Pages

Monday 21 February 2011

ஆட்சியில் பங்கு: சோனியா முடிவு செய்வார்- ஜி.கே. வாசன்

புதுக்கோட்டை, பிப். 20: ஆட்சியில் பங்கு கேட்பது குறித்து கட்சித் தலைவர் சோனியா காந்திதான் முடிவு செய்வார் என்று மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜி.கே. வாசன் தெரிவித்தார்.

 இது தொடர்பாக புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை அவர் அளித்த பேட்டி: ""கடந்த 2004-ல் தொடங்கி, மக்களவைத் தேர்தல், சட்டப்பேரவைத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்கள் எனப் பல தேர்தல்களை வெற்றிகரமாகச் சந்தித்து வரும் கூட்டணி திமுக -காங்கிரஸ் கூட்டணி.
 கட்சியின் அகில இந்தியத் தலைமை மற்றும் மாநிலத் தலைமை எடுக்கும் முடிவுகளின் அடிப்படையில்தான் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இதில் ஊகங்களுக்கே இடமில்லை.
 தமிழகத்தில் ஆட்சியில் காங்கிரஸ் பங்கேற்பதா, இல்லையா என்பதை கட்சித் தலைவர் சோனியா காந்திதான் முடி செய்வார். தமிழகத்தைக் கடந்த 5 ஆண்டுகள் ஆட்சி செய்த திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணி பல்வேறு வகையான நலத் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்த்துள்ளது. இதைத்தான் எங்கள் கூட்டணியின் வெற்றிக்கு முக்கிய பலமாக கருதுகிறோம்.
 அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தைப் பொருத்த அளவில் அது தொடர்பான அனைத்து விஷயங்களையும் நாட்டு மக்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள். ஆகையால், அந்த விவகாரத்துக்குள் நான் செல்ல விரும்பவில்லை'' என்றார் வாசன்.

No comments:

Post a Comment