Pages

Saturday 26 February 2011

பணம் தருவதை தடுக்க களமிறங்கும் வருமான வரித்துறை

தமிழக சட்டமன்ற தேர்தலின்போது பண நடமாட்டத்தை கண்காணிக்க தேர்தல் கமிஷனுக்கு வருமான வரித்துறை உதவ உள்ளது.

இது குறித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கான வருமான வரித்துறையின் டைரக்டர் ஜெனரல் (புலனாய்வுப் பிரிவு) பி.கே.சாரங்கி சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தல் நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடைபெற உதவி செய்யுமாறு இந்திய தேர்தல் ஆணையம் வருமான வரித்துறையை கேட்டுக்கொண்டது.

இதைத்தொடர்ந்து, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள விமான நிலையங்கள், முக்கிய ரயில் நிலையங்கள், ஹோட்டல்கள், பண்ணை வீடுகள், ஹவாலா ஏஜெண்டுகள் அலுவலகம், நிதி நிறுவன புரோக்கர்கள் அலுவலகம், அடகுக் கடைகள் உள்ளிட்ட இடங்களில் பண நடமாட்டத்தை தீவிரமாக கண்காணிக்குமாறு எங்களுக்கு மத்திய நேரடி வரிகள் வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதற்காக மத்திய நேரடி வரிகள் வாரியத்திற்கும் இந்திய தேர்தல் ஆணையத்திற்கும் இடையே ஒருங்கிணைப்பு அதிகாரியாக டெல்லி வருமான வரி தலைமை கமிஷனர் அஞ்சனி குமார் நியமிக்கப்பட்டு உள்ளார்.

மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் உத்தரவை செயல்படுத்தும் வகையில் சென்னை வருமானவரி புலனாய்வு பிரிவு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. சட்டமன்ற தேர்தலையொட்டி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒவ்வொரு மாவட்டத்திலும் வருமானவரி புலனாய்வு பிரிவு உயர் அதிகாரி தலைமையில் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்படும். இதில் வருமான வரித்துறை அதிகாரிகளும், ஆய்வாளர்களும் இடம்பெறுவார்கள். கண்காணிப்பு பணிக்காக சென்னையில் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய ஒரு கட்டுப்பாட்டு அறை செயல்படும்.

மேலும் பண நடமாட்டம் மற்றும் பண பட்டுவாடா, விழாக்கள் தொடர்பாக செய்யப்படும் அதிகப்படியான செலவுகள் குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்கும் வகையில் கட்டணமில்லா தொலைபேசி எண் ஓரிரு நாளில் அறிவிக்கப்படும்.

அதிகப்படியான பணத்துடன் யாராவது பிடிபட்டால் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள். அனைத்து விமான நிலையங்களும், ரயில்வே நிலையங்களும் தீவிரமாக கண்காணிக்கப்படும்.

மேலும் ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையில் திருமணங்கள், பிரமாண்டமான கொண்டாட்டங்கள் நடத்தி, பரிசுப் பொருட்கள் வழங்கப்படலாம். அதுபோன்ற நிகழ்ச்சிகளும் கண்காணிக்கப்படும். தேர்தலில் வாக்காளர்களை கவருவதற்காக பணம் வழங்கப்பட்டால் அதைக் கண்காணித்து நடவடிக்கை எடுப்போம். அதுபோன்ற சம்பவங்கள் நடந்தால் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உடனடியாக தகவல் தெரிவிப்போம் என்றார் சாரங்கி.

பண நடமாட்டத்தை கண்காணிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள வருமான வரித்துறை தலைமை கமிஷனர் அஞ்சனிகுமார் கூறுகையில், தேர்தலில் பண நடமாட்டத்தை வருமானவரித்துறை அதிகாரிகள் மூலமாக கண்காணிக்கும் திட்டம் கடந்த ஆண்டு பிகார் சட்டமன்ற தேர்தலில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டம் வெற்றிகரமாக அமைந்ததால் தற்போது தமிழகம், புதுச்சேரி உள்ளிட 5 மாநிலங்களில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலிலும் தேர்தல் ஆணையம் இந்த திட்டத்தை செயல்படுத்துகிறது.

அதிக பணம் வைத்திருப்பவர்கள் பிடிபடும் நேரத்தில் அவர்கள் கூறும் விளக்கம் ஏற்கக்கூடியதாக இருந்தால் ஒன்றும் செய்யமாட்டோம். உரிய விளக்கம் அளிக்க முடியவில்லை என்றால் அந்த பணத்தை பறிமுதல் செய்வோம். எங்கள் நடவடிக்கை, வருமானவரி சட்டத்தின் அடிப்படையில் அமைந்திருக்கும். வேட்பாளர் சம்பந்தப்பட்ட பணமாக இருந்தால் அதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் தகவல் தெரிவிப்போம்.

கண்காணிப்பு நடவடிக்கை, தேர்தல் அறிவிப்பு வெளியாகும் நாளில் இருந்து தேர்தல் நாள் வரை தொடரும். அதிகளவிலான பணம என்றால் எவ்வளவு தொகை என்பது முடிவு செய்யப்படவில்லை. அது ரூ.20,000, 50,000 என்று இருக்கலாம். எவ்வளவு பணம் வைத்திருந்தாலும் உரிய விளக்கம் அளிக்கப்பட்டால் பிரச்சனை ஏதும் இருக்காது.

வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுப்பதுதான் எங்கள் நோக்கம். அதிக பணம் வைத்திருந்தால் சோதனைக்கு உள்ளாவோமோ என்று வியாபாரிகள், வர்த்தகர்கள் பயப்பட வேண்டாம். தவறு செய்யவில்லை என்றால் யாருக்கும் அஞ்சத் தேவையில்லை.

பண நடமாட்டம், பண பட்டுவாடா குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிப்பதற்காக அமைக்கப்படும் கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் இயங்கும். தொலைபேசி, செல்போன் மூலமாகவும், இ-மெயில், பேக்ஸ் மூலமாகவும் புகார் தெரிவிக்கலாம். ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு நடமாடும் கண்காணிப்பு குழு அமைக்கப்படும். தேவைப்பட்டால் பெரிய மாவட்டத்தில் 2 அல்லது 3 குழுக்கள் அமைக்கப்படும்.

தமிழக அரசியல்வாதிகள் புத்திசாலித்தனமாக வாக்காளர்களுக்கு பணம் கொடுத்துவிடுவார்கள் என்று சொல்கிறீர்கள். நாங்கள் அவர்களைவிட அதிபுத்திசாலிகள். வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் செயலை நாங்கள் எந்த வகையிலும் கட்டுப்படுத்த முடியும். இதற்காக எங்கு வேண்டுமானாலும் அதிரடி சோதனை மேற்கொள்ளலாம் என்றார்.

No comments:

Post a Comment