Pages

Thursday 24 March 2011

ஜெயந்தி தங்கபாலுக்கு எதிர்ப்பு: காங். ஆர்ப்பாட்டம்



மயிலாப்பூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக ஜெயந்தி தங்கபாலு தேர்வு செய்யப்பட்டுள்ளதற்கு, அக்கட்சியின் பல்வேறு அணிகளிடையே எதிர்ப்பு வலுவாகியுள்ளது.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் 63 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதில், 60 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

சென்னை மயிலாப்பூர் தொகுதியின் வேட்பாளராக கே.வி.தங்கபாலுவின் மனைவி ஜெயந்தி தங்கபாலு அறிவிக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் தொண்டர்கள் அடையாறில் உள்ள கே.வி.தங்கபாலு வீட்டு முன்பு புதன்கிழமை ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது , தங்கபாலுவின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது.

இந்த நிலையில், இன்று பகல் 11.30 மணியளவில் மயிலாப்பூர் தொகுதிக்கு வேட்புமனு தாக்கல் செய்ய ஜெயந்தி தங்கபாலு அண்ணாமலைபுரத்திலுள்ள மயிலாப்பூஉர் தாலுகா அலுவகத்துக்கு வந்தார். அவருடன் தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு உள்பட ஆதரவாளர்கள் வந்திருந்தனர்.

அப்போது, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மகளிரணி, இளைஞரணியைச் சேர்ந்தவர்கள் நூற்றுக்கணக்கானோர் திரண்டு அங்கு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஜெயந்தி தங்கபாலுக்கு வாய்ப்பளிக்கக் கூடாது என்றும், வேறொருவர் நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

இந்த பரபரப்புக்கு இடையே ஜெயந்தி தங்கபாலு தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

இதைத் தொடர்ந்து நிருபர்களிடம் பேசிய தங்கபாலு, "காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியே அனைத்து வேட்பாளர்களையும் தேர்ந்தெடுத்தார். அவரது முடிவுக்கு கட்டுப்பட்டு அனைவரும் நடக்க வேண்டியது அவசியம்," என்றார்.

இதேபோல் மேலும் சில காங்கிரஸ் வேட்பாளர்களை மாற்றக் கோரி, கட்சிக்குள்ளேயே ஆர்ப்பாட்டம் வெடித்திருக்கிறது.

No comments:

Post a Comment