காங்கிரசுக் கடசிக்கு எதிராகப் பத்துத் தொகுதிகளில் கிடைத்த பட்டறிவும் படிப்பிணையும் நம்முடன் பகிர்ந்துகொள்கிறார் மள்ளர் மீட்பு களத்தின் தலைவர் திரு. செந்தில் மள்ளர்
தாய் நிலமாம் தமிழ்மண்ணிலிருந்து எம்மினத்தின் வரலாற்றுப் பெரும்பகையான காங்கிரசுக் கட்சியை அழித்து, அகற்றி இனமானம் காக்கும் கடமையில் மள்ளர் மீட்புக் களத்தின் அனுபவங்களை ஆற்றுப்படுத்துகிறேன். சாதி, இனம் என்கிற எல்லைகளைக் கடந்து மனிதன், மனிதநேயம் என்பதையும் கடந்து எந்தவொரு உயிரினங்களும் இவ்வாறு கொன்று குவிக்கப்படுவதை உணர்ச்சியுள்ள மனிதன் ஒருபோதும் அனுமதிக்கமாட்டான். மரபுவழிப் போருக்கு முற்றிலும் மாறாக சர்வதேசமே தடைசெய்த வேதியியல் குண்டுகளை வீசி ஒரே நேரத்தில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களையும், போராளிகளையும் கரிக்கட்டையாக்கி "பாதுகாப்பு வலயத்திற்குள் அடைத்து" பிஞ்சுப்பிள்ளைகள், பெண்கள், பெரியோர்கள் என இரண்டு லட்சத்திற்கும் மேலான ஈழத்தமிழ் உறவுகளின் உயிரைக்குடித்த இத்தாலிய இழிமகள் சோனியாவின் தலைமையிலான காங்கிரசுக் கட்சியைக் கருவறுத்தே ஆகவேண்டும் என்னும் உறுதியேற்று அந்தக்கட்சி போட்டியிடும் 63 தொகுதிகளில் விளாத்திகுளம்,கடையநல்லூர், வாசுதேவநல்லூர், திருவைகுண்டம், விருதுநகர், பரமக்குடி, இராமநாதபுரம், வால்பாறை, திருத்துறைப்ழுண்டி கோவை ஆகிய 10 தொகுதிகளைத் தேர்ந்தெடுத்து தேர்தல் பணி செய்யத் திட்டமிட்டோம்.
என் தந்தை ஒரு ஆசிரியர். காங்கிரசுக் கட்சியின் வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டவர். நேரு, காந்தி, இந்திரா, காமராசர், கக்கன் ஆகிய தலைவர்கள் மீது அளவுகடந்த அன்பும், மதிப்பும் கொண்டிருந்தவர். எனது மாமனார் ஒரு காங்கிரசுக் குடும்பத்தில் பிறந்தவர். அவரின் தாய்மாமனார்கள் இரண்டு பேர் ஓட்டப்பிடாரம் தொகுதியில் காங்கிரசுக் கட்சியின் சார்பாக சட்டமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். அன்றைய காலகட்டத்தில் அந்தக் கட்சி இந்த மக்களுக்குத் தேவைப்பட்டுள்ளது. ஆனால் இன்று அந்தக்கட்சி ஒழிக்கப்படவேண்டிய ஒன்று என்பதை தமிழின உறவுகள் உணர்ந்தாக வேண்டும்.
மார்ச் 30 இல் முதன்முதலாக விளாத்திகுளம் தொகுதியில் எங்களின் வேலையைத் தொடங்கினோம். பல்வேறு சிற்றூர்களுக்கும் பயணித்தோம் வேளாண்தொழிலிலும், வீட்டு வேலைகளிலும் ஈடுபட்டுக்கொண்டிருந்த பலநூறு மக்களைச் சந்தித்தோம் அவர்களை ஒருகணம் சிந்திக்கவும் செய்தோம். துண்டறிக்கைகளை எமது மக்களின் கைகளில் கொடுத்து குருதிக்கரை படிந்த காங்கிரசுக் கட்சியின் கைகளை துண்டாடினோம். அன்றிரவு விளாத்திகுளம் நகரில் தெருத்தெருவாக கடைவீதிகளில் துண்டறிக்கைகளை விளம்பினோம். ஓரிடத்தில் ஐந்தாறு பேர் கூடிநின்று பேசிக்கொண்டிருந்தனர். "தமிழினத்தை அழித்தொழித்த காங்கிரசுக் கட்சியைக் கருவறுப்போம்" என தலைப்பிடப்பட்ட துண்டறிக்கைகளை அவர்களிடம் கொடுத்தபோது அந்த ஐந்தாறு கிழவர்களும் தள்ளாடும் வயதிலும் கொதித்தனர். குதித்தெழுந்தனர். காங்கிரசுக் கட்சியின் அந்த ஒட்டுமொத்த நகர உறுப்பினர்களும் கெட்ட சொற்களால் எங்களைத் திட்டத்தொடங்கினர். என்னோடு வந்த தம்பிகளிடமிருந்து எதிர்வினை நிகழவே அடங்கிக் கொண்டனர். தொடர்ந்து நாங்கள் தெருவீதிகளிலும், நகரப்பேருந்துகளிலும் மக்களைச் சந்தித்து இரத்தக்கரை படிந்த காங்கிரசின் கையை முறிக்குமாறு உரிமையோடு வேண்டுகோள் விடுத்து அன்றைய பரப்புரையை அத்தோடு முடித்துக் கொண்டோம். மறுநாள் மார்ச் 31 இல் காங்கிரசுக் கட்சிக்கு எதிராக களத்தில் நின்ற வேட்பாளர் எங்களைச் சந்தித்து எங்களின் பரப்புரைப்
பயணத்திற்கான உதவிகளைச் செய்து ஊக்கப்படுத்தியதோடு உற்சாகமாக எங்களிடமிருந்து 1000 துண்டறிக்கைகளை அவரே கேட்டுப் பெற்றுக்கொண்டார். எங்களின் பயணம் தொடர்ந்தது பல ஊர்களுக்குச் சென்று மக்களைச் சந்தித்து பரப்புரையை மேற்கொண்டோம். துண்டறிக்கைகளைக் கண்டதும் தொடர்ந்து வாழ்த்துச் செய்திகள் எமக்கு வந்துகொண்டிருந்தன. அதில் ஒரு அலைபேசி தொடர்பில் "அய்யா நானும் ஒரு தமிழன் தான். நீங்கள், உங்கள் சாதனைகளைச் சொல்லி ஓட்டுக் கேளுங்கள் எங்களை வேதனைப்படுத்தாதீர்கள்" என்று ஒரு பெரியவர் பேசிப்புலம்பினார். தொடர்ந்து அவர் இந்திராகாந்தி குடும்பத்தையே நீங்கள் அங்கப்படுத்திவிட்டீர்கள் என்று வருந்தினார். அதற்கு நாம், நாங்கள் அந்தக் குடும்பத்தை அசிங்கப்படுத்தவில்லை. அந்தக் குடும்பத்தில் உள்ளவர்களின் பிழையான, கீழ்மையான அனுகுமுறையே அந்தக் குடும்பத்தை அசிங்கப்படுத்திவிட்டது என்றோம். நாங்கள் காந்தியவாதிகள் எங்களைப்பார்த்து காங்கிரசின் கையை முறியுங்கள் என்று வன்முறையாக எழுதியுள்ளீர்களே? என்றார் அந்தப் பெரியவர், நாங்கள் காங்கிரசுக் கட்சியின்
கரைபடிந்த கைகளைத்தான் முறிக்கச் சொன்னோமே தவிர காங்கிரசுக் கட்சிக்காரர்களின் கைகளை முறிக்கச் சொல்லவில்லை. இதற்கே இப்படித் துடிக்கிற நீங்கள் ஈழத்தில் எங்கள் உறவுகள் கொல்லப்பட்டபோது என்ன செய்தீர்கள் என்றேன் அதற்கு அவர் பதிலளிக்க முடியாமல் திக்கற்றுத் திணறினார். நானும் தமிழன் தானய்யா என்றார். அதற்கு நான் மீண்டும் மீண்டும் அந்தத் துண்டறிக்கையை வாசியுங்கள், யோசியுங்கள் நீங்கள் உண்மையான தமிழனாகவே ஆகிவிடுவீர்கள் அதன்பின் நாங்கள் செய்கின்ற வேலையை நீங்களே செய்வீர்கள் என்றேன். நீங்களும் தமிழன் என்றால் மரியாதைக்குரிய காந்தியவாதி தன்மானமுள்ள தமிழன் தமிழருவி மணியன் போல் அந்தக் கொலைகாரக் காங்கிரசிடமிருந்து உறவை அறுத்துக்கொண்டு வெளியேறி வாருங்கள் எங்களுக்கு ஆலோசனை கூறுங்கள். எங்களை வழிநடத்துங்கள் அங்கிருந்துகொண்டு நீங்கள் என்ன சொன்னாலும் அதைக்கேட்கும் நிலையில் நாங்கள் இல்லை என்று அந்தப் பெரியவருக்கு விடைகொடுத்தேன். வியாத்திகுளம் தொகுதியில் 7000 துண்டறிக்கைகள் வேலைசெய்துகொண்டிருக்கிறது. தொடர்ந்து தொடர்புகள் வந்தவண்ணம் உள்ளன.
ஏப்ரல் 1 இல் கடையநல்லூர் தொகுதியில் களம் கண்டோம் 4000 துண்டறிக்கைகள் நாலா திகையிலும் மக்களிடம் பரப்பினோம். பற்றிக்கொண்டது பகையை எரிக்கும் நெருப்பு. தமிழ் படர்ந்த நெஞ்சங்கள் வஞ்சகக் காங்கிரசை வீழ்த்தி விரட்டியடிக்க வேண்டுமென்று அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசுவது நெஞ்சுக்கு நிம்மதியைத் தருவதாக இருந்தது. ஏப்ரல் 2, 3 தேதிகளில் வாசுதேவநல்லூர் தொகுதியில் பரப்புரையை மேற்கொண்டோம். காங்கிரசுக் கட்சிக்கு எதிரணியில் உள்ளவர்கள் எங்களுக்கு ஆதரவாக இருந்தனர். ஆனால் எதிர்க் கட்சியின் வேட்பாளரோ சவத்திற்குச் சமமாகக் கிடந்தார். எங்களைக் கண்டுகொள்ளவில்லை நாங்களும் அதைப் பொருட்படுத்தாமல் அந்தத் தொகுதியில் 6000 துண்டறிக்கைகளைப் பரப்பினோம். அந்தத் தொகுதிக்குட்பட்ட புளியங்குடியில் காங்&திமுக கூட்டணியில் உள்ள "பூரண மதுவிலக்குக் கொள்கையை வலியுறுத்தும்" பாட்டாளி மக்கள் கட்சியினர் இருவர் முழுப்போதையில் வந்தனர்.அவர்களிடம் துண்டறிக்கைகளைக் கொடுத்தபோது "இது உறுப்படியான வேலை எந்தக் கட்சி எப்படிப் போனாலும்சரி காங்கிரசை ஒழித்தே ஆகவேண்டும் என்றனர். அவ்வாறே அந்தத் தொகுதிக்குட்பட்ட சிவகிரியிலும் சிலர் இம்முயற்சியை பாராட்டி வாழ்த்தினர். காங்கிரசுக் கட்சியைச் சார்ந்த ஒரு கிழவர் எங்களைப் பார்த்து உளறினார். அண்ணன் சீமானைத் திட்டினார். அந்தக் குடிகாரக் கிழவரின் பேச்சைப் பொருட்படுத்தாமல் பொறுப்புடன் கடமையைச் செய்துவிட்டு அங்கிருந்து வெளியேறினோம். ஏப்ரல் 4 இல் திருவைகுண்டம் தொகுதிக்குச் சென்றோம் 5000 துண்டறிக்கைகளைப் பரப்பினோம். அங்கு எங்களுக்கு எவ்வித ஆதரவும் இல்லை அதே வேளையில் எதிர்ப்பும் இல்லை.
ஏப்ரல் 5,6 இல் விருதுநகர் தொகுதியில் வெலை செய்தொம் காங்கிரசுக் கட்சியின் எதிர் வேட்பாளர் நாங்கள் வேலை செய்வது தெரிந்தும் எங்களைக் கண்டு கொள்ளவில்லை. அந்தச் சூழலிலும் 7000 துண்டறிக்கைகளை பரப்பினோம். ஏராளமான தொலைபேசி தொடர்புகள் வந்தன. அதில் ஒரு தொடர்பில் எங்களுக்கு வாழ்த்துச் சொன்ன ஒருவர் "நல்ல முயற்சி ஆனால் மள்ளர் மீட்புக் களம் என்று ஒரு சமூக அமைப்பின் பெயரை மட்டுமே போட்டுக்கொண்டீர்களே"என்றார். அதற்கு நாம் மள்ளர் மீட்புக் களம் தனது இனக்கடமையைச் செய்கிறது நீங்களும் இனக் கடனாற்றுவதற்கு எமது இயக்கம் இடையூறாக இருக்காது. எங்களின் ஆற்றலுக்குட்பட்ட பகுதிகளில் வேலை செய்கிறோம். நாம் தமிழர் கட்சியினர் அவர்களின் ஆற்றலுக்குட்பட்ட பகுதிகளில் வேலை செய்கிறார்கள் என்றதும் அவர் உணர்ந்து கொண்டார்.
ஏப்ரல் 7 இல் 4000 துண்டறிக்கைகளோடு பரமக்குடியிலும், ஏப்ரல் 8 இல் 6000 துண்டறிக்கைகளோடு இராமநாதபுரத்திலும் களத்தைச் சந்தித்தோம். காங்&திமுக கூட்டணியில் உள்ள பா ம க நிர்வாகிகள் எம்மோடு துணை நின்றனர். இறுதியாக பாரதிய சனதா கட்சி கூட்டம் நடந்து கொண்டிருந்த அரண்மனை வீதியில் அணிதிரண்டிருந்த மக்களிடம் துண்டறிக்கைகளைத் தூவி எங்களின் கடமையைச் செய்தோம். காவல்துறையினரும் அவர்களின் கடமையைச் செய்தனர். அனுமதியின்றி துண்டறிக்கைகள் கொடுத்ததாக எங்களை அழைத்துச்சென்று தெர்தல் ஆணைய அதிகாரிகளை அவமதித்ததாக வழக்கு ஒன்றினை பதிவுசெய்து விட்டு எங்களை விடுவித்தனர். காவல் நிலையத்தின் எழுத்தராக இருந்த தலைமைக் காவலர் ஒருவர் துண்டறிக்கையைப் படித்துவிட்டு சோனியாவின் சொந்தப் பெயரையும், சொந்தத் தொழில் மதுபானப் பணிப்பெண் என்பதையும் வாசித்தவுடன் "சோனியா சோனியா சொக்கவைத்த சோனியா" என்ற பாடலைப் பாடி காவல் நிலையத்திற்குள் எங்களுக்குமுன் ஆடிமகிந்தார். காவல்துறையினர் அனைவரும் எங்களிடம் அன்போடு நடந்துகொண்டனர். நாங்கள் கைது செய்யப்பட்ட செய்திகேட்டு பா ம க, மதிமுக, நாம்தமிழர் கட்சி, மனிதநேய மக்கள் முன்னேற்றக் கழகம் என்று நமது தோழமை இயக்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் விரைந்து வந்து வழக்கு தொடர்பான உதவிகளுக்கு உறுதுணையாற்றினர். அவர்களுக்கு நன்றி கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டோம். அதற்கு அவர்கள் எங்கிருந்தோ வந்து நாங்கள் செய்யவேண்டிய வேலையை எங்கள் தொகுதியில் நீங்கள் செய்துள்ளீர்கள் அதற்காக நாங்கள்தான் உங்களுக்கு நன்றி சொல்லவேண்டும் என்றனர் மகிழ்ச்சியோடு. இரவில் பயணத்தைத் தொடங்கினோம் மலைக்காட்டுப்பாதையில் மான்களின் நடமாட்டத்தை நள்ளிரவில் காணமுடிந்தது. அதிகாலை 5 மணிக்கு வால்பாறை வந்தடைந்தோம் குறைந்தபட்ச குளிர் இருந்தது.விடிந்ததும் வேலையைத் தொடங்கினோம். நாங்கள் துண்டறிக்கைகள் கொடுக்க நாம் தமிழர் கட்சியினர் 4 போரை அழைத்துச்சென்று வால்பாறை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். காங்கிரசுக் கட்சியின் வேட்பாளர் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் ஊதிய உயர்வுக்காகப் போராடினார் என்பதற்காகவும் மாதந்தோறும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு உறுப்பினருக்கு ரூபாய் 100 வீதம் கொடுத்து உதவினார் என்பதற்காகவும் அந்தப்பகுதியில் ஒருசிலரின் எதிர்ப்புக் குரலும் இருந்தது. அதையும் கடந்து வீடுவீடாகச் சென்று ஈழத்தமிழர் படுகொலை செய்யப்பட்ட காட்சிகளைக் கண்டுகாட்டி மக்களிடம் காங்கிரசுக் கட்சியின் தமிழினத் துரோகத்தைத் தோலுறித்துக் காட்டினோம். தேர்தல் ஆணையத்தின் கெடுபிடிகளையும், காவல்துறையின் நடவடிக்கைகளையும் கடந்து நாங்கள் எடுத்துக் கொண்ட பணியினை செவ்வனே செய்துமுடித்தோம். 8000 துண்டறிக்கைகளைப் பரப்பிவிட்டு ஏப்ரல் 10 இல் வால்பாறை அண்ணா திடலில் நடந்த நாம் தமிழர் கட்சியினர் நடத்திய பொதுக்கூட்டத்தில் சந்தனக்காடு இயக்குனர் கௌதமனுடன் பங்கெடுத்து உரை நிகழ்த்தினேன். பொதுக்கூட்டம் முடிந்தவுடன் புதிய தமிழகத்தின் பொறுப்பாளர்கள் எம்மை புடைசூழ்ந்து கொண்டனர். துண்டறிக்கைகளைக் கண்டு துடித்துப்போன குடிகாரக் காங்கிரசுக் கட்சிக்காரர்கள் எம்மிடம் கேள்விகேட்க வேண்டுமென்று கூச்சலிட்டுக் கொண்டிருந்தனர். ஆனால் எமது உறவுகள் எம்மோடு ஒன்றுசேர்வதைக் கண்டு அந்தக் காங்கிரசுக் காரர்கள் கலைந்து போய்விட்டனர்.
திருத்துறைப்பூண்டி, கோவை தொகுதிகளில் அப்பகுதியில் உள்ள மள்ளர் மீட்புக் களத்தின் பொறுப்பாளர்கள் பு.வெ.அசோக்பண்ணாடி அவர்களும் கடம்பை வே.பாசுக்கரச்சோழன் அவர்களும் அந்தப் பணியினை திறம்படச் செய்துமுடித்துள்ளனர். இவ்விரு தொகுதிகளிலும் 7000 துண்டறிக்கைகள் மக்களிடம் கொண்டுசேர்க்கப்பட்டுள்ளன. திருத்துறைப்பூண்டியில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக நடந்த பொதுக்கூட்டத்தில் அண்ணன் சீமான் அவர்கள் பேசும்போது மள்ளர் மீட்புக் களம் வெளியிட்டுள்ள துண்டறிக்கையை தூக்கிப்பிடித்து என் தம்பி செந்தில்மள்ளர் காங்கிரசுக் கட்சியினரிடம் பல கேள்விகளைக் கேட்டுள்ளார். இதில் ஒரு கேள்விக்காவது காங்கிரசுக் கட்சிக்காரன் எவனாவது பதில் சொல்லமுடியுமா? என்று அறைகூவல் விடுத்துள்ளார். கோவையில் நடந்த பொதுக்கூட்டத்தில் அண்ணன் சீமானின் பேச்சைக் கேட்டுவிட்டு, மள்ளர் மீட்புக் களத்தின் துண்டறிக்கைகளையும் படித்துவிட்டு நாம் தமிழர் கட்சியில் சேரவேண்டும் அண்ணன் சீமானோடு பேசவேண்டும் என்று பல ஆண்களும் பெண்களும் எம்மோடு தொடர்பு கொண்டு பேசினர். அவர்களை கோவை மாவட்ட நாம் தமிழர் கட்சியின் பொறுப்பாளர்களோடு தொடர்பு ஏற்படுத்திக் கொடுத்தோம்.
இப்படியபக இந்தத் தேர்தல் பரப்புரை பயணம் இனக்கடனை ஆற்றிய மனநிறைவோடு நிறைவுபெற்ற போதிலும், எம்மினத்தை அழித்த வரலாற்றுப் பெரும்பகை காங்கிரசுக் கட்சியை தமிமு மண்ணிலிருந்து சுவடு தெரியாத அளவிற்கு அழித்து, அகற்றி, அப்புறப்படுத்தும் வரை & எமது இனத்தின் எதிரியை வீழ்த்துகின்ற, விரட்டியடிக்கின்ற இந்தப் பயணம் ஓயாத அலைகளாக உறங்காது ஓசையெழுப்பிக் கொண்டுதானிருக்கும்.
3 comments:
Very good job. All the very best. T.Veerakumar , Coimbatore.
உங்கள் அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் நண்பா.... நன்றியோடு கைகூப்புகிறேன் உங்கள் தமிழ்த்தொண்டுக்காக.... மீண்டும் ஒரு முறை கூறுகிறேன்.
நன்றி ... நன்றி...
Post a Comment