Pages

Thursday 24 February 2011

தி.மு.க - காங்கிரசு கூட்டணி இழுபறி

கூட்டணி ஆட்சி என்ற விஷயத்தில் காங்கிரஸ் பிடிவாதம் பிடித்து வரும் நிலையில், திமுக ஏற்க அதை ஏற்க திட்டவட்டமாக மறுத்து வருவதாகத் தெரிகிறது. இதனால் இந்த இரு கட்சிகளுக்கு இடையிலான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை இன்னும் வேகம் பிடிக்கவே இல்லை.

திமுக-காங்கிரஸ் சார்பில் தொகுதிப் பங்கீட்டு குழுக்கள் அமைக்கப்பட்டு அவர்கள் சில நாட்களுக்கு முன் ஒரு சுற்று பேச்சுவார்த்தையும் நடத்திவிட்ட பின்னரும் ஆரம்பத்த இடத்திலேயே இரு கட்சிகளும் நின்று கொண்டுள்ளன.

இந்த முதல் சுற்றுப் பேச்சுவார்த்தையின்போது 80 இடங்கள், கூட்டணி ஆட்சி, இத்தனை அமைச்சர் பதவிகள், குறைந்தபட்ச செயல் திட்டம் என காங்கிரஸ் தரப்பு நிபந்தனைகளை குவித்துவிட்டுப் போயுள்ளதால் கடுப்பாகிவிட்டது திமுக.

காங்கிரசுடன் கூட்டணி ஆட்சி என்பது திமுகவின் அடிப்படைக் கொள்கையான மாநில சுயாட்சிக்கே ஊறு விளைத்துவிடும் என்பதால் அப்படி ஒரு கூட்டணி தேவையா என்றே கேள்விகள் எழ ஆரம்பித்துள்ளன.

முன்பெல்லாம் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் முதல்வர் கருணாநிதியும் தொலைபேசியிலேயே பேசி தொகுதிப் பங்கீட்டை முடிவு செய்துவிடுவர். பின்னர் டெல்லியிருந்து தமிழக பொறுப்பாளர் வந்து திமுகவுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டுவிட்டுப் போவார். ஆனால், அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி வசம் முக்கிய முடிவுகள் போனதிலிருந்தே இதில் பெரிய மாற்றம் வந்துவிட்டது.

அவரது யோசனை தான் இந்த தொகுதிப் பங்கீட்டுக் குழுவே. அவரது யோசனை தான் ஆட்சியில் பங்கு என்பதும், 80 முதல் 90 இடங்கள் என்பதும், குறைந்தபட்ச செயல் திட்டம் என்பதும்.

ராசா, ஸ்பெக்ட்ரம் விவகாரத்தால் காங்கிரசிடம் விட்டுக் கொடுத்தே போக வேண்டிய நிலைக்கு திமுக தள்ளப்பட்டுள்ளது. சிபிஐ, அமலாக்கப் பிரிவு என நெருக்கடிகளை வேறு வகையாக காங்கிரஸ் தருவதும் கூட இந்த இட பேரத்துக்குத் தான் என்ற சந்தேகம் திமுகவிடம் நிச்சயமாகவே உள்ளது.

ஆனால், கொஞ்சம் விட்டுக் கொடுத்தால் காங்கிரஸ் தலைக்கு ஏறுவதை திமுகவால் நீண்டகாலம் ஜீரணிக்காது என்கிறார்கள்.

பாமகவை கூட்டணியில் சேர்க்கலாம் என்ற க்ரீன்சிக்னல் காங்கிரசிடமிருந்து வந்தவுடனேயே அவர்களை அழைத்து 31 சீட்களைத் தந்து தொகுதிப் பங்கீட்டையும் திமுக முடித்துவிட்டதை காங்கிரஸ் கோபத்துடன் பார்த்துக் கொண்டுள்ளது.

தங்களுக்கு வேண்டிய சீட்டைத் தந்துவிட்டே பாமகவிடம் திமுக தொகுதிப் பங்கீடு செய்யும் என்ற நினைப்பில் காங்கிரஸ் இருக்க, அவர்களது திட்டத்தை முறியடிக்கும் வகையில் 31 இடங்கள் பாமகவிடம் உடனடியாகத் தரப்பட்டுவிட்டன.

இப்போது எங்களிடம் இருப்பதே 203 இடங்கள். இதில் விடுதலை சிறுத்தைகள், இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக், வாண்டையாரின் கட்சி, புதிய பாரதம் கட்சிக்கு கொடுத்து போக 180 இடங்களே மிஞ்சும். இதில் உங்களுக்கு எங்கிருந்து 80, 90 இடங்கள் தருவது என்று காங்கிரசிடம் திருப்பிக் கேட்டுள்ளது துணை முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக தொகுதி்ப் பங்கீட்டுக் குழு.

எங்களுக்கு முன் ஏன் பாமகவுக்கு அவசரமாக இடங்களை ஒதுக்கினீர்கள் என்ற கோபத்தை மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரமும், வாசனும் வெளிப்படுத்தியுள்ளனர்.

மேலும் குறைந்தபட்ச செயல் திட்டம்னு சொல்றீங்களே.. அது இப்போ மத்திய அரசு கூட்டணியில இருக்கா என்று திமுக தரப்பு கேட்டது. அதற்கு காங்கிரஸ் தரப்பிடம் பதில் இல்லை.

ஆனால், போன தடவை மத்திய கூட்டணி ஆட்சியில குறைந்தபட்ச செயல் திட்டம் இருந்துச்சே என்று காங்கிரஸ் தரப்பு மடக்க... அதுல சொன்னதை எல்லாம் செஞ்சிட்டீங்களா.. சேது சமுத்திரத் திட்டத்தை அமலாக்கிட்டீங்களா என்று டி.ஆர்.பாலுவும் துரைமுருகனும் கேள்வி கேட்க காங்கிரஸ் தரப்பு அதை ரசிக்கவில்லை.

இதனால் இரு கட்சிகளுக்கும் இடையே முதல் சுற்றுப் பேச்சு சுமூகமாக நடக்கவில்லை என்பதே உண்மை என்கிறார்கள். இருந்தாலும் அதை ஸ்டாலினும் சிதம்பரமும் நிதானமாகவே கையாண்டதாகவும், நம்ம கட்சித் தலைமைகிட்ட சொல்லுவோம்.. அடுத்து அவங்க சொல்ற யோசனைப்படி மீண்டும் சந்தித்துப் பேசுவோம் என்று சொல்லிக் கலைந்துள்ளனர்.

அவங்க வரட்டும் முதல்ல என்று இப்போது இரு தரப்பும் வேறு பக்கம் பார்க்க ஆரம்பித்துவிட்டதால் தான் இரு தரப்பினருமே ஆரம்பித்த இடத்திலேயே நின்று கொண்டுள்ளனர் என்கிறார்கள்.

தேமுதிக தலைவர் விஜய்காந்த் எவ்வளவோ கோரிக்கை வைத்து விடாப்பிடியாக இருந்தபோதும் கூட்டணி ஆட்சி என்ற கோரிக்கையை ஏற்க அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா திட்டவட்டமாக நிராகரித்துவிட்டதையும், இப்போது குறைந்த இடங்களுக்கே விஜய்காந்த் கூட்டணி அமைக்க முன் வந்துள்ளதாகவும் கூறப்படுவதை சுட்டிக் காட்டும் திமுகவினர், காங்கிரஸை நாமும் இதே வகையில் தான் கையாள வேண்டும் என்கிறார்கள்.

கூட்டணி ஆட்சி குறித்து தேர்தலுக்குப் பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்ற குறைந்தபட்ச உத்தரவாதத்தையாவது வாங்கிக் கொண்டே இதில் அடுத்தகட்டமாக நகர்வது என்ற முடிவில் காங்கிரஸ் தலைமை இருப்பதாக சொல்கிறார்கள்.

இதனால் தான் ராகுலின் தமிழக வாய்சாகக் கருதப்படும் இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா போன்றவர்கள், காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட்டால் கூட தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்துவிடும் என்று பேச ஆரம்பித்துள்ளனர்.

ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற, சட்டமன்ற, வட்ட, நகர, கிராம இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய யுவராஜா, தமிழக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட்டால் கூட ஆட்சியை பிடித்து விட முடியும். வரும் உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்தே போட்டியிடும் என்றார்.

ராகுலின் குரலான யுவராஜாவின் பேச்சின் அர்த்தம் யாரையும் விட திமுகவுக்கே மிக நன்றாகப் புரியும் என்கிறார்கள் காங்கிரஸ் தரப்பில் சிரித்துக் கொண்டே. தனித்துப் போட்டி என்று சொல்லிக் கொண்டிருந்தாலும் திடீரென தேமுதிகவுடன் கைகோர்ப்பதிலும் காங்கிரசுக்கு சிக்கல் இருக்காது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனால் மீண்டும் சோனியா-முதல்வர் கருணாநிதி மட்டத்தில் ஆலோசனைகள் நடந்தால் தவிர இந்தப் பேச்சுவார்த்தைகளில் எந்த முன்னேற்றம் இருக்காது என்றும் சொல்கிறார்கள்.

இந் நிலையில் ஒரு தொலைக்காட்சி நடத்தும் விழாவுக்காக டெல்லி செல்ல இருந்த துணை முதல்வர் ஸ்டாலின் அங்கு மூத்த காங்கிரஸ் தலைவர்களுடன் ஆலோசனைகள் நடத்தி இந்த முட்டுக்கட்டையைத் தீர்க்க முயல்வார் என்று கூறப்பட்டது. ஆனால், காங்கிரஸ் தரப்பிலிருந்து சரியான சிக்னல் வராததால் அவர் தனது டெல்லி பயணத்தை ரத்து செய்துவிட்டார்.

சோனியாவுடன் காங். ஐவர் குழு திடீர் சந்திப்பு:

இந் நிலையில், திமுகவுடன் நடந்த பேச்சுவார்த்தை குறித்து கட்சித் தலைவர் சோனியா காந்தியிடம் இன்று தமிழக காங்கிரஸ் ஐவர் குழு சந்தித்து விளக்கம் கொடுத்துள்ளது.

குழுவில் இடம் பெற்றுள்ள தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், ஜி.கே.வாசன் மற்றும் ஜெயந்தி நடராஜன், ஜெயக்குமார் ஆகியோர் இந்த சந்திப்பில் பங்கேற்றனர்.

இவர்கள் தவிர சோனியாவின் அரசியல் ஆலோசகர் அகமது படேல், தமிழக காங்கிரஸ் பொறுப்பாளரான குலாம் நபி ஆசாத் ஆகியோரும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இச் சந்திப்புக்கு பின் நிருபர்களிடம் பேசிய தங்கபாலு, முதல் கட்ட பேச்சுவார்த்தையின் போது திமுகவிடம் காங்கிரஸ் கட்சியின் சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கைகள் பற்றி தங்கள் கட்சி தலைமையுடன் ஆலோசித்து தெரிவிப்பதாக திமுக குழுவினர் கூறி இருக்கிறார்கள். திமுக குழுவினர் எங்களை தொடர்பு கொண்டு அவர்கள் கட்சியின் முடிவு பற்றி தெரிவித்த பின்னர் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என்றார்.

No comments:

Post a Comment