Pages

Tuesday 22 February 2011

25 தொகுதிகள் கேட்கிறது விடுதலைச் சிறுத்தைகள்

தி.மு.க. கூட்டணியில் 25 தொகுதிகளில் போட்டியிடுவதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தரப்பில் விருப்பம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அந்தக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. தி.மு.க. அணியில் பா.ம.க.வுக்கு 31 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. காங்கிரஸýடன் முதல் கட்டப் பேச்சுவார்த்தை முடிந்துள்ளது. இந்த அணியில் உள்ள மற்றொரு கட்சியான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் குழுவினருடன், துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக குழுவினர் திங்கள்கிழமை பேச்சு நடத்தினர். இதற்காக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், பொதுச்செயலாளர் ரவிக்குமார், செய்தித் தொடர்பாளர் வன்னியரசு, துணைப் பொதுச்செயலாளர் உஞ்சை அரசன், தலைமை நிலையச் செயலாளர் பாவரசு ஆகியோர் அண்ணா அறிவாலயத்துக்கு திங்கள்கிழமை வந்தனர். தி.மு.க. தேர்தல் தொகுதிப் பங்கீட்டுக் குழுவிடம் இந்த முறை 25 தொகுதிகளில் போட்டியிட விடுதலைச் சிறுத்தைகள் விரும்புவதாகக் கூறியுள்ளனர். இதில் 20 தனித் தொகுதிகளும், 5 பொது தொகுதிகளும் ஒதுக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். அ.தி.மு.க. அணியில் உங்களுக்கு 9 தொகுதிகள்தானே ஒதுக்கப்பட்டது என்று தி.மு.க. தரப்பு தெரிவித்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் தங்களது கட்சி வளர்ச்சியடைந்துள்ளது என்றும், அதற்கேற்ப தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும் என்றும் விடுதலைச் சிறுத்தைகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பா.ம.க.வுக்கு கடந்தமுறை ஒதுக்கிய அதே 31 தொகுதிகள் இந்த முறையும் ஒதுக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 2 மக்களவைத் தொகுதிகள் (12 பேரவைத் தொகுதிகள்) ஒதுக்கப்பட்டன. அதையே இப்போதும் பெற்றுக்கொள்ளுங்கள் என தி.மு.க. தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, முதல்வர் கருணாநிதியிடம் பேசிவிட்டு இறுதி முடிவை அறிவிப்பதாக தி.மு.க. குழுவினர் தெரிவிததுள்ளனர். பேச்சுவார்த்தைக்குப் பிறகு வெளியே வந்து நிருபர்களிடம் திருமாவளவன் கூறியது: தி.மு.க. கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகளுக்கான தொகுதிகள் குறித்து துணை முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான குழுவினரிடம் பேசினோம். முதற்கட்டமாக நடைபெற்ற பேச்சு மனநிறைவை அளிக்கிறது. எத்தனை தொகுதிகள், என்னென்ன தொகுதிகள் என்பது அடுத்தடுத்த சந்திப்பின்போது இறுதிசெய்யப்படும் என்றார் திருமாவளவன்.   பா.ம.க. இணைந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இணைந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார். தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுக்குப் பிறகு இதுதொடர்பாக அவர் கூறியது: பா.ம.க. இந்தக் கூட்டணிக்கு வந்திருப்பதை மனநிறைவோடு வரவேற்கிறோம். பா.ம.க.வும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் முதல்முறையாக ஒரே அணியில் தேர்தலைச் சந்திக்க உள்ளோம். வட மாவட்டங்களில் உள்ள அத்தனை தொகுதிகளிலும் இந்தக் கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்றார் திருமாவளவன்.

No comments:

Post a Comment