Pages

Monday 28 February 2011

திமுக கூட்டணியைவிட்டு எவ்பொழுதும் விலக மாட்டோம் : திருமாவளவன் உறுதி

என்னதான் தொகுதிப் பங்கீ்ட்டில் நெருக்கடி இருந்தாலும் திமுக கூட்டணியை விட்டு விலக மாட்டோம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது,

எங்கள் கட்சியில் இருக்கும் பொரும்பாலான தொண்டர்கள் கூலித் தொழிலாளர்கள். நாங்கள் திமுக கூட்டணியில் இருக்கிறோம். தொகுதிப் பங்கீட்டில் நெருக்கடி இருக்கலாம். ஆனால் அதற்காகவெல்லாம் திமுக கூட்டணியை விட்டு விலகமாட்டோம். இந்த விஷயத்தில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். நாங்கள் அதிமுக கூட்டணியில் சேரக்கூடும் என்று வந்த செய்திகள் ஆதாரம் இல்லாதவை. அதிக தொகுதிகள் கேட்டு பேரம் பேச வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. நாங்கள் கூட்டணி தலைமை மீது விசுவாசம் உள்ளவர்கள்.

எங்கள் விசுவாசத்திற்கு பரிசு கிடைக்கும் என்று நம்புகிறோம். எங்கள் உணர்வுகள் பற்றி திமுகவுக்கு தெரியும். அவற்றை நிறைவேற்றும் என்ற நம்பிக்கை உள்ளது. அவர்களை தேவையில்லாமல் வற்புறுத்த வேண்டிய அவசியம் ஒன்றும் இல்லை. திமுகவுக்கு எங்கள் பலமும், தகுதியும் நன்றாகத் தெரியும். அதற்கு தகுந்தாற்போல தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்பதும் தெரியும். அவ்வாறு தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம். நாங்கள் எப்பொழுதும் திமுகவுடன் இருக்கவே விரும்புகிறோம். ஆகையால் பேச்சுவார்த்தையின்போது நிபந்தனைகள் எதுவும் விதிக்கவில்லை. காங்கிரசுடன் தொகுதி பங்கீடு முடிந்ததுவுடன் எங்களுக்கு தொகுதிகள் ஒதுக்கப்படும். அதற்கு முன்பு அதுபற்றி எதுவும் பேசும் எண்ணம் இல்லை என்றார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏ. ரவிக்குமார் கூறும்போது, வட மாவட்டங்களில் விடுதலை சிறுத்தைகளும், பாட்டாளி மக்கள் கட்சியும் சேர்ந்து இருப்பது எங்கள் கூட்டணிக்கு அதிக பலம் சேர்த்துள்ளது என்றார்.

தமிழக சட்டசபை தேர்தல் தேதி நாளை அறிவிப்பு?

தமிழக சட்டசபையின் பதவி காலம் மே மாதம் 11ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால் அந்தத் தேதிக்கு முன்பே தமிழ்நாட்டில் தேர்தல் முடிவடைந்து, புதிய அரசு பதவி ஏற்க வேண்டும்.

இந் நிலையில் தமிழக சட்டசபை தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்து வருகின்றன. தமிழகத்துடன் சேர்த்து புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களின் சட்டசபைகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது.

இந்த மாநிலங்களில் தேர்தல் தேதி குறித்து முடிவு செய்ய தேர்தல் ஆணையத்தின் இறுதிகட்டக் ஆலோசனை கூட்டம் நாளை டெல்லியி்ல் நடைபெறுகிறது.

தலைமை தேர்தல் அதிகாரி குரேசி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் 5 மாநிலங்களின் தேர்தல் தேதிகள், எத்தனை கட்டமாக தேர்தல் நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யப்படும். நாளை காலை முதல் பகல் வரை இக் கூட்டம் நடைபெறும். இதனால் நாளை மாலை தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களின் தேர்தல் தேதி பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் ஒரே கட்டமாகவே தேர்தல் நடைபெறும் என்று தெரிகிறது. ஏப்ரல் கடைசி வாரம் அல்லது மே மாதம் முதல் வாரம் தமிழக சட்டசபை தேர்தல் நடக்கும் என்று தெரிகிறது.

Sunday 27 February 2011

தேர்தல் மறு, போராட்டம் எடு! - தோழர் தியாகு


(2011 தேர்தல் ஒரு பார்வை என்ற தலைப்பில் தமிழர் சமூக, அரசியல், பண்பாட்டு பொருளாதார ஆய்வகம் சென்னையில் (18-09-2009) நடத்திய ஆய்வரங்கத்தில் “தேர்தலில் பங்கு பெறாத இயக்கங்களும் மக்கள் பணியிலே அவர்களது தார்மீகக் கடமையும் - தேர்தல் புறக்கணிப்பு சரியா? தவறா? மாற்று வழி என்ன?” எனும் பொருள் குறித்துத் ததேவிஇ பொதுச் செயலாளர் தோழர் தியாகு ஆற்றிய உரை)
இந்த நிகழ்வில் கலந்து கொள்கிற அமைப்புச் சார்ந்த, அமைப்புச் சாராத அறிஞர்கள், ஆய்வாளர்கள் இவர்கள் அனைவருமே தேர்தலில் பங்குபெறாத இயக்கங்கள் என்ற வரையறைக்குள் வருவார்களா? என்பது எனக்குத் தெரியாது. ஏனென்றால் பங்கு பெறுவதை வலியுறுத்தி வாதிடுவதற்கும் ஒரு வாய்ப்பிருக்கிறது. விவாதத்தில் அது ஒரு தரப்பாக இருக்க முடியும்.
நான் சார்ந்திருக்கிற தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் தேர்தலில் போட்டியிடுவதில்லை, நாங்கள் வாக்களிப்பதும் இல்லை என்பது ஒரு பொதுவான நிலைப்பாடு. எப்படி 'கடவுளை மற, மனிதனை நினை' என்பதில் கடவுளை மறப்பதைக் காட்டிலும் மனிதனை நினைப்பது முக்கியமானதோ, அதேபோல், 'தேர்தல் மறு, போராட்டம் எடு' என்பதில் தேர்தலில் பங்கு பெறாமல் இருப்பதைக் காட்டிலும் மக்கள் போராட்டங்களை முன்னெடுப்பது முக்கியமானது. அந்தப் போராட்டங்களுக்கு எது துணையாக இருக்கும்? என்பதுதான் கேள்வி. தேர்தல் பங்கேற்பு பயன்படுமா? புறக்கணிப்பு பயன்படுமா?
எது முதன்மை வழி
சமூக மாற்றம், விடுதலை என்பதில் நம்பிக்கை வைத்திருக்கிற எந்த ஒர் இயக்கத்திற்கும் தேர்தல் என்பதே முதன்மை வழியாக இருக்க முடியாது. அனைத்துக்கும் அடிப்படை என்பதாகவும் இருக்க முடியாது. இதுதான் நம்மையும் பதவி அரசியல் கட்சிகளையும் வேறுபடுத்துகிற கோடு. அவர்களும் கூட போராடுகிறார்கள், மக்கள் பிரச்சனைகளுக்காகப் போராடுகிறார்கள், மக்களைத் திரட்டிப் போராடுகிறார்கள். ஆனால் அவர்களின் அந்தப் போராட்டங்கள் தேர்தலைக் குறியாக வைத்து அதற்கேற்ப நடத்தப்படுகின்றன.
அவர்களுக்குப் பதவி அரசியலுக்கான ஒரு துணைக் கருவியே போராட்டங்கள். நமக்குத் தேர்தல் புறக்கணிப்பாக இருந்தாலும் சரி, பங்கேற்பாக இருந்தாலும் சரி, அது போராட்டங்களுக்கான ஒரு துணைக் கருவி, அவ்வளவுதான். தேர்தலே முதன்மை வழியல்ல. எனவே, பங்கேற்பு, புறக்கணிப்பு என்பவற்றை ஏதோ இரண்டில் ஒன்றுதான் முதன்மை என்று நாம் பார்க்க வேண்டியதில்லை. புறக்கணிக்கிறவர்களும் அதை முதன்மை யாகக் கருதவில்லை. பங்கேற்கிறவர்களும் அதை முதன்மையாகக் கருத மாட்டார்கள் என்று நான் நம்புகிறேன். நம் வழி போராட்ட வழிதான், வெகு மக்கள் போராட்டங்கள்தான்.
லெனின் அறிவுரை
அடுத்தாற்போல, தேர்தல் பங்கேற்பு, புறக்கணிப்பு என்பதை எந்தக் கோணத்திலிருந்து அணுகுவது? மார்க்சியத்தில் நம்பிக்கை கொண்டிருக்கிறவர்கள் தேர்தல் புறக்கணிப்பு, பங்கேற்பு குறித்து “இடதுசாரி கம்ய+னிசம் ஓர் இளம் பிராயக் கோளாறு” என்ற லெனின் நூலைத்தான் அடிப்படையாகக் கொண்டு விவாதிப்பார்கள்.
தேர்தல் புறக்கணிப்பை முன்னிறுத்திய இயக்கங்களுக்குத் தேர்தல் பங்கேற்பை ஒரு வழிமுறையாக வலியுறுத்தி லெனின் அதிலே பல வாதங்களை முன் வைத்திருக்கிறார். பிரித்தானிய இடதுசாரிகள், வேறு தீவிர இடதுசாரிகள்… இவர்களுக்கெல்லாம் அவர் எடுத்துரைக்கிறார்: தேர்தலில் நீங்கள் பங்கேற்க வேண்டும், அல்லது ஒரு கட்சியை ஆதரிக்க வேண்டும் என்கிறார். உருசியப் புரட்சியின் பட்டறிவையும் எடுத்துக்காட்டுவார்.
போல்சுவிக்குகள் முதலில் டூமா என்னும் உருசிய நாடாளுமன்றத்துக்கான தேர்தலைப் புறக்கணிக்கிறார்கள். பிறகு அப்படிப் புறக்கணித்தது சரியில்லை என்று தன்னாய்வு செய்து கொள்கிறார்கள். மீண்டும் தேர்தல் நடக்கிற பொழுது அதிலே பங்கேற்கிறார்கள்.
உருசியமும் நேபாளமும்
நம் காலத்திலேயே நேபாளத்தில் மாவோயிஸ்டுகள் முதலில் நாடாளுமன்றம் சென்று, பிறகு மக்கள் - போர் என்கிற ஆயுதப் போராட்ட வழியைப் பத்தாண்டு காலம் கையாண்டு, அதன் வழியாக சனநாய கத்துக்கான மக்கள் எழுச்சியைத் தோற்றுவித்து, அந்த எழுச்சியின் உச்ச கட்டமாக அரசமைப்புப் பேரவைக்கான தேர்தலை நடத்துமாறு நிர்பந்தித்து, அந்தத் தேர்தலில் போட்டியிட்டு வென்றார்கள். பார்க்கப் போனால், நிலவும் அமைப்பைப் பாதுகாக்க விரும்பும் கட்சிகள்தாம் தேர்தலை நடத்த மறுத்தன. அரசமைப்புப் பேரவையைக் கூட்ட மறுத்தன. இப்போதும் கூட அங்குப் புதிய அரசமைப்புக்கான முட்டுக்கட்டை தொடர்வது நமக்குத் தெரியும்.
இரட்டை வழிமுறைகளைக் கையாள் வதற்கு முன்னுதாரணமாக ஒர் அரசியல் அறிஞர் நேபாள நிகழ்வுகளை எடுத்துக்காட்டிப் பேசும் போது நான் அவருக்கு நினைவுபடுத்தினேன் - உருசியாவிலேயே அதுதான் நடந்தது.
உருசியப் புரட்சி நெருங்கி வருகிற பொழுது, இன்னும் ஒருசில நாள் மட்டும் மீதமிருக்கிற பொழுது உருசியாவில் அரசமைப்புப் பேரவைக்கான தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் போல்சுவிக்குகள் பங்கேற்றார்கள். பங்கேற்றது மட்டுமல்ல, அந்தத் தேர்தலி;ல் தொழிலாளி வர்க்கம் வாக்களிக்கிற தொகுதிகளில் பெறப்பட்ட வாக்குகளைச் சான்றாகக் காட்டி லெனின் “சோவியத்துகளுக்கே அனைத்து அதிகாரமும்” என்ற முழக்கத்தைச் செயல்படுத்துவதற்கு உரிய தருணம் வந்துவிட்டது என்று வாதிட்டார். அரசமைப்புப் பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு அதில் கிடைத்த வாக்குகளின் அடிப்படையில், 'இனிமேல் காத்திருக்க வேண்டாம், முழுமையாகப் புரட்சிகர அதிகாரத்தைக் கைப்பற்றும் நிலை வந்துவி;ட்டது' என்று வாதிட்டார்.
எனவே இன்றைய நேபாளப் புரட்சியில் மட்டுமல்ல, அன்றைய உருசியப் புரட்சியிலேயே அப்படி ஒரு படிப்பினை இருக்கிறது. இந்தப் படிப்பினைகளின் அடிப்படையில் சிலநேரம் பங்கேற்பது, சிலநேரம் புறக்கணிப்பது என்ற ஒரு நிலைப்பாட்டை மார்க்சிய லெனினியக் கோணத்தில் வலியுறுத்துவார்கள்.
சீனப் புரட்சியில் மாவோ தேர்தலில் பங்கேற்கவில்லை, நாடாளுமன்றத்துக்குச் செல்லவில்லை என்று சொல்கிற பொழுது, இதற்கு மாவோவே பதிலளித்தார்: தேர்தலே நடக்கவில்லை, நாங்கள் எப்படிப் பங்கேற்பது? இங்கு ஒரு நாடாளுமன்றமே இல்லாதபோது நாங்கள் எப்படி அதில் இடம் பெறுவது? என்று எதிர்க்கேள்வி போடுவார். இல்லாத இடத்தில் அதுபற்றிக் கேள்வியே இல்லை.
சமரன், மாஸ்லைன் கட்டுரைகளுக்கு மறுப்பு
நான் சிறையில் இருந்த காலத்தில் தேர்தல் புறக்கணிப்பை வலியுறுத்தி 'சமரன்' ஏட்டில் தோழர் ஏ.எம்.கோதண்டராமன் எழுதிய இரண்டு கட்டுரைகள் வெளிவந்தன. இந்தக் கட்டுரைகளில் அவர் லெனினை மேற்கோள்காட்டி புரட்சிகரச் சூழலில் புறக்கணிப்பு, பிற்போக்கான சூழலில் பங்கெடுப்பு என்று விதி வகுத்து எழுதியிருந்தார். அதை மறுத்து நான் அவருக்குக் கடிதம் எழுதினேன். அப்படியெல்லாம் ஒரு விதி கிடையாது. போராட்டத்தி;ற்கு எது துணை செய்யும் என்பதுதான் அடிப்படை. லெனினுடைய மேற்கோளைத் தவறாகப் புரிந்து கொண்டு எழுதியிருக்கிறீர்கள் என்று.
அதே போல “மாஸ்லைன்” ஏட்டில் ஒரு கட்டுரை வந்தது. உருசியாவில் பங்கேற்பு, புறக்கணிப்பு பற்றி. சமரன், மாஸ்லைன் கட்டுரைகளை மறுத்து நான் எழுதிய கடிதங்களை ஒரு சிறு நூலாக நான் சிறையில் இருந்தபோதே சிபிஎம் கட்சி சார்பில் வெளியிட்டார்கள். “நக்சலைட்டுகளுக்கு ஒரு சிறைப் பறவையின் வேண்டுகோள்” என்று அதற்குத் தலைப்புக் கொடுத்திருந்தார்கள். அந்த விவாதங்கள் எல்லாம் இப்போது நாம் எடுக்கிற நிலைக்குப் பயன்படக் கூடியவை. ஒரு தமிழ்த் தேசிய நிலைப்பாட்டிற்கு வந்ததற்குப் பிறகும் இதே தேர்தல் புறக்கணிப்பு, பங்கேற்பு குறித்து விவாதங்கள் நடைபெற்றன.
ததேபொக, ததேவிஇ
பிறகு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியாக உருவெடுத்த, அப்போது மார்க்சியப் பொதுவுடைமைக் கட்சியாக (எம்.சி.பி., பிறகு எம்.சி.பி.ஐ.) அறியப்பட்ட இயக்கம் - அந்த நேரத்தில் நான் சிறையில் இருந்தாலும் அந்த நிகழ்வு எனக்குத் தெரியும் என்பதால் சொல்கிறேன். - அவர்கள் தேர்தலில் பங்கேற்றார்கள், ஒரு கட்டத்திற்குப் பிறகு தமிழ்த் தேசிய நிலைப்பாட்டின் அடிப்படையில் தேர்தல் புறக்கணிப்பு என்ற முடிவுக்கு வந்து விட்டார்கள்.
எமது தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் தொடக்கத்திலிருந்தே நாங்கள் புறக்கணிப்பு என்ற நிலைப்பாட்டில் இருக்கிறோம். புறக்கணிப்பா? பங்கேற்பா? என்பது போராட்டத்தின் தேவையைப் பொறுத்துத் தீர்வு செய்யப்படுவதாகக் கருதுகிறோம்.
இன்னும் அம்பேத்கர் இயக்கங்கள், தந்தை பெரியாரை வழிகாட்டியாகக் கொண்ட இயக்கங்கள்… அவர்களுக்கு என்று சில வழிமுறைகள் இருக்கின்றன. இவை குறித்தும் விவாதிக்க வேண்டும், ஆய்வு செய்ய வேண்டும். நான் இங்கு முக்கியமாகக் கருதுவது தேர்தல் புறக்கணிப்பு - பங்கேற்பு என்ற சிக்கலை ஆராய்வதற்கு இரண்டு விதமான களங்கள் உள்ளன. இரண்டையும் வேறுபடுத்திப் பார்;க்க வேண்டும்.
லெனின் ஆய்வுக் களம்
லெனினுடைய ஆய்வு முழுவதும் உருசியா தொடர்பாக, பிரிட்டன் தொடர்பாக, செர்மனி தொடர்பாக, ஐரோப்;பிய தேசங்கள் தொடர்பாக அமைந்தது. ஏறத்தாழ தேச அரசுகளாக உருவான பிறகு, தேசிய விடுதலை பற்றிய கேள்வி இல்லாத சமூகச் சூழலில், அவர் இந்தச் சிக்கலை ஆராய்ந்தார். சமூக மாற்றத்திற்கான போராட்டங்களில் - உருசியாவில் மன்னராட்சியை ஒழிப்பதற்கான சனநாயகப் புரட்சியாக இருந்தாலும், பிறகு பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தை நிறுவுகிற சோசலிசப் புரட்சியாக இருந்தாலும் - தேசிய விடுதலை என்ற கேள்வி முன்னுக்கு வரவில்லை. அவை தேசிய விடுதலைக்கான போராட்டங்கள் அல்ல.
தேசிய விடுதலைப் போராட்டம் என்ற நிலையில் இருக்கிற நாடுகளில் தேர்தல் பங்கேற்பு புறக்கணிப்பு பற்றிய விவாதங்கள் லெனினின் ஆய்வுகளில் இடம் பெறவே இல்லை. ஏனென்றால், அப்படிப்பட்ட நாடுகளில் தேர்தல், சனநாயகம், நாடாளுமன்றம் என்ற ஒன்றே இல்லை. காட்டாக, சீனத்திலே சனநாயகப் புரட்சியில் இப்படித்தான் இருந்தது. தேசிய விடுதலைக் கூறு இருந்தது. வியத்நாமிலும் இதே நிலைதான். ஆனால் வேறு சில நாடுகளில் அந்தச் சூழல் இருந்தது. பிரித்தானிய இந்தியாவில் வரம்புக்குட்பட்ட வாக்குரிமை, தேர்தல், இரட்டை ஆட்சிமுறை, நாடாளுமன்றம் எல்லாம் இருந்தன.
எனவே இன்றைக்கும் அந்த வேறுபாடுகள் நமக்குத் தேவைப்படுகின்றன. முதலாவதாக, ஒரு தேசிய விடுதலைப் போராட்டத்தை நடத்துகிற சூழலில் இது குறித்து என்ன நிலைப்பாடு? இரண்டாவதாக தேசிய விடுதலை என்பது முன்னிற்காத சூழலில், உள்நாட்டு ஆளும் வர்க்கங்களுக்கு எதிரான போராட்டத்தில் அந்த நாட்டின் சனநாயகத் தன்மை கொண்ட, சனநாயகச் சாயல் கொண்ட, அல்லது சனநாயக வடிவம் கொண்ட நிறுவனங்களை எவ்வாறு பயன்படுத்திக் கொள்வது? இந்த இரண்டையும் நாம் வேறுபடுத்திப் பார்க்க வேண்டும். இரண்டையும் ஒன்றாகக் குழப்பிக் கொள்ளும் போதுதான், உருசியாவைப் போலவே இங்கும் செய்யலாம், பிரிட்டனுக்கு லெனின் கொடுத்த அறிவுரையே நமக்கும் பொருந்தும் என்ற எண்ணங்கள் பிறக்கின்றன.
லெனின் அடிக்கடி வலியுறுத்திய அணுகுமுறை மெய்ம்மைகளிலிருந்து உண்மைக்கு என்பதாகும். நாம் சில சத்தியங்களை - உண்மைகளை முன்கூட்டியே நம்பி அவற்றுக்குப் பொருத்தமாகப் புறச் சூழல் இருப்பதாகக் கொள்வது உதவாது. தேர்தல் பங்கேற்பின் அவலமான அனுபவங்களையும், தேர்தலில் பங்கேற்கும் கட்சிகள் மீதான வெறுப்பையும் அடிப்படையாக வைத்துத் தேர்தல் புறக்கணிப்பு என்று நிலையெடுத்து, இதனை நியாயப் படுத்துவதற்காக ஏற்கெனவே புரட்சிகரச் சூழல் தோன்றிவிட்டதாக வரையறுப்பது சரியல்ல. புரட்சி வாசல் கதவைத் தட்டிக் கொண்டு நிற்கும் போது, எதற்காகத் தேர்தலில் பங்கேற்க வேண்டும்? என்று கேட்டோம். இவ்வளவு காலம் தட்டினால் கதவு உடைந்திருக்க வேண்டும். அப்படி எதுவும் நடக்கவில்லை.
எனவே, இரண்டு காரணிகள் உள்ளன. முதலாவது நம் போராட்டத்தின் தன்மை பற்றியது. தேசிய விடுதலைப் போராட்டமா? அல்லது உள்நாட்டளவில் சனநாயகம் அல்லது சமூக மாற்றத்துக்கான போராட்டமா? இரண்டாவது நம் போராட்டக் களத்தின் தூல நிலைமைகள் பற்றியது. இவற்றின் அடிப்படையில் ஒரு பொது நிலைப்பாடு அல்லது மூலவுத்தியை வகுத்துக் கொள்ள வேண்டும்;. அதன் கூறுகளாகத் தந்திரவுத்திகளை முடிவு செய்ய வேண்டும்.
இந்த விவாதத்தில் பங்கேற்கிற அனைவருக்குமே பொதுவாக மக்கள் நலன், சமூக மற்றம், சாதி ஒழிப்பு, புரட்சி இவற்றில் நம்பிக்கை இருக்கும், ஆர்வம் இருக்கும். ஆனால் இது போதாது. நம்முடைய மூலவுத்தி என்ன? என்பது குறித்துத் தெளிந்த பார்வை வேண்டும்.
விடுதலைப் போராட்டமும் தேர்தலும்
நாம் இங்கே தமிழ்நாட்டில் தேர்தல் பங்கேற்பு, புறக்கணிப்பு பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம். 2011 சட்டப் பேரவைத் தேர்தலை மனதிற்கொண்டு பேசிக் கொண்டிருக்கிறோம். தமிழ்நாடு, தமிழ்ச் சமூகம் எப்படி இருக்கிறது? தமிழ்நாட்டின் அரசியல் தகுநிலை என்னவாக இருக்கிறது? இங்கே இரண்டு செய்திகள் அடிப்படையானவை. ஒன்று: தமிழ்நாடு இந்திய வல்லாதிக்கத்தின் கீழ் அடிமை நாடாக இருக்கிறது. தமிழர்கள் மீது தேசிய இன ஒடுக்குமுறை கோலோச்சுகிறது. தமிழ்த் தேசம் ஓர் அடிமைத் தேசம். இரண்டு: தமிழ்ச் சமூகம் அடிப்படையில் சாதிச் சமூகமாக இருக்கிறது. வர்ணசாதி ஒடுக்குமுறை கோலோச்சுகிறது. இந்த இருவகை ஒடுக்குமுறையிலிருந்தும் விடுதலைக்காகப் போராட வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம். இந்தப் போராட்டத்தில் தேர்தலின் பங்கு என்ன?
வியத்நாம் விடுதலைப் போராட்டம் என்பது அயலார் ஆதிக்கத்துக்கு எதிரான தேசிய விடுதலை, பிரபுத்துவ ஒடுக்குமுறைக்கு எதிரான சனநாயகம் ஆகிய இரு கூறுகளைக் கொண்டிருந்தது. ஆகவேதான் அது தேசிய சனநாயகப் புரட்சி எனப்பட்டது. சீனத்திலும் இப்படித்தான். அரைக்காலனிய அரைப் பிரபுத்துவச் சமூகத்தி;ல்; தேசிய விடுதலைக்கும், சனநாயகத்திற்குமாகப் போராட வேண்டிய திருந்தது. சீனப் புரட்சியும் தேசிய சனநாயகப் புரட்சிதான். பாட்டாளி வர்க்கத் தலைமை என்பதைக் காட்டும் வகையில் மக்கள் - சனநாயகப் புரட்சி எனப்பட்டது. தமிழ்நாட்டிலும் தேசிய சனநாயகப் புரட்சிதான் இன்றைய தேவை. நம் தனித்தன்மையைக் கணக்கில் கொண்டு சனநாயகத்தைச் சமூகநீதி என்கிறோம்.
தமிழ்த் தேசியச் சமூகநீதிப் புரட்சியின் உடனடி அரசியல் கடமை தமிழ்த் தேசிய விடுதலையாகும். இந்த அடிப்படை யிலிருந்துதான், தேர்தல் தொடர்பான சிக்கல்களை அணுகுகிறோம். எமது பார்வையில் இந்தியா நம் நாடு அல்ல. தமிழ்நாடுதான் நம் நாடு. இந்தியா நம்நாடு, இந்தியப் புரட்சி செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் எவ்வளவு நேர்மையான வர்களாக இருந்தாலும், எம்மால் அவர்களோடு சேர்ந்து மூலவுத்தி வகையில் ஒரு பொது நிலைப்பாட்டிற்கு வர முடியாது.
தேசிய விடுதலையும் தேர்தல் புறக்கணிப்பும்
உலகெங்கும் என்ன நடந்துள்ளது, என்ன நடந்து வருகிறது என்று பார்த்தால், தேசிய விடுதலை இயக்கங்கள் பொதுவாக தேர்தல் புறக்கணிப்பையே வழிமுறையாகக் கொண்டுள்ளன. பங்கேற்பு என்பது விதிவிலக்கே. பழைய வகைக் காலனியாதிக்கம் கோலோச்சிக் கொண்டிருந்த வரை தேர்தல் என்பதே அரிதாய் இருந்ததால் பெரிய சிக்கல் வரவில்லை. ஆனால் புதிய வகைக் காலனியாதிக்கத்தில் சனநாயக வடிவங்களுக்கும் இடம் இருப்பதால், பங்கேற்பதா? புறக்கணி;ப்பதா? என்ற சிக்கல் எழுந்து விடுகிறது. குறிப்பாக, இரண்டாம் உலகப் போருக்குப் பின் விடுதலையின் பெயரால் அதிகாரக் கைமாற்றம் பெற்ற நாடுகளில் தேசிய இன ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் இந்தச் சிக்கல் முன்னுக்கு வந்துள்ளது. ஆனால் இத்தகைய நாடுகளிலும் கூட தேசிய விடுதலை இயக்கங்களுக்குத் தேர்தல் புறக்கணிப்பே பொது வழிமுறையாக இருக்க முடியும் என்பது பட்டறிவாகும்.
தென்னாப்பிரிக்காவில் என்ன நடந்தது என்று பார்ப்போம். விடுதலைக்கு முன் இன ஒதுக்கல் கோலோச்சிய தென்னாப்பிரிக்கா ஒரு வகைக் காலனியாதிக்கமாக வரைய றுக்கப்பட்டது. வெள்ளையர்கள் வந்தேறிகளா, சொந்த நாட்டவர்களா, என்பதைப் பொறுத்து அது வந்தேறிகளின் காலனியாதிக்கம், அல்லது உள்நாட்டுக் காலனியாதிக்கம் என்று அழைக்கப்பட்டது. ஒரே நாட்டுக்குள் ஒர் இனத்தவர் பிற இன மக்களை அடிமைப்படுத்துவதற்கு எதிரான போராட்டத்தை ஆப்பிரிக்கத் தேசியக் காங்கிரசும், தென்னாபிரிக்கப் பொதுமைக் கட்சியும் தேசிய விடுதலை இயக்கமாகவே கருதின. அங்கு வெள்ளையர் அல்லாத அனைவரும் - கலப்பினத்தவர், ஆசிய இனத்தவர், ஆப்ரிக்க இனத்தவர், அனைவரும் - சேர்ந்து கறுப்பினத்தவராகக் கருதப்பட்டனர். அது கறுப்பினத்தின் தேசிய விடுதலைப் போராட்டம். தொடக்கத்தில் கறுப்பின மக்களுக்கு அடிப்படை அரசியல் உரிமைகள் ஏதுமில்லை, ஆட்சியில் எவ்விதப் பங்குமில்லை.
 இன ஒதுக்கல் அரசின் நாடாளுமன்றங்கள்
 ஆனால், தொடர்;ச்சியான போராட்டங்களின் விளைவாகவும், புறத் திருந்தான நெருக்குதலின் விளைவாகவும் சில அரசியல் சீர்திருத்தங்களைக் கொண்டுவர வேண்டிய கட்டாயம் இன ஒதுக்கல் அரசுக்கு ஏற்பட்டது. இவ்வாறு மூன்று வகையான நாடாளுமன்றங்கள் உருவாக்கப்பட்டன. வெள்ளையர்களுக்கான நாடாளுமன்றம் மட்டும் முழுமையான சட்டமியற்றும் அதிகாரம் கொண்டது. கலப்பினத்தவர்களுக்கான நாடாளுமன்றம் இரண்டாம் தரமானது. ஆசியர்களுக்கான நாடாளுமன்றம் மூன்றாம் தரமானது. பின்சொன்ன இரு அவைகளும் பெரும்பாலும் கலந்தாய்வு மன்றங்களாகவே இருந்தன. இறுதி நோக்கில் அவற்றுக்குச் சட்டமியற்றும் அதிகாரம் கிடையாது. அவை சாரத்தில் இறைமையில்லா நிறுவனங்களாகவே இருந்தன - தமிழ்நாடு சட்டமன்றம் போலவே! வெள்ளை நாடாளுமன்றத்திற்கு மட்டுமே இறைமை சொந்தம்.
ஆப்பிரிக்க இனத்தவர்க்கென்று எவ்வகை நாடாளுமன்றமும் இல்லை. ஆனால் அவர்களுக்கென்று அவர்கள் சார்ந்த பழங்குடியினத்தைப் பொறுத்து 13 தாயகங்கள் அறிவிக்கப்பட்டன. பெரும்பாலும் வளங்குன்றி வறண்ட பரப்புகளே இவ்வாறு பழங்குடித் தாயகங்கள் ஆக்கப்பட்டன. பழங்குடி மக்கள் தத்தமது தாயகத்துக்கான ஆட்சியைத் தேர்ந்தெடுக்க வாக்குரிமையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆப்பிரிக்கர் ஒருவர் பிரிட்டோரியாவிலோ சொகனஸ்பர்க்கிலோ வசிப்பவராகவும் உழைப்பவராகவும் இருக்கலாம். ஆனால் அங்கே அவருக்கு வாக்குரிமை கிடையாது. எங்கோ இருக்கும் பழங்குடித் தாயகத்திற்கான ஆட்சிமன்றத்தைத் தேர்ந்தெடுப்பதற்குத்தான் அவர் வாக்களிக்கலாம்.
புறக்கணிப்பு ஏன்?
சுருங்கச் சொல்லின், அனைத்து அதிகாரமும் வெள்ளையருக்கே என்ற நிலையை இந்தச் சீர்திருத்தங்கள் மாற்றிவிடவில்லை. ஆனாலும் புதிய நிறுவனங்களான வெள்ளையரல்லாதவருக்குரிய நாடாளுமன்றங்களையும் ஆட்சி மன்றங்களையும் போராட்ட வளர்ச்சிக்குப் பயன்படுத்திக் கொள்ளலாமா? என்ற கேள்வி எழுந்தது. இப்படிப் பயன்படுத்திக் கொள்வதால் சிற்சில நன்மைகளும் கூட விளையக் கூடும். ஆயின், இதற்கு விலையாக, கறுப்பர் அதிகாரம் பற்றிய மாயைகள் பிறக்கவும் வளரவும் இது உறுதுணையாகி விடும். ஆகவே, கறுப்பின விடுதலைக்கான அமைப்புகள் இந்தப் புதிய மன்றங்களையும் அவற்றுக்கான தேர்தலையும் புறக்கணிக்க முடிவு செய்தன. இந்தப் புறக்கணிப்பால் அரசின் சீர்திருத்தங்கள் சீந்துவாரற்று மதிப்பிழந்தன. ஆப்பிரிக்கத் தேசியக் காங்கிரசும் தென் ஆப்பிரிக்கப் பொதுமைக் கட்சியும் பிற விடுதலை அமைப்புகளும் ஒருவர்க்கு ஒரு வாக்கு (ழநெ அயnஇ ழநெ எழவந) என்ற முழக்கத்தில் உறுதியாக நின்றன. அனைத்து இனத்தவர்க்கும் ஒரே நாடாளுமன்றம், அதற்கான தேர்தலில் ஒவ்வொருவருக்கும் ஒரு வாக்கு, ஒரு வாக்குக்கு ஒரே மதிப்பு என்ற உண்மையான சனநாயக அடிப்படையில் தேர்தல் நடத்தக் கோரின. அந்தத் தேர்தல் பெரும்பான்மையினரான கறுப்பின மக்களின் அதிகாரத்துக்கு வழிகோலும் என்பதால் வெள்ளை இனவெறி அரசு பிடிவாதமாக மறுத்து வந்தது. போத்தா அதிபராக இருக்கும் வரை இதே நிலைதான்.
பங்கேற்பு எப்போது?
ஆனால் கறுப்பின மக்களின் உறுதியான போராட்டம், வெள்ளையர் இடையிலான சனநாயக ஆற்றல்கள் அதற்களித்த ஆதரவின் பெருக்கம், பன்னாட்டு நெருக்குதல் யாவும் சேர்ந்து வெள்ளை ஆட்சியாளர்களின் போக்கில் ஒரு மாற்றத்தைக் கொண்டுவந்தன. இந்த மாற்றத்தின் விளைவாகவே நெல்சன் மண்டேலாவும் அவரின் தோழர்களும் கால் நூற்றாண்டுக்கு மேலான சிறையடைப்பிலிருந்து விடுதலை செய்யப்பட்டனர். புதிய வெள்ளை அதிபர் தெகிலர்க்கும் மண்டேலாவும் இனஒதுக்கலுக்கு முடிவு கட்டுவதற்கான வழிமுறைகள் குறித்துப் பேசி உடன்பாடு கண்டனர். இடைக்கால அரசு ஏற்படுத்தப்பட்டு ஒருவர்க்கு ஒரு வாக்கு என்ற அடிப்படையில் தேர்தல் அறிவிக்கப்பட்டது. முதன்முதலாக இந்தத் தேர்தலில்தான் ஆப்பிரிக்கத் தேசியக் காங்கிரசு பங்கேற்று, வெற்றியும் பெற்றது.
இதிலிருந்து தெரிவது என்னவென்றால், தேர்தலானது அதிகார மாயையைத் தோற்றுவிக்குமானால் விடுதலை இயக்கம் அதில் பங்கேற்பது போராட்டத்துக்கு உதவாது, ஊறுதான் செய்யும். இந்நிலையில் புறக்கணிப்புதான் சரியானது. தேர்தலானது கோட்பாட்டளவிலாவது மெய்யான அதிகாரத்துக்கு வழிகோலுவதாய் இருக்கும் நிலையில் அதில் பங்கேற்பது குறித்துக் கருதிப் பார்க்கலாம். மற்றக் காரணிகளையும் கணக்கில் கொண்டு, பங்கேற்கவும் செய்யலாம். இந்தப் பங்கேற்பினால் விடுதலை கிடைக்காமற் போகலாம், ஆனால் விடுதலைப் போராட்டத்துக்கான ஆதரவு விரிவடைந்து உறுதிப்படும்.
நமீபியாவில் நடந்தது என்ன?
இதே தென் ஆப்பிரிக்க இனவெறி அரசின் காலனி நாடாக இருந்த நமீபியா எனப்படும் தென்மேற்கு ஆப்பிரிக்கா. இந்த நாட்டின் விடுதலைக்காக சாம் நுயோமா தலைமையில் தென்மேற்கு ஆப்பிரிக்க விடுதலை அமைப்பு  ஆயுதப் போராட்டம் நடத்தியது. முடிவில் ஐ.நா. தலையிட்டு ஏற்படுத்திய இணக்க உடன்படிக்கையின் அடிப்படையில் தேர்தல் நடைபெற்று, விடுதலை ஈட்டி சுவாப்போ அதிகாரத்துக்கு வந்தது. ஆயுதப் போராட்டம் நடத்துகிற விடுதலை இயக்கங்கள் கூட தேர்தல் என்ற வடிவத்தைப் புறந்தள்ளி விடுவதில்லை என்பதற்கு இது ஒரு சான்று. அது அரசியல் அதிகாரத்துக்கான போராட்டத்தைத் திசைதிருப்புவதாக இருக்கக் கூடாது என்பதுதான் முக்கியமானது.
நம் நாட்டின் சட்டவாத இடதுசாரிகளிடம் கேட்டால் சொல்வார்கள்: ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டு நல்லவிதமாகத் தேர்தல் பாதைக்குத் திரும்பியதால் விடுதலை கிடைத்தது என்று! நேபாளத்தில் ஏற்பட்ட இணக்கத்துக்கு சீதாராம் எச்சூரியும், ஏ.பி. பரதனும் இப்படித்தான் விளக்கமளித்தார்கள். உண்மையில் மாவோவியர்கள் தலைமையிலான மக்கள் - போர்தான் மன்னராட்சிக்கு எதிரான வெகுமக்கள் எழுச்சிக்கு வழி செய்தது என்பதையும், அதுதான் மற்ற அரசியல் கட்சிகளோடு உடன்பாட்டுக்கு வழி செய்தது என்பதையும் அவர்கள் பார்ப்பதில்லை. மக்கள் - போரும் அதன் விளைவான மக்கள் - எழுச்சியும் இல்லாமல் வெறும் வாக்குச் சீட்டு மூலமாகவே முடியாட்சியை வீழ்த்தி விட்டார்கள் என்பது திரிபுவாதமே தவிர வேறன்று. கொசோவாவில் கடுமையான ஆயுதப் போராட்டத்துக்குப் பிறகுதான் வாக்கெடுப்பு வந்தது. அது போராட்டத்தின் பலனை அறுவடை செய்கிற வடிவமே தவிர, அது மட்டுமே போராட்ட வடிவமா என்றால் இல்லை. கிழக்குத் திமோரிலும் இதே நிலைதான். அங்கெல்லாம் தேர்தல் பங்கேற்பு என்பது போராட்டத்துக்கு நிறைவாகவே தவிர, மாற்றாக அன்று.
தமிழீழப் பாடம்
தேசிய விடுதலை இயக்கத்துக்கும் தேர்தல் பங்கேற்புக்குமான உறவு குறித்துத் தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றிலிருந்தும் பாடம் கற்கலாம். 1976 வட்டுக்கோட்டைத் தீர்மானத்துக்குப் பிறகு அதற்கான வெகுமக்கள் ஒப்புதலைப் பெற 1977 பொதுத் தேர்லைத் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி பயன்படுத்திக் கொண்டது சரியானதே. அந்தத் தேர்தல் முடிவு தமிழீழத் தனியரசுக்கான சனநாயகக் கட்டளையைப் பெற்றுத் தந்தது. ஆனால் அதன் பிறகு விடுதலைப் போராட்டத்துக்கான தேர்தல் பாதையை சிங்கள அரசு அடைத்து விட்டது. ஆனால் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியோ நாடாளுமன்றத் தேர்தலை மட்டுமன்று, மாவட்ட வளர்ச்சி மன்றத் தேர்தலைக் கூட விட்டு வைக்காமல் போட்டியிட்டது. விடுதலைப் போராளி இயக்கங்கள் இந்தத் தேர்தல்களைப் புறக்கணிக்க அறைகூவின. பதவிகளுக்காகவே தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி இத்தேர்தல்களில் பங்கேற்றது விடுதலைக்கு இரண்டகம் ஆயிற்று.
தேசிய விடுதலைக் குறிக்கோளில் கிஞ்சிற்றும் விட்டுக் கொடுக்காமல் உறுதியாக நின்ற தமிழீழ விடுதலைப் புலிகள் எந்தத் தேர்தலிலும் போட்டியிட்டதில்லை. அல்லது அவர்கள் விடுதலைக் குறிக்கோளுக்குப் பயன்படும் விதத்தில் - குறைந்தது அதற்கு ஊறு நேராத விதத்தில் - போட்டியிடுவதற்கு ஒரு தேர்தல் கூட கிடைக்கவில்லை. தேர்தல் புறக்கணிப்பே விடுதலைப் புலிகளின் மூலவுத்தியாக இருந்து வந்தது.
1987 இந்திய--இலங்கை ஒப்பந்தப்படி வடக்கு--கிழக்கு மாகாண சபைக்குத் தேர்தல் நடைபெற்ற போதும் விடுதலைப் புலிகள் அதில் பங்கேற்கவில்லை. தமிழீழ மக்களும் அத்தேர்தலைப் புறக்கணித்த நிலையில் மாகாண சபைத் தேர்தலும் மாகாண சபையுமே கேலிக் கூத்தாகிப் போயின. 'மாகாண முதல்வர்' வரதராசப்பெருமாள் இந்தியப் படையின் பாதுகாப்போடு தமிழீழத்தைப் பறைசாற்றி விட்டுத் தமிழீழத்தை விட்டே ஓடிப் போய் வரலாற்றில் எட்டப்பன் வரிசையில் இடம் பிடித்துக் கொண்டனர். 
சிறிமா பண்டாரநாயக்கா வரவிடாமல் தடுப்பதற்காக சேனநாயகாவை ஆதரிப்பது, செயவர்த்தனா வரவிடாமல் தடுப்பதற்காகப் பண்டாரநாயக்காவை ஆதரிப்பது, ரணில் விக்கிரமசிங்கா வரவிடாமல் தடுப்பதற்காகச் சந்திரிகாவை ஆதரிப்பது, மகிந்த இராட்சபட்சர் வரவிடாமல் தடுப்பதற்காக ரணிலை ஆதரிப்பது… இவ்வாறான தந்திரவுத்தி எதையும் புலிகள் எப்போதும் கைக்கொண்டதில்லை. 'பெரிய தீமையை எதிர்த்துச் சிறிய தீமையை ஆதரிப்பது' என்றெல்லாம் சில நண்பர்கள் சொல்கிறார்களே அந்த வகையில் கூட புலிகள் சிங்களப் பேரினவாதக் கட்சிகளில் ஒன்றுக்கெதிராக மற்றொன்றை ஆதரித்ததில்லை. சிங்களக் கட்சிகளை எதிர்த்துத் தமிழ்க் கட்சியை ஆதரித்ததும் கூட இல்லை. தேர்தல் புறக்கணிப்பே விடுதலைப் புலிகளின் மூலவுத்தியாக இருந்தது.
2004 தேர்தல்
விதி என்றால் விலக்கும் உண்டுதானே? 2004 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குப் புலிகள் ஆதரவு தந்து வெற்றி தேடிக் கொடுத்தார்கள். இந்த விதிவிலக்கான முடிவுக்கு அப்போதையத் தனித்தன்மையான நிலைமைகளே காரணம்: (1) சிங்கள அரசுக்கும் புலிகளுக்கும் இடையே போர்;நிறுத்தம் நடைமுறையில் இருந்தது. (2) யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் தொடங்கிய பொங்கு தமிழ் எழுச்சி ஈழப் பரப்பெங்கும் படர்ந்து, அதுவரை உறங்கிக் கிடந்த அரசியல் ஆற்றல்களை எழுப்பிவிட்டது. (3) இதன் விளைவாகப் பிறந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஈழத் தமிழர்களின் ஒரே பேராளாக விடுதலைப் புலிகளை ஏற்றுக்கொண்டது. (4) இடைக்கால நிர்வாக சபை அமைப்பது தொடர்பான புலிகளின் முன்மொழிவுகளுக்கு வாக்காளர்களின் ஒப்புதலைப் பெறுவதற்குத் தேர்தல் ஒரு வாய்ப்பாயிற்று.
இந்த வகையில் புலிகளின் உத்தி வெற்றி பெற்றது. புலிகளுக்கும் அவர்களின் முன்மொழிவுகளுக்;கும் தமிழீழ மக்களின் பெரும்பான்மை ஆதரவு இருப்பதைத் தேர்தல் முடிவுகள் காட்டின.
விதிவிலக்கு விதியாகாது
நாமும் கூட தேர்தல் புறக்கணிப்பைப் பொதுவான மூலவுத்தியாகக் கடைப்பிடிக்கும் போதே விதிவிலக்கான நிலைமைகளில் மாறுபட்ட முடிவுகள் எடுக்கலாம். சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் இதைச் செய்தோம். இன அழிப்புப் போரின் உச்சத்தில் - ஓர் இடைக்காலப் போர் நிறுத்தமாவது ஏற்படச் செய்ய வேண்டுமென்று அதற்கான கடைசி முயற்சியாகத் தமிழ்நாட்டில் காங்கிரசைத் தோற்கடிக்கும் முயற்சியில் இறங்கினோம். ஆனால் இந்த எதிர்வகை உத்தியையே ஒவ்வொரு தேர்தலிலும் கடைப்பிடிக்க முடியாது. பழிவாங்கல் அல்லது தண்டனை என்ற முறையில் ஒரு கட்சி அல்லது தலைவரைத் தோற்கடிப்பதற்காகவே அடிப்படையில் அதே கொள்கை கொண்ட கட்சி அல்லது தலைவரை ஆதரித்தல் என்பது மக்களைப் பற்றியும், அவர்களது விடுதலைக்கான குறிக்கோளைப் பற்றியும் அக்கறையற்ற போக்கினையே காட்டும். மக்களைப் போராட்டப் பாதையில் அணிதிரட்டுவதற்கான நம் மூலவுத்திக்கு ஊறு செய்யும் படியான எந்தத் தந்திரவுத்தியும் நமக்கு ஏற்புடைத்தன்று.
தமிழகத்தில் நாம் என்ன செய்யலாம் என்பது பற்றிச் சற்றே விரிவாகச் சொல்ல வேண்டும். அரசியல் விடுதலை பெறுவதற்கோ, விடுதலை நோக்கி முன்னேறுவதற்கோ இங்கு நடைபெறும் தேர்தல் இடமளிக்குமா என்று பாருங்கள். செயலளவில் இல்லா விட்டாலும் கோட்பாடளவிலாவது இப்படி ஒரு வாய்ப்பு இருந்தால் அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வதில் தவறில்லை.
நாடாளுமன்றத் தேர்தலைப் பொறுத்த வரை, உங்களால் ஒருபோதும் பெரும்பான்மை பெற முடியாது@ அரசமைப்பில் திருத்தங்கள் செய்தவற்கான மூன்றிலிரு பங்கு பெரும்பான்மைக்கு வாய்ப்பே இல்லை. இந்தியாவெங்கும் தேசிய இன உரிமைக்காகவும், சனநாயகத்துக்காகவும், சமூகநீதிக்காகவும் போராடும் ஆற்றல்களை ஒன்றுபடுத்தி அல்லது ஒருங்கிணைத்துத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறலாமே என்று நீங்கள் கேட்கலாம். முதலாளியத்துக் குரிய, அதிலும் வல்லாதிக்க முதலாளியத்துக் குரிய இயல்பென்று லெனின் சுட்டிக்காட்டிய ஏற்றத்தாழ்வான வளர்ச்சி என்ற புறநிலை யையும், அதன் விளைவாக அரசியல் வளர்ச்சியில் ஏற்படும் ஏற்றத்தாழ்வையும் கணக்கில் கொண்டால் இந்தக் கேள்வியே எழாது. கடந்த அறுபதாண்டு கால இந்திய வரலாற்றில் தேர்தல் வழிப்பட்டோ தேர்தலுக்கு அப்பாற்பட்டோ அரசியல் இயக்கங்களின் வளர்ச்சியில் இந்த ஏற்றத்தாழ்வை எளிதில் உய்த்தறியலாம்.
இந்தியா முழுவதற்குமான சமூக மாற்றம், இந்தியப் புரட்சி, இந்திய அளவிலான தேர்தல் வெற்றி…. இதெல்லாம் போகாத ஊருக்கு வழிகாட்டுவதே தவிர வேறல்ல. இது புரட்சியை நிரந்தரமாக ஒத்தி வைக்கப் பயன்படும் கானல்நீர் வேட்டையே ஆகும். சனநாயகப் புரட்சி, புதிய சனநாயகப் புரட்சி, மக்கள்--சனநாயகப் புரட்சி, சோசலிசப் புரட்சி… எந்தப் பெயரில் என்றாலும் இந்தியப் புரட்சி என்பது வெறும் வாய்வீச்சே.
இந்திய அளவில் தேர்தலில் போட்டியிட்டு வெல்வது நடைமுறையளவில் மட்டுமன்று, கோட்பாட்டளவிலேயே முடியாத காரியம். கோட்பாட்டளவில் முடியும் என்றால் முயற்சி செய்து பார்ப்பதில் பொருளுண்டு. அந்த முயற்சி வெற்றி பெறா விட்டாலும் மாற்றுவழி தேடுவதற்குரிய நியாயத்தை வழங்கும். கோட்பாட்டளவிலேயே முடியாத ஒரு முயற்சியில் ஈடுபடுவது மக்களிடையே மயக்கம் வளர்ப்பது மட்டுமன்று, போராடும் ஆற்றலை வீணடிப்பதும் ஆகும்.
தமிழகச் சட்டப் பேரவையைப் பொறுத்த வரை தனக்கென்று இறைமை இல்லாத பேர்-அவைதான். இதை உண்மையாகவே சட்டப் பேரவை என்றும், இதன்வழித் தேர்ந்தெடுக்கப்படும் ஆட்சியை உண்மையாகவே அரசு என்றும் நம்புவது, மக்களை நம்பச் சொல்வது ஏமாற்றுத்தனம் அல்லது ஏமாளித்தனமே ஆகும்.
இடதுசாரிக் கட்சிகள் எனப்படுகிறவை எவ்வளவுதான் முயன்றும் இந்திய அளவில் சீராக வளர முடியவில்லை, தேர்தலிலும் அவ்வாறு வெல்ல முடியவில்லை என்பது கண்கூடு. மாநில அளவில் அவை ஆட்சியமைக்கும் அளவுக்கு வெற்றி கண்டுள்ள மேற்கு வங்கம், கேரளம், திரிபுரம் ஆகிய பகுதிகளிலும் கூட இந்திய ஆளும் வர்க்கக் கட்சிகளுக்கு அடிப்படையிலேயே மாறான கொள்கைகள் எதையும் கடைப்பிடிக்கவில்லை, அதற்கு வழியே இல்லை.
தமிழகத்தில் திராவிட இயக்கக் கட்சிகளின் பட்டறிவும், தமிழ்த் தேசிய நிலைப்பாட்டுடன் தேர்தலில் போட்டியிட்ட ஈ.வெ.கி.சம்பத் தலைமையிலான தமிழ்த் தேசியக் கட்சி, ம.பொ.சி தலைமையிலான தமிழரசுக் கழகம், சி.பா.ஆதித்தனார் தலைமையிலான நாம் தமிழர் கட்சி ஆகியவற்றின் பட்டறிவும் கூட இன்றைய இந்திய அரசமைப்பில் தேர்தல் பங்கேற்பினால் தீமைகள் உண்டே தவிர நன்மைகள் இல்லை என்பதையே காட்டும்.
இந்தி எதிர்ப்புப் போராட்டத்தால் அரசியலில் வளர்ச்சி கண்டு ஆட்சியைப் பிடித்த திராவிட முன்னேற்றக் கழகமோ, அதன் தொடர்ச்சியாக எழுந்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமோ மாநில ஆட்சியைப் பயன்படுத்தி அல்லது இந்திய நாடாளுமன்றப் பதவிகளையும் இந்திய அரசிலான அமைச்சர் பதவிகளையும் பயன்படுத்தி இந்தித் திணிப்பைத் தடுக்க உருப்படியாக எதுவும் செய்ய முடியவில்லை, அரசமைப்புச் சட்டத்தின் 17ஆவது பகுதியில் ஒரே ஒரு சொல்லைக் கூட நீக்கவோ திருத்தவோ முடியவில்லை என்பதை மறந்து விடக் கூடாது. இது நமக்கோர் பாடம், எச்சரிக்கை!
ஆக, நண்பர்களே, தேர்தலைப் புறக்கணிப்பது தவிர வேறு வழியில்லை. வரும் 2011 சட்டப் பேரவைத் தேர்தலில் இந்த முடிவை மாற்றவோ சற்றுத் தளர்த்தவோ காரணம் ஒன்றுமில்லை. ஆனால் இந்தப் புறக்கணிப்பு செயலின்மைக்கு வழிகாட்டுவதாய் இருக்கக் கூடாது என்றால், மக்களைப் போராட்ட அரசியலுக்கு அணிதிரட்டுவதில் நாம் முழுக் கவனம் செலுத்த வேண்டும். தேர்தலை மறுப்பது மறுப்பதற்காகவே அல்ல, போராட்டம் எடுப்பதற்காகவே என்பதை மனத்திற் கொள்வோம்.

பாஜகவுக்கு மட்டுமே ஆதரவு: இந்து முன்னணி

 பாஜகவுக்கு மட்டுமே இந்து முன்னணி ஆதரவளிக்கும் என்று அதன் நிர்வாக அமைப்பாளர் ராமகோபாலன் கூறியுள்ளார்.

இதுகுறித்து வேலூரில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:
இந்துக்களின் உரிமைகளைப் பாதுகாக்க உறுதியளிக்கும் கட்சிக்கு வாக்களிக்கவேண்டும். வரும் தேர்தலில் நல்ல மாற்றம் ஏற்படும் என்று நம்புகிறோம். இந்து முன்னணி பாஜகவை மட்டுமே ஆதரிக்கும். பாஜக போட்டியிடாத தொகுதிகளில் இந்து இயக்க ஆதரவாளர்கள் இணைந்து முடிவெடுப்பார்கள். திமுக, அதிமுகவுக்கு மாற்று வேண்டும் என்ற கருத்து வலுப்பெற்றுள்ளது.
மதவாதம், பசுவதையை தடைசெய்யவேண்டும். இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்தி விவசாயத்தை வளப்படுத்தவேண்டும்.
கறுப்பு பணத்தை மீட்கப்போவதாக பிரதமர் சபதமேற்றுள்ளதை வரவேற்கிறோம். இதில் அவர் மேற்கொள்ளும் தொடர் நடவடிக்கைகள் மூலம்தான் அவர் நேர்மையானவரா என்பது தெரியவரும் என்றார் அவர்.

ஆட்சியில் பங்கு இல்லாமல் திமுகவை தொடர்ந்து ஆதரிக்க வேண்டியதில்லை

ஆட்சியில் பங்கு இல்லாமல், தொடர்ந்து திமுகவை ஆதரிக்க வேண்டிய அவசியமில்லை என்றார் முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்.

திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளிடையே ஞாயிற்றுக்கிழமை அவர் மேலும் பேசியது:
காங்கிரஸýக்கு எத்தனை தொகுதிகள் அளிப்பீர்கள் என செய்தியாளர்கள் கேட்டதற்கு காங்கிரஸôர் 234 தொகுதிகளையும் கேட்கிறார்கள் என தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார். மூத்த அரசியல்வாதியான முதல்வரின் இந்தக் கருத்தை காங்கிரûஸ கிண்டல் செய்கிறார் என்று எடுத்துக் கொள்ள முடியாது. ஆனால், இது உண்மையாகக்கூட இருக்கலாம். நாங்கள் 234 தொகுதிகளையும் கேட்கவில்லை. அதில் பாதி அல்லது 110 தொகுதிகள் அளித்தாலும் போதுமானது.
பெரும்பான்மை இல்லாவிட்டாலும், காங்கிரஸ் ஆதரவுடன் 5 ஆண்டுகள் ஆட்சியை திமுக நடத்தியுள்ளது. ஆட்சியில் பங்கு இல்லை. ஆனால், தொடர்ந்து அப்படியே இருக்க வேண்டிய அவசியமும் இல்லை.
காங்கிரஸ் கூட்டணிதான் வெற்றி பெறும் என்ற நிலைதான் தமிழகத்தில் உள்ளது. இந்த நிலையில், நாங்கள் துணை முதல்வர் பதவியோ, அமைச்சர்களில் 50 சதவீத இடமோ கோரவில்லை. மூன்றில் ஒரு பங்காவது அமைச்சரவையில் இடம் அளிக்க வேண்டும்.
இங்குள்ளவர்கள் தில்லியில் அமைச்சர்களாக இருக்கலாம். ஆனால், தமிழகத்தில் நாங்கள் உங்களுடன் (திமுக) அமைச்சர்களாக இருக்கக் கூடாதா? கூட்டணியில் எத்தனை இடம், அமைச்சரவையில் எத்தனை சதவீதம் என்பதை காங்கிரஸ் கட்சியின் 5 பேர் குழு முடிவு செய்யும்.
தமிழகத்தில் உள்ள காங்கிரஸ்காரர்களுக்கு ஓரளவுக்கேனும் திருப்தி தரும் வகையில் தொகுதிகளின் எண்ணிக்கை இருக்க வேண்டும். நாங்கள் வாக்களிப்போம், யாரோ ஒருவர் சிம்மாசனத்தில் அமர்ந்து கொள்வார்கள். நாம் அடிமைகளாகவே இருப்பதா?
வரவுள்ள ஆட்சியில் நமக்கும் பங்குண்டு என்ற நிலை இருந்தால்தான் காங்கிரஸ்காரர்கள் உற்சாகத்துடனும், ஊக்கத்துடனும் தேர்தல் பணியாற்றுவார்கள்.எங்களுக்குப் பணம் தேவையில்லை. கௌரவம், அந்தஸ்து, சுயமரியாதை இவைதான் முக்கியம் என்றார் இளங்கோவன்.

திமுக அணியிலிருந்து அதிமுக தாவ விடுதலைச்சிறுத்தைகள் திட்டம்?





திமுகவிடமிருந்து கேட்ட தொகுதிகள் கிடைப்பது கடினம் என்ற நிலை ஏற்பட்டிருப்பதால் அதிமுக அணிக்குத் தாவ விடுதலைச் சிறுத்தைகள் கட்சி திட்டமிட்டு வருவதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இது சட்டசபைத் தேர்தல் காலம். கொள்கைள், குறிக்கோள்கள், லட்சியங்கள் உள்ளிட்டவற்றை தூக்கி குப்பைத் தொட்டியில் போட்டு விட்டு எங்கு ஆதாயம் கிடைக்கும், யாரிடம் அதிக சீட் கிடைக்கும் என்று கட்சிகள் கணக்கு போடும் காலம்.

தனித்து மட்டுமே போட்டியிடுவோம், யாரிடமும் சேரமாட்டோம் என்று வீராவேசமாக வசனம் பேசி வந்த விஜயகாந்த்தே அதிமுகவிடம் போய் மண்டி போட்டு விட்டார்.

அதேபோல ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒரு கூட்டணிக்குத் தாவுவது என்பதை கொள்கையாகவே வைத்திருக்கும் பாமகவும் திமுக பக்கம் போய் விட்டது.

இந்த வரிசையில் விடுதலைச் சிறுத்தைகளும் அணி மாறப் போவதாக பரபரப்பு எழுந்துள்ளது.

கடந்த 2006ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் அதிமுக அணியில் இணைந்து போட்டியிட்டது விடுதலைச் சிறுத்தைகள். அப்போது 9 தொகுதிகளைக் கொடுத்தார் ஜெயலலிதா. அதில் 2 தொகுதிகளில் அக்கட்சி வெற்றி பெற்றது. தேர்தலுக்குப் பின்னர் திமுக பக்கம் போய் விட்டது. பின்னர் லோக்சபா தேர்தலில் அக்கட்சி திமுக கூட்டணியில் இருந்து போட்டியிட்டது. 2 தொகுதிகள் கிடைத்தன. அதில் தொல். திருமாவளவன் மட்டும் வெற்றி பெற்றார்.

தற்போதைய சட்டசபைத் தேர்தலிலும் திமுக அணியில்தான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இடம் பெற்றுள்ளது. தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தைகளையும் முடித்து விட்டது. பாமகவுக்கு எடுத்த எடுப்பிலேயே தொகுதிப் பங்கீட்டை முடித்து, 31 தொகுதிகளையும் கொடுத்து மற்ற கூட்டணிக் கட்சிகளை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளார் கருணாநிதி என்று பரவலான பேச்சு நிலவுகிறது.

பாமகவுக்கு நிகரான பலம் தங்களுக்கும் வட மாவட்டங்ளில் உள்ளது என்பது விடுதலைச் சிறுத்தைகளின் ஆணித்தரமான வாதம். இதை வலியுறுத்தி 15 தொகுதிகளாவது தர வேண்டும் என்று அவர்கள் திமுகவை கேட்டு வருகின்றனர். ஆனால் அந்த அளவுக்கு தர முடியாது என்பதை சமீபத்தில் திருவண்ணாமலையில் நடந்த பிச்சாண்டி மற்றும் எ.வ.வேலு இல்லத் திருமணங்களின்போது முதல்வர் கருணாநிதி மறைமுகமாக தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து விருதுநகர் மாவட்டத்தில் நடந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பிரமுகர் இல்லத் திருமண விழாவில் பேசிய திருமாவளவன், தமிழகம் முழுவதும் தலித் மக்கள் வசிக்கின்றனர். அவர்களிடையே செல்வாக்கு பெற்ற ஒரே கட்சி விடுதலைச் சிறுத்தைகள் மட்டும்தான். பாமகவைப் போல நாமும் அரசியல் அங்கீகாரம் பெற வேண்டும். அதற்கு அனைவரும் ஒற்றுமையுடன் அணி திரள வேண்டும் என்று பேசினார்.

தற்போது திமுகவிடமிருந்து எதிர்பார்த்த தொகுதிகள் கிடைக்காது என்ற வருத்தம் விடுதலைச் சிறுத்தைகளிடம் இருந்தாலும், திமுக மீது அதற்கு மேலும் பல வருத்தங்களும், ஏமாற்றங்களும் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும், இலங்கை அரசு தன்னை கொழும்பு விமான நிலையத்தோடு நிறுத்தி திருப்பி அனுப்பி வைத்து அவமானப்படுத்தியது குறித்து திமுகவோ அல்லது முதல்வர் கருணாநிதியோ கடும் கண்டனம் தெரிவிக்காததும் திருமாவளவனை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளதாக தெரிகிறது.

இதை விட முக்கியமாக பாமகவை விட தங்களை கீழாக மதிப்பதாக திமுக மீது விடுதலைச் சிறுத்தைகளுக்கு அதிக அளவில் அதிருப்தி உள்ளது. எனவே இந்த முறை பாமகவுடன் இணைந்து திமுக கூட்டணியில் சேர அவர்கள் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில்தான் அதி்முக அணிக்குப் போகலாம் என்ற எண்ணம் கட்சியினர் மத்தியில் வந்துள்ளதாக கூறப்படுகிறது.

அதிமுக தரப்பும் இப்போது எந்த முக்கிய கட்சி வந்தாலும் வரவேற்கத் தயாராக உள்ளது. மேலும், புதிய தமிழகம் கட்சி தனக்கு ஒதுக்கப்பட்ட சீட்கள் குறித்து அதிருப்தி அடைந்துள்ளது. இந்த நிலையில் அதை விட வலுவான விடுதலைச் சிறுத்தைகள் வருவதை நிச்சயம் அதிமுக ஏற்கும் என்று தெரிகிறது.

காங்கிரஸ் கட்சிக்கு தொகுதிகளை ஒதுக்கிய பிறகு விடுதலைச் சிறுத்தைகளுக்கான இடத்தை திமுக ஒதுக்கலாம் என்று தெரிகிறது. அதைப் பொறுத்து விடுதலைச் சிறுத்தைகளின் நடவடிக்கை அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஊழல் சக்தி, குடும்ப ஆட்சிகளை பாஜக வேறோடு அகற்றும்: நிதின் கட்காரி

மத்தியிலும், மாநிலத்திலும் ஊழல் சக்திகளையும், குடும்ப ஆட்சியையும் வேறொடு அகற்றுவோம் என்று பாஜக தலைவர் நிதின் கட்காரி தெரிவித்தார்.

குஜராத் மாநிலத்தை போன்று தமிழகத்திலும் பூரண மதுவிலக்கு கோரி பாஜ மகளிரணி சார்பில் நேற்று நாகர்கோவிலில் பேரணி மற்றும் போராட்டம் நடந்தது.

பேரணி முடிவில் நாகராஜா கோவில் திடலில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அகில இந்திய பாஜக தலைவர நிதின் கட்காரி பேசியதாவது,

1945-ம் ஆண்டு முதல் 65 ஆண்டுகளாக நாட்டில் பல மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்து வந்தது. தமிழகத்திலும் ஆட்சியில் இருந்தது. இங்கு காங்கிரஸ், தி்முக, அதிமுக கட்சிகள் ஆட்சியில் இருந்து வந்தன. தற்போது மத்தியில் காங்கிரஸ் ஆட்சி தான் நடக்கிறது.

நாட்டில் 10 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். இதற்கு முழு பொறுப்பை காங்கிரஸ் ஏற்க வேண்டும். நாட்டில் விலைவாசி தினமும் உயர்ந்து கொண்டே போகிறது.

பாஜக ஜனநாயக கட்சி என்பதில் பெருமை கொள்கிறேன். காங்கிரசில் நேரு, இந்திரா, ராஜீவ், சோனியா, ராகுல் என அவர்களது குடும்பத்தினர் தான் தலைவர்களாக ஆக முடியும். பிரணாப்போ, மன்மோகன்சிங்கோ கட்சி தலைவராக முடியாது. தமிழகத்திலும் குடும்ப ஆட்சி நடக்கிறது. குடும்ப ஆட்சி நடத்தி கொள்ளை அடித்து வருகின்றனர்.

ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் ராஜா உள்பட அனைவருமே ஊழல்வாதிகள்தான். ஸ்பெக்டரம், காமன்வெல்த் ஊழல் என எல்லாமே ஊழல்தான். வெளிநாட்டில் 20 லட்சம் கோடி ரூபாய் கருப்பு பணம் உள்ளது. இதனை மீட்க பாஜக பாடுபடும். இன்று மகளிரணி சார்பில் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் தலைமையில் தேர்தலை சந்திக்க உள்ளோம். வரும் 2014-ம் ஆண்டு தேர்தலில் முழுமையான வெற்றி பெறுவோம். மத்தியிலும், மாநிலத்திலும் ஊழல் சக்திகளையும், குடும்ப ஆட்சியையும் வேறொடு அகற்றுவோம் என்றார்

தொகுதிப் பங்கீடு-திமுகவுடன் தேசிய லீக், அருந்ததியர் மக்கள் கட்சி பேச்சு

சட்டசபைத் தேர்தல் தொகுதிப் பங்கீடு தொடர்பாக திமுகவுடன், தமிழ் மாநில தேசிய லீக் மற்றும் அருந்ததியர் மக்கள் கட்சி ஆகியவை இன்று பேச்சு நடத்தின.

தனது கூட்டணியில் இடம் பெற்றுள்ள பெரிய கட்சியான காங்கிரஸ் பெரும் குழப்பம் விளைவித்துள்ளதால் மற்ற கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சை தீவிரமாக்கியுள்ளது திமுக.

பாமகவுக்கு 31 தொகுதிகளை ஒதுக்கியுள்ள அக்கட்சி நேற்று இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகளை ஒதுக்கியது. இந்த மூன்று தொகுதிகளிலும் முஸ்லீம் லீக் கட்சி உதயசூரியன் தொகுதியில்தான் போட்டியிடும்.

இந்த நிலையில், இன்று தமிழ் மாநில தேசிய லீக் கட்சி மற்றும் அருந்ததியர் மக்கள் கட்சி ஆகியவற்றுடன் திமுக பேச்சு நடத்தியது.

இரு கட்சிகளின் தலைவர்களும் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக குழுவுடன் பேச்சு நடத்தினர்.

தேசிய லீக் கட்சித் தலைவர் திருப்பூர் அல்தாப் பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், திமுக கூட்டணிக்கு எங்களது ஆதரவைத் தெரிவித்துள்ளோம். திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்றார்.

அருந்ததியர் மக்கள் கட்சி சார்பில் அதன் தலைவர் வலசை ரவி பேச்சுவார்த்தையில் பங்கேற்றார்.

தொகுதிப் பங்கீடு இழுபறி: துரைமுருகன் கிண்டலால் காங். கோபம்?

தி்முக, காங்கிரஸ் இடையிலான தொகுதிப் பங்கீடு நேற்றைக்குள் முடிவாகி விடும் என்ற சூழ்நிலை பிரகாசமாக இருந்த நிலையில் திடீரென அதில் பெரும் இழுபறி ஏற்பட்டு விட்டது. இதற்கு அமைச்சர் துரைமுருகனின் பேச்சுதான் காரணம் என்று பரவலாக பேசப்படுகிறது.

தமிழக சட்டசபைத் தேர்தல் தேதிகள் விரைவில் அறிவிக்கப்படவுள்ளன. இன்னும் ஓரிரு நாளே அதற்கு உள்ளது. இந்த நிலையில் அதிமுக கூட்டணி கிட்டத்தட்ட பல முக்கிய வேலைகளை முடித்து விட்டது. தேமுதிக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு மட்டுமே சீட் ஒதுக்க வேண்டியுள்ளது. அதுதொடர்பான பேச்சுக்களும் கூட சரியான திசையில் செல்வதாக கூறப்படுகிறது.

ஆனால் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியால் பெரும் இழுபறியாக உள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு இரு கட்சிகளுக்கும் இடையே சுமூக தீர்வு ஏற்படும் நிலை ஏற்பட்டதாக தெரிகிறது. ஆனால் கடைசி நேரத்தில் அதில் பெரிய தொய்வு ஏற்பட்டு விட்டது.

இதற்கு முக்கியக் காரணம், திமுக பேச்சுவார்த்தைக் குழுவில் இடம் பெற்றிருந்த அமைச்சர் துரைமுருகன்தான் என்று கூறப்படுகிறது. அவர் கிண்டலாகப் பேசியதால் கோபமடைந்த காங்கிரஸ் ஐவர் குழுவில் இடம் பெற்றிருந்த மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரமும், ஜி.கே.வாசனும் அறிவாலயத்திலிருந்து கிளம்பிச் சென்று விட்டனராம்.

இதனால்தான் நேற்றே முடிவாகியிருக்க வேண்டிய தொகுதிப் பங்கீடு விவகாரத்திற்கு தடங்கல் ஏற்பட்டு விட்டதாம்.

நாங்கள் 200 தொகுதிகள் லோக்சபா தேர்தலில் கொடுங்கள் என்று கேட்டால் சும்மா இருப்பீர்களா, சும்மா மிரட்டாதீர்கள் என்று கிண்டலாக துரைமுருகன் கூறியதே சிக்கலுக்குக் காரணம் என்கிறார்கள்.

தங்களை திமுக தரப்பு சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லையே என்று காங்கிரஸ் மத்தியில் கோபம் எழுந்துள்ளதாம்.

அதேசமயம், இன்னும் ஓரிரு நாளில், அனேகமாக இன்றைக்குள் கூட தொகுதிப் பங்கீடு சுமூக முடிவை எட்டும் என்று திமுக, காங்கிரஸ் வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.

இந்திய ஜனநாயகக் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு


சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட முதல்கட்டமாக 25 வேட்பாளர்கள் பட்டியலை சனிக்கிழமை வெளியிட்டார் இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனர் டி.ஆர். பச்சமுத்து.
பெரம்பலூர் அருகேயுள்ள வல்லாபுரம் பிரிவுச் சாலையில், இந்திய ஜனநாயக கட்சி சார்பில், விவசாயிகள் வாழ்வுரிமை மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது.
மாநாட்டில் விவசாய சங்கத் தலைவர் நாராயணசாமி நாயுடுவின் உருவப்படத்தை திறந்துவைத்து டி.ஆர். பச்சமுத்து மேலும் பேசியது:
விவசாயிகள் முடிவெடுத்தால் வரும் அரசு விவசாயம் சார்ந்த அரசாக மாறிவிடும். தமிழகத்தில் 65 சத விவசாயிகள் உள்ளனர். ஆனால், விவசாயிகளுக்கான திட்டங்கள் எதுவுமே தீட்டப்படுவதில்லை. விவசாயிகளுக்கு அடிப்படை தேவையான மின்சாரத்தை விநியோகிக்க எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. காவிரி தண்ணீரையும் பெற்றுத்தரவில்லை.
தற்போது கூடியுள்ள கூட்டத்தை பார்த்த பிறகும், அடுத்தவர்களுக்கு துணையாக நின்று நமது திறமைகளை குறைத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை என்றார் பச்சமுத்து.
வேட்பாளர்கள் அறிவிப்பு: சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட முதல் கட்டமாக 25 வேட்பாளர்கள் பட்டியலை கட்சி நிறுவனர் டி.ஆர். பச்சமுத்து வெளியிட்டார். அதன் விவரம்:
விருத்தாசலம்- ஆர். கிருஷ்ணமூர்த்தி, குன்னம்- பி. ஜெயசீலன், அரியலூர்- சி. பாஸ்கர், லால்குடி- பார்க்கவன் பச்சமுத்து, திருநெல்வேலி- எஸ். மதன், திருச்சி கிழக்கு- எஸ்.டி. தங்கவேல், புதுக்கோட்டை- கே.பி.என். சீனிவாசன், திருவையாறு- ஜி. முத்துக்குமார், ஸ்ரீரங்கம்- தமிழரசி, காரைக்குடி- எஸ். ஆசைதம்பி, திருவெறும்பூர்- எ. எட்வின் ஜெரால்டு, துறையூர் (தனி)- க. சிங்காரம், முசிறி- கி. பன்னீர்செல்வம்- திருச்சி மேற்கு- கே.டி. அம்புரோஸ், மண்ணச்சநல்லூர்- டி.ஆர். சீனிவாசன், குளித்தலை- சித்ரா சுப்பிரமணியன், சிவகங்கை- சி. குழந்தைசாமி, உளுந்தூர்பேட்டை- எம். சுரேஷ், திருவாடானை- வி.ஆர். போஸ், பெரம்பலூர் (தனி)- எம்.கே. ரங்காஸ், மைலாப்பூர்- எஸ்.எஸ். வெங்கடேசன், கும்பகோணம்- தட்சிணாமூர்த்தி, பட்டுக்கோட்டை- லட்சுமணப்பிள்ளை.
மாநாட்டில்,கட்சியின் அமைப்புச் செயலர் வி. வெங்கடேசன், தலைமை நிலையச் செயலர் ஏ.ஆர். ரங்கபாஷ்யம், கொள்கை பரப்புச் செயலர் பி. நடராஜன், துணைத் தலைவர் ஜி. சண்முகநாதன், வழக்குரைஞரணிச் செயலர் தன. சிவசங்கரன், வணிகர் பிரிவு செயலர் ஆர். லட்சுமணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Saturday 26 February 2011

அதிமுக கூட்டணியில் விஜய் மக்கள் இயக்கத்துக்கு 10 சீட்?!

விஜய்யின் மக்கள் இயக்கமும் இந்தத் தேர்தலில் தனது பலத்தைச் சோதித்துப் பார்க்க ஆசைப்படுகிறது.

இதன் விளைவாக அவரது ரசிகர்கள் சிலர் இந்தத் தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

நடிகர் விஜய் ரசிகர் மன்றம் மக்கள் இயக்கமாக மாற்றப்பட்டு உள்ளது. அதன் மூலம் மக்கள் நலப்பணிகள் நடந்து வருகின்றன. நாகையில் மீனவர்களுக்கு எதிராக நடந்த விஜய் கண்டன கூட்டத்தையும் இந்த மக்கள் இயக்கம்தான் ஏற்பாடு செய்தது. ஏராளமான ரசிகர்கள் இந்த ஆர்ப்பாட்டத்துக்கு வந்தனர்.

அடுத்தக்கட்டமாக வருகிற சட்டமன்ற தேர்தலிலும் மக்கள் இயக்கம் நேரடியாக ஈடுபடுகிறது. இந்த இயக்கத்தின் பொறுப்பில் இருப்பவர்கள் வேட்பாளர்களாக களம் இறங்குகின்றனர். அ.தி.மு.க. கூட்டணியில் அவர்களை இறக்க பேச்சு வார்த்தைகள் நடக்கின்றன. ஜெயலலிதாவை, விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் இரண்டு முறை சந்தித்தார். இந்த சந்திப்பின் நோக்கமே சீட்டு கேட்பதுதான் என்று இப்போது தெரியவந்துள்ளது.

விஜய் ரசிகர்கள் தேர்தலில் போட்டியிடுவதை எஸ்.ஏ.சந்திரசேகரனும் உறுதிப்படுத்தியுள்ளார். அவர் கூறும்போது, "ரசிகர்களுக்கு உரிய அங்கீகாரத்தை யாராவது கொடுத்தால் அவர்களுக்கு விஜய்யின் ஆதரவு இருக்கும். அங்கீகாரம் கிடைக்கும்போது அந்த ரசிகர்களுக்காக அவர்களுடைய வெற்றிகளுக்காக ஆதரவு கொடுக்கும் கட்சிகளுக்கு விஜய்யின் ஆதரவு இருக்கும்", என்று தெளிவுபடுத்தினார்.

இதன்மூலம் ரசிகர்கள் போட்டியிட தொகுதி ஒதுக்கும் கட்சிக்கு ஆதரவாக விஜய் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவார் என்று தெரிய வந்துள்ளது.

மேலும் ஜெயலலிதாவை விஜய் விரைவில் சந்தித்து பேசுவார் என்றும், அப்போது கூட்டணி, தொகுதி ஒதுக்கீடு போன்றவை பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. விஜய்யின் மக்கள் இயக்கம் 10 தொகுதிகளில் போட்டியிட விரும்புவதாகத் தெரிகிறது.

இவற்றில் ஒரு தொகுதியில் விஜய் தந்தை எஸ் ஏ சந்திரசேகரனும் போட்டியிடுவார் என்று நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பணம் தருவதை தடுக்க களமிறங்கும் வருமான வரித்துறை

தமிழக சட்டமன்ற தேர்தலின்போது பண நடமாட்டத்தை கண்காணிக்க தேர்தல் கமிஷனுக்கு வருமான வரித்துறை உதவ உள்ளது.

இது குறித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கான வருமான வரித்துறையின் டைரக்டர் ஜெனரல் (புலனாய்வுப் பிரிவு) பி.கே.சாரங்கி சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தல் நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடைபெற உதவி செய்யுமாறு இந்திய தேர்தல் ஆணையம் வருமான வரித்துறையை கேட்டுக்கொண்டது.

இதைத்தொடர்ந்து, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள விமான நிலையங்கள், முக்கிய ரயில் நிலையங்கள், ஹோட்டல்கள், பண்ணை வீடுகள், ஹவாலா ஏஜெண்டுகள் அலுவலகம், நிதி நிறுவன புரோக்கர்கள் அலுவலகம், அடகுக் கடைகள் உள்ளிட்ட இடங்களில் பண நடமாட்டத்தை தீவிரமாக கண்காணிக்குமாறு எங்களுக்கு மத்திய நேரடி வரிகள் வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதற்காக மத்திய நேரடி வரிகள் வாரியத்திற்கும் இந்திய தேர்தல் ஆணையத்திற்கும் இடையே ஒருங்கிணைப்பு அதிகாரியாக டெல்லி வருமான வரி தலைமை கமிஷனர் அஞ்சனி குமார் நியமிக்கப்பட்டு உள்ளார்.

மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் உத்தரவை செயல்படுத்தும் வகையில் சென்னை வருமானவரி புலனாய்வு பிரிவு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. சட்டமன்ற தேர்தலையொட்டி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒவ்வொரு மாவட்டத்திலும் வருமானவரி புலனாய்வு பிரிவு உயர் அதிகாரி தலைமையில் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்படும். இதில் வருமான வரித்துறை அதிகாரிகளும், ஆய்வாளர்களும் இடம்பெறுவார்கள். கண்காணிப்பு பணிக்காக சென்னையில் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய ஒரு கட்டுப்பாட்டு அறை செயல்படும்.

மேலும் பண நடமாட்டம் மற்றும் பண பட்டுவாடா, விழாக்கள் தொடர்பாக செய்யப்படும் அதிகப்படியான செலவுகள் குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்கும் வகையில் கட்டணமில்லா தொலைபேசி எண் ஓரிரு நாளில் அறிவிக்கப்படும்.

அதிகப்படியான பணத்துடன் யாராவது பிடிபட்டால் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள். அனைத்து விமான நிலையங்களும், ரயில்வே நிலையங்களும் தீவிரமாக கண்காணிக்கப்படும்.

மேலும் ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையில் திருமணங்கள், பிரமாண்டமான கொண்டாட்டங்கள் நடத்தி, பரிசுப் பொருட்கள் வழங்கப்படலாம். அதுபோன்ற நிகழ்ச்சிகளும் கண்காணிக்கப்படும். தேர்தலில் வாக்காளர்களை கவருவதற்காக பணம் வழங்கப்பட்டால் அதைக் கண்காணித்து நடவடிக்கை எடுப்போம். அதுபோன்ற சம்பவங்கள் நடந்தால் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உடனடியாக தகவல் தெரிவிப்போம் என்றார் சாரங்கி.

பண நடமாட்டத்தை கண்காணிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள வருமான வரித்துறை தலைமை கமிஷனர் அஞ்சனிகுமார் கூறுகையில், தேர்தலில் பண நடமாட்டத்தை வருமானவரித்துறை அதிகாரிகள் மூலமாக கண்காணிக்கும் திட்டம் கடந்த ஆண்டு பிகார் சட்டமன்ற தேர்தலில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டம் வெற்றிகரமாக அமைந்ததால் தற்போது தமிழகம், புதுச்சேரி உள்ளிட 5 மாநிலங்களில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலிலும் தேர்தல் ஆணையம் இந்த திட்டத்தை செயல்படுத்துகிறது.

அதிக பணம் வைத்திருப்பவர்கள் பிடிபடும் நேரத்தில் அவர்கள் கூறும் விளக்கம் ஏற்கக்கூடியதாக இருந்தால் ஒன்றும் செய்யமாட்டோம். உரிய விளக்கம் அளிக்க முடியவில்லை என்றால் அந்த பணத்தை பறிமுதல் செய்வோம். எங்கள் நடவடிக்கை, வருமானவரி சட்டத்தின் அடிப்படையில் அமைந்திருக்கும். வேட்பாளர் சம்பந்தப்பட்ட பணமாக இருந்தால் அதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் தகவல் தெரிவிப்போம்.

கண்காணிப்பு நடவடிக்கை, தேர்தல் அறிவிப்பு வெளியாகும் நாளில் இருந்து தேர்தல் நாள் வரை தொடரும். அதிகளவிலான பணம என்றால் எவ்வளவு தொகை என்பது முடிவு செய்யப்படவில்லை. அது ரூ.20,000, 50,000 என்று இருக்கலாம். எவ்வளவு பணம் வைத்திருந்தாலும் உரிய விளக்கம் அளிக்கப்பட்டால் பிரச்சனை ஏதும் இருக்காது.

வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுப்பதுதான் எங்கள் நோக்கம். அதிக பணம் வைத்திருந்தால் சோதனைக்கு உள்ளாவோமோ என்று வியாபாரிகள், வர்த்தகர்கள் பயப்பட வேண்டாம். தவறு செய்யவில்லை என்றால் யாருக்கும் அஞ்சத் தேவையில்லை.

பண நடமாட்டம், பண பட்டுவாடா குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிப்பதற்காக அமைக்கப்படும் கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் இயங்கும். தொலைபேசி, செல்போன் மூலமாகவும், இ-மெயில், பேக்ஸ் மூலமாகவும் புகார் தெரிவிக்கலாம். ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு நடமாடும் கண்காணிப்பு குழு அமைக்கப்படும். தேவைப்பட்டால் பெரிய மாவட்டத்தில் 2 அல்லது 3 குழுக்கள் அமைக்கப்படும்.

தமிழக அரசியல்வாதிகள் புத்திசாலித்தனமாக வாக்காளர்களுக்கு பணம் கொடுத்துவிடுவார்கள் என்று சொல்கிறீர்கள். நாங்கள் அவர்களைவிட அதிபுத்திசாலிகள். வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் செயலை நாங்கள் எந்த வகையிலும் கட்டுப்படுத்த முடியும். இதற்காக எங்கு வேண்டுமானாலும் அதிரடி சோதனை மேற்கொள்ளலாம் என்றார்.

முஸ்லிம் லீக்குக்கு 3 தொகுதிகள்: கருணாநிதி அறிவிப்பு

திமுக கூட்டணியில் முஸ்லிம் லீக்குக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் இன்று முதல்வர் கருணாநிதி முன்னிலையில் கையெழுத்தானது.

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லீம் கட்சி நிர்வாகிகள் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தொகுதிப் பங்கீட்டு குழுவினருடன் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையை நடத்தினர்.

இந்த பேச்சுவார்த்தையின் போது இந்திய யூனியன் முஸ்லீம் கட்சிக்கு வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் 3 தொகுதிகள் ஒதுக்கப்படுவதாக உடன்பாடு ஏற்பட்டது. இதனை திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், ஸ்ரீதர் வாண்டையாரின் மூவேந்தர் முன்னேற்றக் கழகம் ஆகியவற்றுடன் தொகுதி பங்கீட்டுக்கான பேச்சுவார்த்தை திமுக நடத்தி வருகிறது.

இதில் பாமகவுக்கு 31 தொகுதிகளை திமுக ஒதுக்கியது. அதற்கு அடுத்தப்படியாக இந்திய யூனியன் முஸ்லீம் கட்சிக்கு 3 தொகுதிகளை திமுக ஒதுக்கியுள்ளது.

மிச்சமுள்ளது 68 தொகுதிகளே...

234 தொகுதிதகளில் 34 தொகுதிகள் இப்போது ஒதுக்கப்பட்டுவிட்டன. மீதமுள்ள 200 இடங்களில் 130 முதல் 132 வரையிலான தொகுதிகளில் திமுக போட்டியிடத் திட்டமிட்டுள்ளது. 68 - 70 இடங்கள் மட்டுமே மிச்சம் உள்ளது. இதைத்தான் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் மூமூகவுக்கு திமுக பிரித்துக் கொடுத்தாக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது!

மத்திய உள்துறை அமைச்சருக்கு தேர்தல் ஜுரம்

தேர்தல் நேரத்தில் ஆட்சியாளர்களின் குறைகளை எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டி பொதுக்கூட்டங்கள் நடத்திக் கொண்டும், அறிக்கைகளை வெளியிட்டுக் கொண்டும் இருப்பார்கள். ஆட்சியாளர்களோ விடுபட்ட பணிகளை விரைந்து முடித்து மக்களிடம் நல்ல பெயரெடுக்க முயன்று கொண்டிருப்பார்கள். இது சாதாரண கவுன்சிலர் முதல் எம்.எல்.ஏ., எம்.பி. வரை அனைவருக்கும் பொதுவானதுதான்.மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் இதற்கு விதிவிலக்கு அல்ல. சமீபகாலமாக தனது நாடாளுமன்றத் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் தன்னால் செய்யப்பட்ட பணிகள் இவை இவை எனச் சுட்டிக்காட்டி, தொடர்ந்து பத்திரிகைகளுக்கு செய்திகளை வெளியிட்டவண்ணம் உள்ளார் இவர்.சிவகங்கை, காரைக்குடி மற்றும் காளையார்கோவில் பகுதிகளில் 3 புதிய எரிவாயு விநியோகஸ்தர்களை நியமிப்பது தொடர்பாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தலைவருக்குக் கடிதம் எழுதினேன். அவர் விரைவில் பரிசீலனை செய்யவுள்ளதாகத் தெரிவித்துள்ளார் என்று ஓர் அறிக்கை.மதுரை-தொண்டி தேசிய நெடுஞ்சாலையைச் சீரமைக்க மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சருக்குக் கடிதம் அனுப்பினேன். அவரும் அதற்கான நிதியை ஒதுக்கியுள்ளார். விரைவில் இதற்கான பணிகள் தொடங்கும். காரைக்குடி தாலுகா, பனங்குடி கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என்ற தனது பரிந்துரையின் பேரில், தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் அதற்காக உத்தரவிட்டுள்ளார் என மற்றொரு அறிக்கை.தனது முயற்சியால்தான் புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தில் ரயில் முன்பதிவு மையம் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது என்று இன்னொரு அறிக்கை. புதுக்கோட்டை மாவட்டம், அரிமழம் ஒன்றியத்தில் உள்ள கீழாநிலைக்கோட்டை-உசிலம்பட்டி சாலையை தனது பரிந்துரையின்பேரில் ரூ. 8.36 லட்சம் செலவில் சீர்படுத்தும் பணி நடைபெறவுள்ளதாக மேலும் ஓர் அறிக்கை என அறிக்கைகளை வெளியிட்டுக் கொண்டே இருக்கிறார். இது தேர்தல் ஜுரத்தின் விளைவுதானோ!

திமுக-காங்கிரஸ் 2-ம் கட்டப் பேச்சு: முடிவு ஏற்படவில்லை

திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு தொடர்பாக சென்னையில் வெள்ளிக்கிழமை நடந்த இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தையில் முடிவு எதுவும் எட்டப்படவில்லை.இக் கட்சிகளுக்கு இடையே முதல்சுற்றுப் பேச்சு கடந்த 19-ம் தேதி அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. மூன்றில் ஒரு பகுதி அளவுக்கு தொகுதி ஒதுக்கீடு, ஆட்சியில் பங்கு தருவது தொடர்பாக உத்தரவாதம், குறைந்தபட்ச பொது செயல் திட்டம், அது செயல்படுத்தப்படுவதைக் கண்காணிக்க குழு உள்ளிட்ட கோரிக்கைகளை காங்கிரஸ் குழுவினர் முன்வைத்தனர்.ஏற்கெனவே பா.ம.க.வுக்கு 31 தொகுதிகள் ஒதுக்கிய நிலையில், காங்கிரஸ் கோரும் அளவுக்கு அதிகமான தொகுதிகளை ஒதுக்க முடியாத நிலை இருப்பதாக திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. காங்கிரஸ் குழுவினர் தில்லி சென்று, பேச்சுவார்த்தை பற்றி அக் கட்சித் தலைவர் சோனியா காந்தியிடம் தெரிவித்தனர்.பிறகு சென்னை திரும்பிய பிறகு இரண்டாவது சுற்றுப் பேச்சு வெள்ளிக்கிழமை இரவு 8.30 மணிக்கு தொடங்கி 9.15 மணி வரை நடந்தது.இப்போதும் தங்களின் கூடுதல் தொகுதி கோரிக்கையை காங்கிரஸ் தரப்பில் விட்டுக் கொடுக்கவில்லை என்று தெரிகிறது.இதற்கிடையில் 9 மணி அளவில் முதல்வர் கருணாநிதி அறிவாலயத்துக்குச் சென்றார். அவர் வருகை பற்றி அறிந்ததும், தொகுதி உடன்பாடு குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் பேச்சு நடந்த அரங்கிற்குச் செல்லாமல் தனது அறையில் முதல்வர் காத்திருந்தார்.பேச்சுவார்த்தை நிலவரம் குறித்து துணை முதல்வர் ஸ்டாலினும், உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடியும் முதல்வரிடம் சென்று விளக்கினர்.அதன்பிறகு பேச்சு நடந்த அரங்கிற்கு ஸ்டாலின் சென்ற சிறிது நேரத்தில் காங்கிரஸ் குழுவினர் வெளியில் வந்தனர்.அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.வீ. தங்கபாலு, இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை முடிந்துள்ளதாகவும், இந்த விவரங்களைக் கட்சித் தலைமையிடம் தாங்கள் தெரிவிக்கப் போவதாகவும் கூறினார்.அதேபோல திமுக தரப்பிலும் அவர்கள் தலைமையுடன் கலந்து ஆலோசித்த பிறகு மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை தொடரும் என்றும் தங்கபாலு குறிப்பிட்டார்.அறிவாலயத்தில் முதல்வர் இருந்தபோதிலும், காங்கிரஸ் குழுவினர் முதல்வரைச் சந்திக்கவில்லை. வெளியில் வந்தவுடன் புறப்பட்டுச் சென்றுவிட்டனர்.திமுக சார்பில் மு.க. ஸ்டாலின், டி.ஆர். பாலு, ஆர்க்காடு வீராசாமி, துரைமுருகன் ஆகியோரும், காங்கிரஸ் சார்பில் ப. சிதம்பரம், ஜி.கே. வாசன், ஜெயந்தி நடராஜன், தங்கபாலு, ஜெயக்குமார் ஆகியோரும் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர்.காங்கிரஸ் குழுவினர் சென்ற பிறகு திமுக குழுவினரோடு முதல்வர் கருணாநிதி அறிவாலயத்தில் ஆலோசனை நடத்தினார்.இழுபறி இல்லைசென்னை, பிப். 25: திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சில் இழுபறி இல்லை என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.காங்கிரஸýடன் 2-வது சுற்றுப் பேச்சுவார்த்தையில் முடிவு ஏதும் ஏற்படாத நிலையில், திமுக ஐவர் குழுவுடன் கருணாநிதி வெள்ளிக்கிழமை இரவு ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை சுமார் அரை மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது. இரவு 10.05 மணிக்கு வெளியே வந்த அவர் செய்தியாளர்களைச் சந்தித்தபோது அளித்த பதில்:திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் ஏதேனும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதா?மூன்றாவது கட்டத்துக்கு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டுள்ளதா?இழுபறி ஒன்றுமில்லை.காங்கிரஸ் எத்தனை தொகுதிகளை எதிர்பார்க்கிறது?234 தொகுதிகள் (சிரித்துக் கொண்டே...)ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையுடன் காங்கிரஸ் இருப்பதாலேயே தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டுள்ளதா?அது உங்களுடைய (செய்தியாளர்கள்) கற்பனை.அடுத்த கட்ட பேச்சுவார்த்தை எப்போது நடைபெறும்?இரண்டு நாட்களில் நடக்கும்.தொகுதிப் பங்கீடு குறித்து காங்கிரஸிடம் ஏதேனும் புதிய திட்டத்தை வகுத்துக் கொடுத்துள்ளீர்களா?அது ரகசியமானது."தில்லியில் பேசி கொள்கிறோம்'தொகுதிப் பங்கீடு தொடர்பாக தில்லியில் பேசிக் கொள்கிறோம் என்று முதல்வர் கருணாநிதி கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.காங்கிரஸ் ஐவர் குழுவினரின் கருத்துகள் குறித்து முதல்வரிடம் ஆலோசித்துவிட்டு வந்த ஸ்டாலின், தில்லியில் பேசிக் கொள்கிறோம் என்று முதல்வர் கூறியதாகத் தெரிவித்ததாக காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.

பேரவைத் தேர்தலை புறக்கணிக்க இருளர் கிராம மக்கள் முடிவு

வீட்டுமனைப் பட்டா, சாதி சான்றிதழ், குடிநீர், சாலை வசதி ஆகியன கோரி, வரும் பேரவைத் தேர்தலை புறக்கணிக்க கடலூர் மாவட்டத்தில் 7 தாலுக்காக்களில் 136 கிராமங்களில் வசிக்கும் இருளர் மக்கள் முடிவு செய்துள்ளனர்.சிதம்பரத்தை அடுத்த கிள்ளை கண்ணியம்மாள் நகரில் சர்பம் இருளர் தொழிலாளர் சங்கம் சார்பிலான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.கூட்டத்துக்கு மாநில துணைச் செயலாளர் எல்.பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் எம்.சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். மாவட்டத் தலைவர் ஆர்.குமார், துணைச் செயலாளர் கே.மாரியம்மாள், எம்.மாயவன் ஆர்,செல்வி, எம்.சரோஜா, எஸ்.மணிவண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.கூட்டத்தில் வீட்டுமனைப் பட்டா, சாதி சான்றிதழ், குடிநீர் வசதி, மயான வசதி, தெருவிளக்கு உள்ளிட்ட வசதிகள் மேற்கொள்ளாததை கண்டித்து பேரவைத் தேர்தலை புறக்கணிப்பது என முடிவு செய்யப்பட்டது. பின்னர் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

கூட்டத்தைப் புறக்கணித்த காங்கிரஸ்

விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டணிக் கட்சி கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியினரும், பாமகவினரும் கலந்து கொள்ளாததால் கட்சியினரிடையே சலசலப்பு ஏற்பட்டது.அமைச்சர் க. பொன்முடி விருப்பமனு தாக்கல் செய்ய புறப்படுவதற்கு முன்னதாக நடைபெற்ற கூட்டத்தில் திமுகவின் கூட்டணி கட்சிகளான விடுதலைச் சிறுத்தைகள், இந்திய குடியரசு கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.ஆனால் காங்கிரஸ் கட்சியும், பாமகவைச் சேர்ந்தவர்களும் கலந்து கொள்ளவில்லை. பாமகவினர் வருவதற்கு தாமதமானதால், நான்குமுனை சந்திப்பில் மேல்மலையனூர் சட்டப்பேரவை உறுப்பினர் செந்தமிழ்ச்செல்வன் தலைமையில் பாமகவினர் அமைச்சர் பொன்முடிக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்து வழியனுப்பினர்.

விழுப்புரத்தில் போட்டியிட மீண்டும் பொன்முடி விருப்ப மனு

விழுப்புரம் தொகுதியில் மீண்டும் போட்டியிடுவதற்கான விருப்ப மனுவை சென்னை அண்ணா அறிவாலயத்தில் அமைச்சர் பொன்முடி வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தார்.முன்னதாக விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.இதில் அவர் பேசியது: "உங்கள் ஆதரவோடு விருப்ப மனுதாக்கல் செய்ய உங்களை அழைத்துள்ளேன். நான் 5 முறை போட்டியிட்டு 4 முறை வெற்றிபெற்று, ஒருமுறை எதிர்க்கட்சித் தலைவராகவும், 3 முறை அமைச்சராகவும் பணியாற்றிய பெருமை உங்களைச் சேரும்.எந்த சூழ்நிலையாக இருந்தாலும் கருணாநிதிக்கு கைகொடுக்கும் மாவட்டம் இது.சிறு சிறுப் பிரச்னைகள் இருந்தாலும் அனைவரும் ஓரணியில் திரண்டு வீறுநடைபோடும் மாவட்டம். கழகம் என்ற உணர்வோடு மாவட்டம் முழுவதும் திரண்டு இருக்கிறீர்கள். மாவட்டத்திலுள்ள 11 தொகுதிகளில் எந்த தொகுதி தோழமை கட்சிக்கு என்று பேச்சு நடந்து வருகிறது. எந்த கட்சிக்கு ஒதுக்கப்பட்டாலும், கழகத்துக்கு ஒதுக்கப்பட்டது போல் பணியாற்றும் தன்மை திமுகவுக்கு உண்டு.விருப்ப மனு செய்பவர்கள் செய்யலாம். மார்ச் 7-ம் தேதி நேர்முகத் தேர்வு நடைபெறுகிறது. தோழமைக் கட்சிகளுக்கு ஒதுக்கியது போக, நம் கட்சியினருக்கு ஒதுக்குவர்.மார்ச் 27-ம் தேதி திருச்சியில் நடைபெறும் திமுக மாநாட்டில் அநேகமாக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படலாம்.கடந்த 5 ஆண்டு கால சாதனைகள் ஒவ்வொருவர் வீட்டின் கதவையும் தட்டிக் கொண்டிருக்கிறது. வேட்பாளர் யாராக இருந்தாலும் கருணாநிதியும், ஸ்டாலினும் நிற்பதாக நினைத்து பணியாற்றி 11 தொகுதிகளிலும் வெற்றிபெற வேண்டும். முதல்வருக்கு வந்துள்ள கணிப்பின்படி வடமாவட்டங்களில் நூற்றுக்கு நூறு சதவீதம் திமுக வெற்றி பெறும் நிலை உள்ளது. அதை கட்டிக்காக்க வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது' என்றார்.பின்னர் 400-க்கும் மேற்பட்ட வாகனங்களில் திமுகவினருடன் அமைச்சர் பொன்முடி சென்னைக்குச் சென்று மனுவை தாக்கல் செய்தார்.கூட்டத்தில், மாவட்ட அவைத் தலைவர் கே.எஸ். மஸ்தான், சட்டப்பேரவை உறுப்பினர்கள், நகர்மன்றத் தலைவர் இரா. ஜனகராஜ், நகரச் செயலர் பாலாஜி, கூட்டணி கட்சிகளான விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலர் வெற்றிச்செல்வன், முஸ்லிம் லீக் மாவட்டச் செயலர் எஸ்.எம். அமீர் அப்பாஸ், இந்திய குடியரசு கட்சி மாநிலத் தலைவர் எம். தாமோதரம், பொதுச் செயலர் எம்.ஜி. நாகமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

திமுகவுடன் விரைவில் தொகுதி உடன்பாடு: கார்த்தி சிதம்பரம்

காங்கிரஸ் - திமுக இடையே விரைவில் தொகுதி உடன்பாடு ஏற்படும் என்று கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில், அதிமுக முன்னாள் நிர்வாகி ஜி. ஆதிகேசவர் தலைமையில் நூற்றுக்கணக்கானோர் அதிமுகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.விழாவில் பங்கேற்ற கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களிடம் கூறியது:திமுக - காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது. 2004, 2006, 2009 தேர்தல்களில் வெற்றி பெற்ற இக்கூட்டணி, நான்காவது முறையாக வரும் பேரவைத் தேர்தலிலும் வெற்றி பெறும்.திமுகவுடன் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சு இணக்கமான முறையில் நடைபெற்று வருகிறது. சோனியா காந்தியின் அறிவுறுத்தலின்படி, அடுத்த கட்டப் பேச்சுவார்த்தையில் தொகுதி உடன்பாடு ஏற்படும். தேமுதிக போன்ற கட்சிகளை இணைத்து மூன்றாவது அணி அமைக்கும் திட்டம் எதுவும் இல்லை.தொழிற்சங்கத் தலைவரான ஆதிகேசவர் அதிமுகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்திருப்பதன் மூலம் அடித்தட்டு மக்களின் உணர்வுகள் காங்கிரஸýக்கு சாதகமாக இருப்பதை அறிய முடிகிறது.காங்கிரஸ் ஜனநாயக முறையில் செயல்பட்டு வரும் கட்சியாகும். எனவே, ஆதிகேசவர் போன்றவர்கள் கட்சிக்கும், சோனியா, ராகுல் காந்தி ஆகியோருக்கும் விசுவாசமாக இருந்து உழைத்தால் பெரிய பதவிகள் அவர்களைத் தேடி வரும் என்றார்.சென்னை மாநகராட்சி முன்னாள் துணை மேயர் கராத்தே தியாகராஜன், காங்கிரஸ் நிர்வாகிகள் கே. சிரஞ்சீவி, ஆர். தாமேதரன், டி.எல். சிவலிங்கம், என். அருள்பெத்தையா, ஒய்.வி.ஆர். ராஜூ உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.

தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு அமைப்பு

சட்டப்பேரவை பொதுத்தேர்தலுக்கான தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை தயாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது.இக்குழுவின் அமைப்பாளராக மு. நாதன், உறுப்பினர்களாக அ. ரகுமான்கான், சுப்புலட்சுமி ஜெகதீசன், டி.கே.எஸ். இளங்கோவன், அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் ஆகியோர் செயல்படுவார்கள் என்று தி.மு.க. பொதுச் செயலாளர் க. அன்பழகன் வியாழக்கிழமை வெளியிட்ட செய்தியில் தெரிவித்துள்ளார்.

தேர்தல் நேரத்தில் கிடைத்தால்தான் உண்டு!

தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் நேரம் வந்தாலும் வந்தது, அமைச்சர்களும், அதிகாரிகளும் அரசு திட்டப் பணிகளை முடுக்கிவிட்டு வரும் அதே வேளையில், கோரிக்கைகளுக்கு தீர்வு காண்பதிலும் ஊழியர் சங்கங்கள் மும்முரமாக உள்ளன.தேர்தல் நேரத்தில் எல்லா தரப்பு மக்களையும் திருப்தி அடையச் செய்யும் வகையில், ஆளும்கட்சி பல்வேறு அறிவிப்புகளையும், சலுகைகளையும் அளித்து வருவது தெரிந்ததே. அதனை பயன்படுத்திக் கொண்டு இந்த தேர்தல் நேரத்தில் கேட்டால்தான் கிடைக்கும் என்ற நோக்கத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், வருவாய்த் துறையினர் என பல்வேறு தரப்பினரும் போராட்டக் களத்தில் குதித்துள்ளனர்.இதனிடையே, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தென்னிந்திய திருச்சபையின் (சி.எஸ்.ஐ.) டி.டி.டி.ஏ. பள்ளிகளில், 2008ஆம் ஆண்டு பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு பணி அங்கீகாரம் வழங்க வேண்டும் என தென்னிந்திய சி.எஸ்.ஐ. பள்ளி ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இத்தனை நாள்களாக என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என ஆசிரியர்களிடம் கேட்டால், ""இதுவரை கேட்டும் பயனில்லை. இப்போது தேர்தல் வருவதால் சிறுபான்மை மக்களின் வாக்கு வங்கியை கருத்தில்கொண்டு கோரிக்கை நிறைவேற்றப்படலாம் என்பதை உணர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்'' என்கின்றனர்.கடந்த 17ஆம் தேதி பேராயர் கால்டுவெல் வாழ்ந்த இல்ல திறப்பு விழாவில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட சி.எஸ்.ஐ. பேராயர்கள் சார்பில் முதல்வர் கருணாநிதிக்கு "இரண்டாம் கால்டுவெல்' பட்டம் வழங்கப்பட்டது. அந்தப் பட்டம் வழங்கி மூன்று நாள்கள் ஆன பின்பும் ஆசிரியர்களின் கோரிக்கைக்கு தீர்வு ஏற்படவில்லை.இந்நிலையில், 20ஆம் தேதி சி.எஸ்.ஐ. ஆசிரியர்களின் போராட்ட அறிவிப்பை வெளியிட்டார் திருநெல்வேலி பேராயர் ஜே.ஜே. கிறிஸ்துதாஸ். அதன்படி ஆசிரியர்கள் புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தையும் மேற்கொண்டனர்.

Thursday 24 February 2011

அதிகவுடன் தேமுதிக முதற்கட்ட கூட்டணி பேச்சு


அதிமுக, தேமுதிக கூட்டணி தொடர்பான பூர்வாங்கப் பேச்சுக்கள் முடி்து விட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து விரைவில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும், தேமுதிக தலைவர் விஜயகாந்த்தும் சந்திக்கவுள்ளதாக பரபரப்பாக பேசப்படுகிறது. சட்டசபைத் தேர்தலில் எப்பாடு பட்டாவது வென்றாக வேண்டிய மிக கஷ்டமான நிலையில் இருக்கிறார் ஜெயலலிதா. இதற்காக கூட்டணியைப் பலப்படுத்த வேண்டிய நிலையிலும் அவர் உள்ளார். இதையடுத்து தேமுதிகவை தனது வலையில் இழுக்க ஜெயலலிதா தீர்மானித்திருக்கிறார். இதற்காக தேமுதிக தரப்புடன் அதிமுகவின் 2ம் கட்டத் தலைவர்கள் அளவிலான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அந்தப் பேச்சுவார்த்தை தற்போது வெற்றிகரமாக முடிந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

பண்ருட்டி ராமச்சந்திரன், பிரமேலதா விஜயகாந்த் உள்ளிட்ட தேமுதிக குழுவுடன், அதிமுக தரப்பில் சசிகலா உள்ளிட்டோர் அடங்கிய குழு பேசியுள்ளதாம். இந்தப் பேச்சுவார்த்தையின் போது தங்களுக்கு 15 சதவீத வாக்கு வங்கி இருப்பதால் அதிக சீட்களை தர வேண்டும் என தேமுதிக தரப்பு வற்புறுத்தியதாம். இந்தக் கோரிக்கையை லாவகமாக எதிர்கொண்ட அதிமுக தரப்பு அதிகபட்சம் 50 சீட்கள் வரை தரத் தயாராக இருப்பதாக கூறியுள்ளதாம். முதலி்ல இதற்கு விஜயகாந்த் தயங்கினாலும் தற்போது இதற்கு ஒத்து வர அவர் முடிவு செய்து விட்டதாக கூறப்படுகிறது. அடுத்த கட்டமாக ஜெயலலிதாவும், விஜயகாந்த்தும் விரைவில் சந்திக்கவுள்ளனராம். இதற்கு முதல் கட்டமாக ஜெயலலிதா தலைமையில் தமிழகத்தில் ஜூலை 5ம் தேதி நடக்கவுள்ள பந்த் போராட்டத்தில் தேமுதிகவையும் கலந்து கொள்ள வைக்கும் பொறுப்பு தா.பாண்டியனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாம். அவரும் விஜயகாந்த்தை இதுதொடர்பாக நேரில் சந்தித்து வற்புறுத்தவுள்ளாராம்.

இந்தப் போராட்டத்தின்போது தமிழகத்தில் அதிமுக கூட்டணி இதுதான் என்பதை மறைமுகமாக காட்டுவது ஜெயலலிதாவின் திட்டமாம். இந்த போராட்டத்திற்குப் பின்னர் முறைப்படி அதிமுக கூட்டணியை ஜெயலலிதா அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்பாக விஜயகாந்த், ஜெயலலிதாவை சந்தித்துப் பேசி விடுவார் என்று தெரிகிறது. தேமுதிக தவிர இன்னொரு முக்கிய கட்சிக்கும் அதிமுக தரப்பிலிருந்து வலை வீசப்பட்டுள்ளதாம். அந்தக் கட்சியும், அதிமுகவின் ஆஃபர் குறித்து தீவிரமாக பரிசீலித்து வருவதாக தெரிகிறது.

சட்டசபை தேர்தலில் காங்கிரஸை எதிர்ககும் சுயேட்சைகளுக்கும் ஆதரவு: சீமான்

வரும் சட்டசபை தேர்தலில் காங்கிரஸை எதிர்க்கும் சுயேட்சை வேட்பாளர்களுக்கும் ஆதரவு அளிப்போம் என்று நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டம் கோபி பெரியார் திடலில் நடந்தது. இதில் கலந்துகொண்டு சீமான் பேசியதாவது,

தமிழக மக்கள் தங்கள் உரிமைகளை எல்லாம் இழந்து நிற்கின்றனர். நீதிமன்றத் தடையை மீறி நம் கண்முன்னே ஆற்று மணல் கொள்ளைபோகிறது. கேரளா, கர்நாடகம், ஆந்திரா ஆகிய மாநிலங்களில் மணல் அள்ள அரசு தடைவிதித்துள்ளது. ஆனால் தமிழகத்தில் இருந்து கப்பல் மூலம் வெளிநாடுகளுக்கு மணல் கடத்தப்படுகிறது.

நெல் விளைந்த பூமியில் இன்று கல் முளைத்திருக்கிறது. விவசாய நிலங்கள் பொருளாதார மண்டலங்களுக்காக கையகப்படுத்தப்படுகின்றன. நெல்லும், பருப்பும் பூமியில் இருந்து தான் விளைவிக்க முடியும் என்பதை ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ளவில்லை.

தமிழகத்தில் கள்ள ஓட்டு என்பது சர்வ சாதாரணமாகி விட்டது. எனவே, வரும் தேர்தலில் கள்ள ஓட்டு போடுவதை தடுக்கும் வகையில் வெளிமாநில ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். ஈழத் தமிழர்களை அழிக்க உதவிய காங்கிரஸ் தான் எங்கள் எதிரி. ஆகையால் வரும் தோர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களை எதிர்த்து நிற்கும் சுயேட்சை வேட்பாளர்களையும் ஆதரிப்போம் என்றார்.

கடந்த சில தினங்களுக்கு முன் தான் காங்கிரஸை எதிர்த்து நிற்கும் எந்தக் கட்சியையும் ஆதிர்ப்போம் என்று சீமான் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

காங். மிரட்டலுக்கு பணிய கூடாது-கருணாநிதியிடம் தலைவர்கள் வலியுறுத்தல்

திமுக அரசின் திட்டங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. மக்கள் செல்வாக்கைப் பெற்றுள்ள இந்தத் திட்டங்கள், பாமக, விடுதலைச் சிறுத்தைகள், முஸ்லீம் லீக், கொங்கு மக்கள் கட்சி ஆகியவற்றின் துணையுடன், காங்கிரஸின் தயவும் சற்றும் தேவையின்றி தேர்தலை எதிர்கொள்ளலாம் என்று திமுக முன்னணித் தலைவர்கள், முதல்வர் கருணாநிதியிடம் தெரிவித்துள்ளதாக தெரிகிறது.

ஏதோ சொந்தமாக மிகப் பெரிய பலம் இருப்பது போல நினைத்துக் கொண்டு திமுகவுக்கு காங்கிரஸ் 3 நிபந்தனைகளை போட்டுள்ளது. அதன்படி 80 இடங்கள் வேண்டும், ஆட்சியில் பங்கு வேண்டும், குறைந்தபட்ச செயல் திட்டத்தை திமுக அறிவிக்க வேண்டும். இது திமுகவை எரிச்சல்பபடுத்தியுள்ளது.

இந்த நிலையில், கட்சியின் 2ம் கட்டத் தலைவர்கள் காங்கிரஸைத் தூக்கிப் போட வேண்டும் என்று முதல்வர் கருணாநிதியிடம் திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளதாக பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது.

திருவண்ணாமலையில் நடந்த இரண்டு திருமண விழாக்களில் கலந்து கொள்ள வந்த கருணாநிதி, அங்கு வைத்து கட்சியின் முக்கிய நிர்வாகிகள், அமைச்சர்களுடன் ஒரு ஆலோசனையை நடத்தியுள்ளார். அப்போது காங்கிரஸ் கோரிக்கைகள் குறித்து கருத்து கேட்டுள்ளார். அப்போது அவரே எதிர்பாராத வகையில், காங்கிரஸ் நமக்குத் தேவையில்லை என்று திமுக முன்னணியினர் கூறியதாக தெரிகிறது.

லோக்சபா தேர்தலில் நாம் அவர்களுக்கு 16 இடம் கொடுத்தோம். ஆனால் தங்கபாலு, மணிசங்கர அய்யர், இளங்கோவன் என முன்னணியினரைக் கூட வெற்றி பெற வைக்க முடியவில்லை அவர்களால். மேலும் அக்கட்சியில் நிலவும் கோஷ்டிப் பூசல், பணத்தை செலவிடாமல் பதுக்கியது உள்ளிட்ட பல காரணங்களால் அதிமுக கூட்டணி 9 இடங்களில் வெல்ல காங்கிரஸாரே வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்து விட்டனர்.

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை கையில் வைத்துக் கொண்டு சிபிஐ மூலம் மிரட்டல் விடுக்கிறது காங்கிரஸ். மிசாவையே நாம் பார்த்து விட்டோம். இதெல்லாம் நமக்கு மிகச் சாதாரணம். இனியும் காங்கிரஸின் மிரட்டல், நெருக்கடிகளுக்கு நாம் பணியத் தேவையில்லை.

நமது அரசின் திட்டங்கள் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. அது போதும் நமக்கு. மேலும், வடக்கில் விடுதலைச் சிறுத்தைகள், பாமக ஆகியோர் நம்மிடம் உள்ளனர். கொங்கு நாடு மக்கள் கட்சியை கூட்டணியில் சேர்த்தால் மேற்குப் பகுதிகளிலும் வெல்லலாம். அமைச்சர் அழகிரியின் பயத்தால் தென் மாவட்டத்தில் போட்டி போடவே ஜெயலலிதா பயப்படும் நிலைமை உள்ளது. எனவே காங்கிரஸின் தயவு நமக்குத் தேவையில்லை என்பதே எங்களது எண்ணம் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

காங்கிரசுக்கு கடந்த முறை 48 இடங்கள் தந்தோம். இப்போது 55 இடங்களை மட்டுமே கொடுத்தால் போதும். அதை ஏற்றால் வரட்டும், இல்லாவிட்டால் போகட்டும். மேலும் விஜய்காந்த் அதிமுகவுடன் தான் கூட்டணி அமைக்கப் போகிறார் என்பது உறுதியாகிவிட்டதால், காங்கிரசுக்கு நம்மை விட்டால் ஆளும் கிடையாது, அவர்கள் இப்போது எங்கும் போகவும் முடியாது என்றும் கூறியுள்ளனர்.

இந்த கருத்துக்களுக்கு முதல்வர் என்ன பதிலளித்தார் என்பது தெரியவில்லை. ஆனால் திமுகவினர் மத்தியில் காங்கிரஸ் மீது கடும் அதிருப்தி பரவியுள்ளது மட்டும் நிச்சயம்.

இதனால் இந்தக் கூட்டணி அமைந்தாலும் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளில் திமுகவினர் எந்த அளவுக்கு தேர்தல் வேலை செய்வார்கள் என்பதும் சந்தேகமே.

ஸ்ரீரங்கத்தில் ஜெ. போட்டியிட தொண்டர்கள் விருப்பம்

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஸ்ரீரங்கத்தில் போட்டியிடக் கோரி ஏராளமான தொண்டர்கள் மனு செய்துள்ளதால், ஜெயலலிதா, ஸ்ரீரங்கத்திலிருந்து இம்முறை போட்டியிடுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அதிமுக சார்பில் தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய மாநில சட்டசபைத் தேர்தல்களில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனுக்களைத் தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டு நேற்றுடன் அது முடிவடைந்தது.

இதுகுறித்து அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா, நடைபெற உள்ள 2011 தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தல்களில், அ.தி.மு.க. சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்புகின்றவர்கள், தங்களது வேட்பு மனுக்களை 5.2.2011 முதல் 23.2.2011 வரை கட்சி தலைமைக் அலுவலகத்தில் தாக்கல் செய்யலாம் என்று அறிவித்திருந்தார்.

ஜெ. போட்டியிடக் கோரி 1503 பேர் மனு:

அதன்படி, 23.2.2011 வரை 12,268 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதில், பொதுச் செயலாளர் ஜெயலலிதா, தங்களது தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து, தமிழ்நாட்டில் 1,503 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தாங்கள் போட்டியிடுவதற்கு வாய்ப்புகோரி, தமிழ்நாட்டில் 10,553 வேட்பு மனுக்களையும், புதுச்சேரி மாநிலத்தில் 181 வேட்பு மனுக்களையும், கேரள மாநிலத்தில் 31 வேட்பு மனுக்களையும் தாக்கல் செய்துள்ளனர்.

ரூ. 12.14 கோடி வசூல்:

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய மூன்று மாநிலங்களிலும் கழகத்தின் சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட வாய்ப்பு கோரி மொத்தம் 12,268 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் வேட்பு மனு கட்டணமாக 12 கோடியே 14 லட்சத்து 96 ஆயிரம் ரூபாய் பெறப்பட்டு உள்ளது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீரங்கத்தில் நிற்பாரா?:

ஜெயலலிதா தங்களது தொகுதியில் போட்டியக் கோரி பெரும் திரளான அதிமுகவினர் மனு செய்துள்ள நிலையில், ஸ்ரீரங்கத்தில் போட்டியிட வேண்டும் என்று கோரியே அதிகம் பேர் விருப்ம் தெரிவித்துள்ளனராம்.

ஸ்ரீரங்கம் தொகுதியில் ஜெயலலிதா போட்டியிட வேண்டும் என்று முன்னாள் அமைச்சர்கள் உள்பட சுமார் 1,500க்கும் மேற்பட்ட தொண்டர்கள் மனு கொடுத்துள்ளனர்.

இவ்வாறு ஜெயலலிதாவுக்காக ஸ்ரீரங்கத்திலிருந்து அதிக விண்ணப்பங்களை போட வைத்ததே ஜெயலலிதா தான் என்று சொல்கிறார்கள். அதற்குக் காரணமும் இருக்கிறது.

ஆண்டிப்பட்டியை தவிர்ப்பது ஏன்?:

டான்சி தீர்ப்புக்குப் பிறகு நடந்த இடைத்தேர்தலில் சுமார் 50,000 வாக்கு வித்தியாசத்தில் ஆண்டிப்பட்டியில் ஜெயலலிதா வென்றார். ஆனால், 2006ம் ஆண்டு தேர்தலில் ஜெயலலிதா வென்றபோது வாக்கு வித்தியாசம் 25,000 ஆகக் குறைந்தது. பாதி ஓட்டு எங்க போச்சு என அதிமுக அதிர்ச்சியானது. இந் நிலையில் 2009ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் ஆண்டிப்பட்டியை அடக்கிய தேனி தொகுதியில் போட்டியிட்ட அதிமுகவின் தங்கதமிழ்ச்செல்வன் படுதோல்வி அடைந்தார்.

அதற்கு முக்கிய காரணம், ஆண்டிப்பட்டியிலும் அதிமுகவுக்குக் கிடைத்த மொத்த லீடிங் ஓட்டே 5,700 தான். இதனால் இம்முறை ஆண்டிப்பட்டியே வேண்டாம் சாமி என்ற முடிவுக்கு ஜெயலலிதா வந்துவிட்டார் என்கிறார்கள். மேலும் மத்திய அமைச்சர் அழகிரியின் தேர்தல் வேலைகளும் சேர்ந்துவிட்டால் கோவிந்தா தான் என்பதால் மதுரைக்கு அந்தப் பக்கமே வேண்டாம் என்ற முடிவில் இருக்கிறாராம்.

அதே நேரத்தில் வட மாவட்டங்களிலும் பாமக இல்லாமல் நிற்பது பர்கூர் ரிசல்ட் மாதிரி ஆகிவிடும் என்பதால் அதையும் தவிர்த்து விட்டு தனது பிராமண சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் உள்ள ஸ்ரீரங்கமே தனக்கு சரி வரும் என்ற முடிவுக்கு வந்துவிட்டாராம்.

மேலும் இதை உறுதி செய்யும் வகையில் கடந்த பிப்ரவரி 5ம் தேதி அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனு தாக்கல் செய்ய நீண்ட வரிசையில் அதிமுக அலுவலகம் முன் காத்திருக்க.. சரியாக 11.46 மணிக்கு திருச்சி மாவட்டச் செயலாளர் மனோகரை அழைத்த கட்சி நிர்வாகிகள், அவரிடம் ஜெயலலிதா பெயரில் ஸ்ரீரங்கத்தில் போட்டியிட பணம் கட்டச் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே நேரத்தில் கொங்கு மண்டலத்தின் மீதும் அவருக்கு ஒரு கண் உள்ளது என்கிறார்கள்.

ஜெயலலிதா ஸ்ரீரங்கத்தில் போட்டியிடலாம் என்ற பரவலான எதிர்பார்ப்பு நிலவுகிறது. திருச்சியில் அவர் கூட்டிய பிரமாண்ட கூட்டத்தின்போது ஸ்ரீரங்கம் சென்று ரங்கநாதரை தரிசித்தார் ஜெயலலிதா. அதேபோல மீண்டும் ஒருமுறையும் அவர் அங்கு சென்றார். அப்போதே அவர் ஸ்ரீரங்கத்தில் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது நினைவிருக்கலாம்.

சேப்டிக்காக ஸ்ரீரங்கத்தில் போட்டியிட்டாலும் கூட ஆண்டிப்பட்டியிலும் அவர் போட்டியிடலாம் என்றும் கூறப்படுகிறது.

தி.மு.க - காங்கிரசு கூட்டணி இழுபறி

கூட்டணி ஆட்சி என்ற விஷயத்தில் காங்கிரஸ் பிடிவாதம் பிடித்து வரும் நிலையில், திமுக ஏற்க அதை ஏற்க திட்டவட்டமாக மறுத்து வருவதாகத் தெரிகிறது. இதனால் இந்த இரு கட்சிகளுக்கு இடையிலான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை இன்னும் வேகம் பிடிக்கவே இல்லை.

திமுக-காங்கிரஸ் சார்பில் தொகுதிப் பங்கீட்டு குழுக்கள் அமைக்கப்பட்டு அவர்கள் சில நாட்களுக்கு முன் ஒரு சுற்று பேச்சுவார்த்தையும் நடத்திவிட்ட பின்னரும் ஆரம்பத்த இடத்திலேயே இரு கட்சிகளும் நின்று கொண்டுள்ளன.

இந்த முதல் சுற்றுப் பேச்சுவார்த்தையின்போது 80 இடங்கள், கூட்டணி ஆட்சி, இத்தனை அமைச்சர் பதவிகள், குறைந்தபட்ச செயல் திட்டம் என காங்கிரஸ் தரப்பு நிபந்தனைகளை குவித்துவிட்டுப் போயுள்ளதால் கடுப்பாகிவிட்டது திமுக.

காங்கிரசுடன் கூட்டணி ஆட்சி என்பது திமுகவின் அடிப்படைக் கொள்கையான மாநில சுயாட்சிக்கே ஊறு விளைத்துவிடும் என்பதால் அப்படி ஒரு கூட்டணி தேவையா என்றே கேள்விகள் எழ ஆரம்பித்துள்ளன.

முன்பெல்லாம் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் முதல்வர் கருணாநிதியும் தொலைபேசியிலேயே பேசி தொகுதிப் பங்கீட்டை முடிவு செய்துவிடுவர். பின்னர் டெல்லியிருந்து தமிழக பொறுப்பாளர் வந்து திமுகவுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டுவிட்டுப் போவார். ஆனால், அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி வசம் முக்கிய முடிவுகள் போனதிலிருந்தே இதில் பெரிய மாற்றம் வந்துவிட்டது.

அவரது யோசனை தான் இந்த தொகுதிப் பங்கீட்டுக் குழுவே. அவரது யோசனை தான் ஆட்சியில் பங்கு என்பதும், 80 முதல் 90 இடங்கள் என்பதும், குறைந்தபட்ச செயல் திட்டம் என்பதும்.

ராசா, ஸ்பெக்ட்ரம் விவகாரத்தால் காங்கிரசிடம் விட்டுக் கொடுத்தே போக வேண்டிய நிலைக்கு திமுக தள்ளப்பட்டுள்ளது. சிபிஐ, அமலாக்கப் பிரிவு என நெருக்கடிகளை வேறு வகையாக காங்கிரஸ் தருவதும் கூட இந்த இட பேரத்துக்குத் தான் என்ற சந்தேகம் திமுகவிடம் நிச்சயமாகவே உள்ளது.

ஆனால், கொஞ்சம் விட்டுக் கொடுத்தால் காங்கிரஸ் தலைக்கு ஏறுவதை திமுகவால் நீண்டகாலம் ஜீரணிக்காது என்கிறார்கள்.

பாமகவை கூட்டணியில் சேர்க்கலாம் என்ற க்ரீன்சிக்னல் காங்கிரசிடமிருந்து வந்தவுடனேயே அவர்களை அழைத்து 31 சீட்களைத் தந்து தொகுதிப் பங்கீட்டையும் திமுக முடித்துவிட்டதை காங்கிரஸ் கோபத்துடன் பார்த்துக் கொண்டுள்ளது.

தங்களுக்கு வேண்டிய சீட்டைத் தந்துவிட்டே பாமகவிடம் திமுக தொகுதிப் பங்கீடு செய்யும் என்ற நினைப்பில் காங்கிரஸ் இருக்க, அவர்களது திட்டத்தை முறியடிக்கும் வகையில் 31 இடங்கள் பாமகவிடம் உடனடியாகத் தரப்பட்டுவிட்டன.

இப்போது எங்களிடம் இருப்பதே 203 இடங்கள். இதில் விடுதலை சிறுத்தைகள், இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக், வாண்டையாரின் கட்சி, புதிய பாரதம் கட்சிக்கு கொடுத்து போக 180 இடங்களே மிஞ்சும். இதில் உங்களுக்கு எங்கிருந்து 80, 90 இடங்கள் தருவது என்று காங்கிரசிடம் திருப்பிக் கேட்டுள்ளது துணை முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக தொகுதி்ப் பங்கீட்டுக் குழு.

எங்களுக்கு முன் ஏன் பாமகவுக்கு அவசரமாக இடங்களை ஒதுக்கினீர்கள் என்ற கோபத்தை மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரமும், வாசனும் வெளிப்படுத்தியுள்ளனர்.

மேலும் குறைந்தபட்ச செயல் திட்டம்னு சொல்றீங்களே.. அது இப்போ மத்திய அரசு கூட்டணியில இருக்கா என்று திமுக தரப்பு கேட்டது. அதற்கு காங்கிரஸ் தரப்பிடம் பதில் இல்லை.

ஆனால், போன தடவை மத்திய கூட்டணி ஆட்சியில குறைந்தபட்ச செயல் திட்டம் இருந்துச்சே என்று காங்கிரஸ் தரப்பு மடக்க... அதுல சொன்னதை எல்லாம் செஞ்சிட்டீங்களா.. சேது சமுத்திரத் திட்டத்தை அமலாக்கிட்டீங்களா என்று டி.ஆர்.பாலுவும் துரைமுருகனும் கேள்வி கேட்க காங்கிரஸ் தரப்பு அதை ரசிக்கவில்லை.

இதனால் இரு கட்சிகளுக்கும் இடையே முதல் சுற்றுப் பேச்சு சுமூகமாக நடக்கவில்லை என்பதே உண்மை என்கிறார்கள். இருந்தாலும் அதை ஸ்டாலினும் சிதம்பரமும் நிதானமாகவே கையாண்டதாகவும், நம்ம கட்சித் தலைமைகிட்ட சொல்லுவோம்.. அடுத்து அவங்க சொல்ற யோசனைப்படி மீண்டும் சந்தித்துப் பேசுவோம் என்று சொல்லிக் கலைந்துள்ளனர்.

அவங்க வரட்டும் முதல்ல என்று இப்போது இரு தரப்பும் வேறு பக்கம் பார்க்க ஆரம்பித்துவிட்டதால் தான் இரு தரப்பினருமே ஆரம்பித்த இடத்திலேயே நின்று கொண்டுள்ளனர் என்கிறார்கள்.

தேமுதிக தலைவர் விஜய்காந்த் எவ்வளவோ கோரிக்கை வைத்து விடாப்பிடியாக இருந்தபோதும் கூட்டணி ஆட்சி என்ற கோரிக்கையை ஏற்க அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா திட்டவட்டமாக நிராகரித்துவிட்டதையும், இப்போது குறைந்த இடங்களுக்கே விஜய்காந்த் கூட்டணி அமைக்க முன் வந்துள்ளதாகவும் கூறப்படுவதை சுட்டிக் காட்டும் திமுகவினர், காங்கிரஸை நாமும் இதே வகையில் தான் கையாள வேண்டும் என்கிறார்கள்.

கூட்டணி ஆட்சி குறித்து தேர்தலுக்குப் பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்ற குறைந்தபட்ச உத்தரவாதத்தையாவது வாங்கிக் கொண்டே இதில் அடுத்தகட்டமாக நகர்வது என்ற முடிவில் காங்கிரஸ் தலைமை இருப்பதாக சொல்கிறார்கள்.

இதனால் தான் ராகுலின் தமிழக வாய்சாகக் கருதப்படும் இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா போன்றவர்கள், காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட்டால் கூட தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்துவிடும் என்று பேச ஆரம்பித்துள்ளனர்.

ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற, சட்டமன்ற, வட்ட, நகர, கிராம இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய யுவராஜா, தமிழக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட்டால் கூட ஆட்சியை பிடித்து விட முடியும். வரும் உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்தே போட்டியிடும் என்றார்.

ராகுலின் குரலான யுவராஜாவின் பேச்சின் அர்த்தம் யாரையும் விட திமுகவுக்கே மிக நன்றாகப் புரியும் என்கிறார்கள் காங்கிரஸ் தரப்பில் சிரித்துக் கொண்டே. தனித்துப் போட்டி என்று சொல்லிக் கொண்டிருந்தாலும் திடீரென தேமுதிகவுடன் கைகோர்ப்பதிலும் காங்கிரசுக்கு சிக்கல் இருக்காது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனால் மீண்டும் சோனியா-முதல்வர் கருணாநிதி மட்டத்தில் ஆலோசனைகள் நடந்தால் தவிர இந்தப் பேச்சுவார்த்தைகளில் எந்த முன்னேற்றம் இருக்காது என்றும் சொல்கிறார்கள்.

இந் நிலையில் ஒரு தொலைக்காட்சி நடத்தும் விழாவுக்காக டெல்லி செல்ல இருந்த துணை முதல்வர் ஸ்டாலின் அங்கு மூத்த காங்கிரஸ் தலைவர்களுடன் ஆலோசனைகள் நடத்தி இந்த முட்டுக்கட்டையைத் தீர்க்க முயல்வார் என்று கூறப்பட்டது. ஆனால், காங்கிரஸ் தரப்பிலிருந்து சரியான சிக்னல் வராததால் அவர் தனது டெல்லி பயணத்தை ரத்து செய்துவிட்டார்.

சோனியாவுடன் காங். ஐவர் குழு திடீர் சந்திப்பு:

இந் நிலையில், திமுகவுடன் நடந்த பேச்சுவார்த்தை குறித்து கட்சித் தலைவர் சோனியா காந்தியிடம் இன்று தமிழக காங்கிரஸ் ஐவர் குழு சந்தித்து விளக்கம் கொடுத்துள்ளது.

குழுவில் இடம் பெற்றுள்ள தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், ஜி.கே.வாசன் மற்றும் ஜெயந்தி நடராஜன், ஜெயக்குமார் ஆகியோர் இந்த சந்திப்பில் பங்கேற்றனர்.

இவர்கள் தவிர சோனியாவின் அரசியல் ஆலோசகர் அகமது படேல், தமிழக காங்கிரஸ் பொறுப்பாளரான குலாம் நபி ஆசாத் ஆகியோரும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இச் சந்திப்புக்கு பின் நிருபர்களிடம் பேசிய தங்கபாலு, முதல் கட்ட பேச்சுவார்த்தையின் போது திமுகவிடம் காங்கிரஸ் கட்சியின் சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கைகள் பற்றி தங்கள் கட்சி தலைமையுடன் ஆலோசித்து தெரிவிப்பதாக திமுக குழுவினர் கூறி இருக்கிறார்கள். திமுக குழுவினர் எங்களை தொடர்பு கொண்டு அவர்கள் கட்சியின் முடிவு பற்றி தெரிவித்த பின்னர் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என்றார்.