டிமீடியா பிரைவேட் லிமிடெட் என்ற தனியார் நிறுவனத்துக்கு 20 வருடங்களுக்கு கொடுப்பதாக ஒப்பந்தம் போட்டுக்கொண்டது இஸ்ரோ ஆன்ட்ரிக்ஸ். இந்த விவகாரத்தை ஆய்வு செய்தபோதுதான் மத்திய கணக்குத் தணிக்கைத் துறைக்கு அதிர்ச்சி தாக்கியது. அதாவது சில லட்சம் கோடி ரூபாய்கள் மதிப்புள்ள இந்த எஸ் பாண்ட் அலைக்கற்றையை தேவாஸ் கம்பெனிக்கு ஜஸ்ட் ஆயிரம் கோடி ரூபாய்க்கு கொடுத்திருக்கிறது இஸ்ரோ.

இதில் இன்னொரு வேதனையான வேடிக்கை என்னவென்றால் அந்த தேவாஸ் கம்பெனி யாருடையது தெரியுமா? இஸ்ரோவின் முன்னாள் அறிவியல் செயலாளராக இருந்த சந்திரசேகருடையதுதான் தேவாஸ். ஆக, தான் பணிபுரிந்த இஸ்ரோவில் தனக்குள்ள செல்வாக்கை வைத்து பன்மடங்கு மதிப்பு கொண்ட எஸ் பாண்ட் ஸ்பெக்ட்ரத்தை அடிமாட்டு விலைக்கு வாங்கியிருக்கிறார் சந்திரசேகர். இதை பல வெளிநாட்டு தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கும் அவர் கொடுத்திருக்கிறார். இதனால் இந்திய அரசுக்கு 2 லட்சம் கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்தியிருக்கிறது இந்த ஒப்பந்தம் என்கிறது மத்திய கணக்குத் தணிக்கைத் துறை.

மேலும், ‘‘இஸ்ரோவை நேரடியாக கண்காணித்துவரும் பிரதமர் அலுவலகம் மற்றும் மத்திய அமைச்சரவை, மத்திய அரசின் விண்வெளி கமிட்டி ஆகியவற்றுக்கு இதெல்லாம் தெரியவே இல்லையா? தெரிந்தும் கண்டுகொள்ளவில்லையா? கோடானு கோடி இந்திய மக்களின் வரிப்பணத்தில் ஏவப்படும் செயற்கைக் கோள்களின் பன்மடங்கு பலன்களை தனி நபர்களுக்கு தாரை வார்க்கப்பட்டுள்ளது’’ என கடுமையாக குறை கூறியுள்ளது மத்திய கணக்குத் தணிக்கைத் துறை.

பிப்ரவரி 7-&ம் தேதி வெளியான இந்த ஊழல் தகவல் நாடு முழுவதையும் உலுக்க... செவ்வாய்க் கிழமை இஸ்ரோவின் இப்போதைய சேர்மன் கே.ராதாகிருஷ்ணன், முன்னாள் தலைவர் கஸ்தூரிரங்கன் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். ‘‘ஜி சாட் 6, ஜி சாட் 6 ஏ ஆகிய இரு செயற்கைக்கோள்களின் 90 சதவீத பயன்பாட்டை தேவாஸ் மல்டிமீடியாவுக்கு கொடுப்பது என்று ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் இந்தியாவின் கல்வி, சுகாதாரப் பணிகள், உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளுக்கு ஸ்பெக்ட்ரத்தின் தேவை அதிகமாக உள்ளதால் தேவாஸ் நிறுவனத்தோடு போடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்வது என்று 2010 ஜூலை மாதமே முடிவெடுத்துவிட்டோம். மேலும், தேவாஸ் மல்டிமீடியாவோடு செய்துகொண்ட இந்த ஒப்பந்தம் பற்றி பிரதம மந்திரிக்கு தெரிவிக்கவில்லை என்பது உண்மைதான். இதுபற்றி உள் விசாரணை நடந்துகொண்டிருக்கிறது’’ என ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.

பிரதமர் அலுவலகமும், ‘இதனால் அரசுக்கு பண இழப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை’ என்று சொல்கிறது.

ஆக, இந்திய மக்களுக்கான செயற்கைக்கோளின் அலைவரிசை பயன்பாட்டை... பிரதமருக்குத் தெரியாமலேயே ஒரு தனியார் நிறுவனத்துக்கு, அதுவும் நஷ்டத்தில் விற்றிருக்கிறார்கள்.

எங்கும் ஊழல் எதிலும் ஊழல் என்றாகிவிட்ட காங்கிரஸ் ஆட்சியில்... இனி நாட்டில் மழை பெய்யாது என்றே தோன்றுகிறது. அப்படி பெய்தாலும் அது மழையாக இருக்காது. வானில் இருக்கும் நமது செயற்கைக்கோள்கள்... ‘எங்களை வச்சும் ஊழல் பண்ணிட்டீங்களாடா?’ என்று கேட்டபடியே காரித் துப்பும் எச்சிலாகத்தான் இருக்கும்!

உமேஷ்

நன்றி 
தமிழக அரசியல்

No comments:

Post a Comment