Pages

Friday 4 March 2011

கொங்கு நாடு முன்னேற்றக் கழகத்திற்கு 2 எம்.எல்.சி. சீட்-'பெஸ்ட்' ராமசாமி

திமுக கூட்டணியில் இடம் பெற்று 7 சீட்களைப் பெற்றுள்ள கொங்கு நாடு முன்னேற்றக் கழகத்திற்கு 2 எம்.எல்.சி சீட்களையும் தருவதாக திமுக தெரிவித்துள்ளதாக கொமுக தலைவர் பெஸ்ட் ராமசாமி கூறியுள்ளார்.

கடந்த லோக்சபா தேர்தலின்போது திமுக கூட்டணிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கட்சி கொமுக. மேற்குப் பிராந்தியமான கொங்கு மண்டலத்தில் பல காங்கிரஸ் தலைவர்கள் மண்ணைக் கவ்வ இந்த கட்சியே காரணம். இந்த கட்சி பல லட்சம் வாக்குகளைப் பிரித்து அதிமுக கூட்டணி பலம் பெற காரணமாக அமைந்தது.

இந்த நிலையில் இந்த கட்சி தற்போது திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ளது. இக்கட்சிக்கு திமுக 7 சீட்களையும் ஒதுக்கியுள்ளது. அதேபோல எம்.எல்.சி. தேர்தல் நடைபெறும் போது 2 சீட்கள் தருவதாகவும் திமுக கூறியுள்ளதாக கட்சித் தலைவர் பெஸ்ட் ராமசாமி கூறியுள்ளார்.

இதுகுறித்து ராமசாமி கூறுகையில், சட்ட மேலவைக்குத் தேர்தல் நடைபெறும் போது 2 சீட்கள் தருவதாக முதல்வர் கருணாநிதி உறுதியளித்துள்ளார்.

திமுக தலைமையிடம் சூலூர், பொள்ளாச்சி, பல்லடம், காங்கேயம், ஈரோடு மேற்கு, பெருந்துரை, நாமக்கல், திருச்செங்கோடு, அரவங்குறிச்சி ஆகிய தொகுதிகளைக் கொண்ட பட்டியலை அளித்துள்ளோம். அதிலிருந்து 7 தொகுதிகளை ஒதுக்கித் தருமாறும் கேட்டுள்ளோம். திமுக தலைமை தரும் என்று நம்புகிறோம்.

எங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 7 தொகுதிகளிலும் நாங்கள் அமோக வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது.

மார்ச் 8ம் தேதி எங்களுக்கான தொகுதிகளை திமுக அறிவிக்கும் என்று நம்புகிறோம். தொகுதிகள் அறிவிக்கப்பட்டவுடன் தீவிர பிரசாரத்தில் இறங்குவோம். அனைத்துத் தொகுதிகளிலும் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடுவோம்.

நான் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட மாட்டேன். தீவிர பிரசாரத்தில் ஈடுபடுவேன். எம்.எல்.சி. தேர்தலில் போட்டியிடுவதை விரும்புகிறேன். கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன், பொருளாளர் பாலசுப்ரமணியன் தேர்தலில் போட்டியிடுவார்கள் என்றார்.

லோக்சபா தேர்தலில் கொமுக, கோவை, பொள்ளாச்சி, திருப்பூர், ஈரோடு ஆகிய தொகுதிகளில் மூன்றாவது இடத்தையும், 8 இடங்களில் 4வது இடத்தையும் பிடித்து பெரிய கட்சிகளை அதிர வைத்தனர் என்பது நினைவிருக்கலாம்

No comments:

Post a Comment