Pages

Tuesday 22 February 2011

சட்டசபை தேர்தலில் காங்கிரசை எதிர்க்கும் கட்சிக்கே ஆதரவு: சீமான்

வரும் சட்டசபை தேர்தலில் காங்கிரஸை எதிர்க்கும் கட்சிக்கு தான் நாங்கள் ஆதரவு அளிப்போம் என்று நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டம் நேற்று கோவை சிவானந்தா காலனியில் நடந்தது. அதில் சீமான் கலந்து கொண்டு பேசியதாவது,

காங்கிரஸ் கட்சியை ஒழித்துக் கட்டுவது தான் எங்கள் கனவு. இலங்கையில் தமிழ் இன அழிவுக்கு காரணமே காங்கிரஸ் தான். எனவே, அக்கட்சியை வீழ்த்த துடித்துக் கொண்டிருக்கிறோம்.

வரும் சட்டசபை தேர்தலில் காங்கிரசை எதிர்க்கும் கட்சிக்கே நாங்கள் ஆதரவு அளிப்போம். காங்கிரசை எதிர்ப்பதனால் ஜெயலிதாவுக்கு ஆதராக போய்விடுமே என்றால் இரட்டை இலைக்கு ஓட்டு கேட்பதால் சிறுமை வந்துவிடாது. மக்களை காங்கிரசின் கை சின்னத்தில் ஓட்டுப் போடாதீர்கள் என்று சொல்லும்போது, மாறாக எந்த சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்பதை சொல்லித் தான் ஆக வேண்டும்.

அதற்காக அதிமுகவுக்கு ஓட்டு கேட்பதில் சிறுமை ஒன்றும் இல்லை என்கிறோம். காங்கிரஸை வீழ்த்துவது தான் எங்கள் கட்சியின் முதல் பயணம். தமிழன் இன்னும் உயிரோடுதான் இருக்கிறான் என்பதை காங்கிரசுக்கு புரிய வைக்க வேண்டும் என்றார்.

முன்னதாக சீமான் நிருபர்களிடம் கூறியதாவது,

மீனவர்களுக்காக திமுக ஆர்பாட்டம் நடத்தியதெல்லாம் தேர்தல் வருவதால் நடத்தப்படும் நாடகம். வரும் தேர்தலில் திமுகவை மீனவர்கள் வீழ்த்துவார்கள்.

இலங்கை அரசு திட்டமிட்டே தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த பிரச்சனை குறித்து இந்திய வெளியுறவு துறை செயலாளர் நிருபமா ராவ் இலங்கை சென்று பேச்சுவார்த்தை நடத்திய பிறகும் தாக்குதல் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இந்தச் செயல் இலங்கை இந்தியாவின் குரலை மதிக்கவில்லை என்பதையே காட்டுகிறது. 

சட்டசபை தேர்தலில் காங்கிரசுக்கு எதிராக பிரசாரம் செயவதோடில்லாமல் அக்கட்சியை தோற்கடிப்போம். முதல்வர் பதவிக்கு கருணாநிதி வருவாரா? அல்லது ஜெயலலிதா வருவாரா? என்று கவலை இல்லை.

காங்கிரசை எதிர்தது நிற்கும் வலிமையான கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரம் செய்வோம். பா.ம.க., விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு எங்களுடைய ஆதரவும் இல்லை. எதிர்ப்பும் இல்லை என்றார்.

No comments:

Post a Comment