Pages

Thursday, 3 March 2011

திமுக-காங். பேச்சு தோல்வி?-கருணாநிதியை மீண்டும் சந்திக்காமல் கிளம்பினார் குலாம்

திமுக, காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு தொடர்பாக சிக்கல் பெரிதாகியுள்ளதாக தெரிகிறது. நேற்று இரவு கிட்டத்தட்ட 3 மணி நேரம் முதல்வர் கருணாநிதியுடன், காங்கிரஸ் பொதுச் செயலாளர் குலாம் நபி ஆசாத் பேசியும் உடன்பாடு ஏற்படவில்லை. இன்று மீண்டும் பேசுவோம் என்று கருணாநிதி தெரிவித்திருந்த நிலையில், கருணாநிதியை சந்திக்காமலேயே குலாம் நபி ஆசாத் திடீரென டெல்லி கிளம்பிப் போய் விட்டார். இதனால் சிக்கல் பெரிதாகியுள்ளதாக கூறப்படுகிறது.

திமுகவுடனான தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் பெரும் சிக்கல் ஏற்பட்டதைத் தொடர்ந்து காங்கிரஸ் மேலிடமே இதில் தலையிட்டது. சோனியா காந்தியின் உத்தரவுப்படி டெல்லியிலிருந்து குலாம் நபி ஆசாத் நேற்று இரவு சென்னை விரைந்து வந்தார்.

முதல்வர் கருணாநிதியை அவர் சந்தித்துப் பேசினார். பின்னர் கருணாநிதியுடன் இரவு 9 மணிக்குத் தொடங்கி கிட்டத்தட்ட 3 மணி நேரம் பேச்சு நடத்தினார் ஆசாத். இருப்பினும் உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை.

கருணாநிதியுடன் நடந்த பேச்சுவார்ததையின்போது திமுக சார்பில் மு.க.ஸ்டாலின், கனிமொழி, டி.ஆர்.பாலு, துரைமுருகன், பொன்முடி ஆகியோரும், காங்கிரஸ் சார்பில் தங்கபாலுவும் கலந்து கொண்டனர்.

பேச்சுவார்த்தைக்குப் பின்னர் முதல்வர் கருணாநிதியிடம் என்ன உடன்பாடு ஏற்பட்டது என்று செய்தியாளர்கள் கேட்டபோது, நாளை (அதாவது இன்று)மீண்டும் பேசுவார்கள் என்றார்.

இதையடுத்து இன்று இருவரும் மீண்டும் சந்தித்துப் பேசும்போது சிக்கலுக்குத் தீர்வு கண்டு, உடன்பாட்டை எட்டுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்று முதல்வர் கருணாநிதியை, குலாம் நபி ஆசாத் சந்திக்கவில்லை. மாறாக அவர் டெல்லிக்குப் புறப்பட்டுப் போய் விட்டார்.

சென்னை விமானநிலையத்தில் அவரிடம் செய்தியாளர்கள் பேச்சுவார்த்தை விவரங்கள் குறித்து கேட்டபோது நேற்று நீண்ட நேரம் முதல்வர் கருணாநிதியுடன் ஆலோசனை நடத்தினேன். நேற்று நடந்த பேச்சு விவரங்களை கட்சித் தலைமையிடம் தெரிவிப்பேன். மீண்டும் ஒருமுறை பேச்சு நடத்தும் வாய்ப்பு உள்ளது என்றார்.

அதற்கு மேல் செய்தியாளர்கள் விரிவாக கேள்விகள் கேட்க முயன்றபோது அதற்குப் பதிலளிக்க மறுத்து விட்டார் ஆசாத்.

காங்கிரஸ் மேலிடத்தின் பிரதிநிதியாகவே சென்னை வந்திருந்தார் குலாம் நபி ஆசாத். எனவே, நிச்சயம் உடன்பாடு கண்டு அதில் கையெழுத்தாகும் என்ற நம்பிக்கை திமுக மற்றும் காங்கிரஸ் தரப்பில் இருந்தது. ஆனால் ஆசாத் திடீரென டெல்லி கிளம்பிச் சென்றதால், பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளதாகவே கருதப்படுகிறது.

இதனால் திமுக, காங்கிரஸ் இடையிலான தொகுதிப் பங்கீட்டுச் சிக்கல் பெரும் இடியாப்பச் சிக்கலாகியுள்ளதாக தெரிகிறது.

No comments:

Post a Comment