Pages

Saturday 26 February 2011

விழுப்புரத்தில் போட்டியிட மீண்டும் பொன்முடி விருப்ப மனு

விழுப்புரம் தொகுதியில் மீண்டும் போட்டியிடுவதற்கான விருப்ப மனுவை சென்னை அண்ணா அறிவாலயத்தில் அமைச்சர் பொன்முடி வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தார்.முன்னதாக விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.இதில் அவர் பேசியது: "உங்கள் ஆதரவோடு விருப்ப மனுதாக்கல் செய்ய உங்களை அழைத்துள்ளேன். நான் 5 முறை போட்டியிட்டு 4 முறை வெற்றிபெற்று, ஒருமுறை எதிர்க்கட்சித் தலைவராகவும், 3 முறை அமைச்சராகவும் பணியாற்றிய பெருமை உங்களைச் சேரும்.எந்த சூழ்நிலையாக இருந்தாலும் கருணாநிதிக்கு கைகொடுக்கும் மாவட்டம் இது.சிறு சிறுப் பிரச்னைகள் இருந்தாலும் அனைவரும் ஓரணியில் திரண்டு வீறுநடைபோடும் மாவட்டம். கழகம் என்ற உணர்வோடு மாவட்டம் முழுவதும் திரண்டு இருக்கிறீர்கள். மாவட்டத்திலுள்ள 11 தொகுதிகளில் எந்த தொகுதி தோழமை கட்சிக்கு என்று பேச்சு நடந்து வருகிறது. எந்த கட்சிக்கு ஒதுக்கப்பட்டாலும், கழகத்துக்கு ஒதுக்கப்பட்டது போல் பணியாற்றும் தன்மை திமுகவுக்கு உண்டு.விருப்ப மனு செய்பவர்கள் செய்யலாம். மார்ச் 7-ம் தேதி நேர்முகத் தேர்வு நடைபெறுகிறது. தோழமைக் கட்சிகளுக்கு ஒதுக்கியது போக, நம் கட்சியினருக்கு ஒதுக்குவர்.மார்ச் 27-ம் தேதி திருச்சியில் நடைபெறும் திமுக மாநாட்டில் அநேகமாக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படலாம்.கடந்த 5 ஆண்டு கால சாதனைகள் ஒவ்வொருவர் வீட்டின் கதவையும் தட்டிக் கொண்டிருக்கிறது. வேட்பாளர் யாராக இருந்தாலும் கருணாநிதியும், ஸ்டாலினும் நிற்பதாக நினைத்து பணியாற்றி 11 தொகுதிகளிலும் வெற்றிபெற வேண்டும். முதல்வருக்கு வந்துள்ள கணிப்பின்படி வடமாவட்டங்களில் நூற்றுக்கு நூறு சதவீதம் திமுக வெற்றி பெறும் நிலை உள்ளது. அதை கட்டிக்காக்க வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது' என்றார்.பின்னர் 400-க்கும் மேற்பட்ட வாகனங்களில் திமுகவினருடன் அமைச்சர் பொன்முடி சென்னைக்குச் சென்று மனுவை தாக்கல் செய்தார்.கூட்டத்தில், மாவட்ட அவைத் தலைவர் கே.எஸ். மஸ்தான், சட்டப்பேரவை உறுப்பினர்கள், நகர்மன்றத் தலைவர் இரா. ஜனகராஜ், நகரச் செயலர் பாலாஜி, கூட்டணி கட்சிகளான விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலர் வெற்றிச்செல்வன், முஸ்லிம் லீக் மாவட்டச் செயலர் எஸ்.எம். அமீர் அப்பாஸ், இந்திய குடியரசு கட்சி மாநிலத் தலைவர் எம். தாமோதரம், பொதுச் செயலர் எம்.ஜி. நாகமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment