Pages

Tuesday 22 February 2011

திணறும் தேர்தல் பிரிவு அலுவலகங்கள்!

காலிப் பணியிடங்களை நிரப்பாததால், அதிகரித்துள்ள பணிச்சுமை காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் தேர்தல் பிரிவு அலுவலகங்கள் திணறி வருகின்றன. தமிழக சட்டப் பேரவைக்கான பொதுத் தேர்தல் வரும் மே 10 அல்லது 13-ம் தேதி நடைபெற வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து மார்ச் 1-ல் அறிவிப்பு வெளியாகும் என்று தெரியவந்துள்ளது. கட்டுக் கட்டாக குவியும் விண்ணப்பங்கள்: இதைத் தொடர்ந்து, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்னொரு வாய்ப்பாக தமிழகம் முழுவதும் பெயர் சேர்த்தல், நீக்குதல் உள்ளிட்ட திருத்தப் பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன. இதற்காக, அனைத்து மாவட்டங்களிலும் உள்ள தேர்தல் அலுவலகங்களில் ஆயிரக் கணக்கான விண்ணப்பங்கள் கட்டுக்கட்டாக குவிந்து வருகின்றன. சென்னையில் பெயர் சேர்த்தல், திருத்தம் (படிவம் - 6, 8 ஆகியவை) செய்வதற்காக மட்டும் இதுவரை 40 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதையடுத்து, இந்த விண்ணப்பங்களில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்கள் சரிதானா என்று மனுதாரரின் முகவரிக்குத் தேர்தல் பிரிவு அலுவலர்கள் நேரில் சென்று ஆய்வு செய்யும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வாக்குச் சாவடிகளில் ஆய்வு: தமிழகம் முழுவதும் அனைத்துத் தொகுதிகளிலும் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட இடங்களில் 54,010 வாக்குச்சாவடிகள் ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் 3 ஆயிரத்து 225 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. வாக்குச் சாவடிகளில் வாக்காளர்களுக்கான அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையங்களில் தேர்தல் ஆவணங்கள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பராமரிக்க பாதுகாப்பு அறைகள் குறித்து ஆய்வு செய்யும் பணிகளும் தீவிரமாக நடைபெறுகின்றன. இந்த நிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை முதல் கட்டமாக சோதனை செய்யும் பணியும் முழுவீச்சில் நடைபெறுகிறது. ஆனால், இந்தப் பணிகளை நிறைவேற்ற போதிய அலுவலர்கள், பணியாளர்களை நியமிப்பதில் இன்னமும் மந்த நிலையே நீடிக்கிறது. உதவித் தேர்தல் அலுவலர் காலி பணியிடங்கள்: தமிழகத்தில் அனைத்துத் தொகுதிகளிலும் தேர்தல் பணிகளை நிறைவேற்ற போதிய அளவில் உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உள்பட 2-ம் நிலை, 3-ம் நிலை அலுவலர்கள், இதர பணியாளர்களை நியமிப்பதில் இதுவரை தேக்க நிலை நீடிக்கிறது. சென்னையில் ராதாகிருஷ்ணன் நகர், துறைமுகம், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி, சைதாப்பேட்டை, தியாகராயநகர், மயிலாப்பூர், வேளச்சேரி ஆகிய பேரவைத் தொகுதிகளுக்கு உதவித் தேர்தல் அலுவலர் பணியிடங்கள் இன்னமும் காலியாக உள்ளன. தமிழகம் முழுவதும் வாக்குச் சாவடி அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் பலர் சென்னை மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் அலுவலர்கள். இவர்கள் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு, சொத்து வரி வசூல் உள்ளிட்ட பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் பிரிவு அலுவலகங்களிலும்,அந்தந்த மண்டல அலுவலகங்களிலும் தேர்தல் தொடர்பான பல்வேறு பணிகளை நிறைவேற்ற, தாற்காலிகமாக, பிரிவு எழுத்தர்கள் (செக்ஷன் ரைட்டர்ஸ்) நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்குக் குறைந்தபட்ச தினக்கூலியாக ரூ. 133 மட்டுமே வழங்கப்படுகிறது. இந்தப் பணியிடங்களுக்கு ஆள்களை நியமிப்பதிலும் பற்றாக்குறை நிலவுகிறது. பழைய விதிகளால் காகிதத்துக்கு வீண் செலவு: தேர்தல் நேரத்தில் பேரவைத் தொகுதிகள் வாரியாக வாக்காளர் பட்டியல் தமிழில் 100 பிரதிகளும், ஆங்கிலத்தில் 50 பிரதிகளும் அச்சிடப்படுவது பல ஆண்டுகளாக வழக்கத்தில் உள்ளது. இதில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு தலா 2 பிரதிகளும், தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு ஒரு சில பிரதிகளும் வழங்கப்படும். இப்போது வாக்காளர் பட்டியல் விவரங்கள் அனைத்தும் குறுந்தகடுகளில் (சி.டி.) பதிவு செய்யப்படுகின்றன. இதிலிருந்து தேவைப்பட்டால் குறுகிய காலத்தில் தேவையான எண்ணிக்கையில் பிரதிகளைப் பெற நவீன தொழில்நுட்ப வசதிகள் உள்ளன. ஆனால், அச்சு இயந்திர (டிரெடில் பிரிண்டிங் மிஷின்) காலத்தில் இருந்து இப்போது வரை வாக்காளர் பட்டியல் பிரதிகள் பல ஆயிரக் கணக்கில் ஒவ்வொரு தொகுதிகளிலும் அச்சிடப்பட்டு, பராமரிப்பின்றி வீணடிக்கப்படுகிறது. இதனால், ஒவ்வொரு தேர்தலின்போதும், பல கோடி ரூபாய் அளவுக்கு தேவையற்ற நிதிச் செலவும், காகிதச் செலவும் ஏற்படுகிறது. சூழல் பாதுகாப்புக்காகவும் காகிதப் பயன்பாட்டை பூஜ்யமாகக் குறைக்கவும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அறிமுகப்படுத்திய தேர்தல் ஆணையம் இதுகுறித்து தனிக் கவனம் செலுத்துமா?

No comments:

Post a Comment