Pages

Tuesday 1 March 2011

திமுக அணி ஒதுக்கீடு ஓரிரு நாளில் முடியும்

 திமுக அணியில் தொகுதிப் பங்கீடு ஓரிரு நாள்களில் முடிந்துவிடும் என்று தெரிகிறது. சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திமுக கூட்டணியில் பா.ம.க.வுக்கு 31, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த அணியில் மீதி 190 தொகுதிகள் உள்ளன. காங்கிரஸ் கட்சி 90 தொகுதிகளைக் கேட்டுக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அதனாலேயே இன்னும் தொகுதிகள் எண்ணிக்கை முடிவாகாமல் உள்ளது. கடந்த 25-ம் தேதி நடந்த இரண்டாம் கட்டப் பேச்சில் தொகுதி எண்ணிக்கை முடிவாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முடிவு ஏதுமின்றி காங்கிரஸ் ஐவர் குழுவினர் சென்றுவிட்டனர். திமுக தரப்பில் தில்லியில் பேசிக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டதால் பேச்சில் முட்டுக்கட்டை ஏற்பட்டது என அப்போது தெரிவிக்கப்பட்டது. இருந்தாலும் தில்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியாவைச் சந்திக்க முயற்சி எதுவும் நடப்பதாகத் தெரியவில்லை. இதற்கிடையில் ஆட்சியில் பங்கு இல்லாமல் திமுகவை ஆதரிக்கத் தேவையில்லை என தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார். காங்கிரஸின் நெருக்குதலுக்குப் பணிய வேண்டாம் என்ற ரீதியில் திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை அரசியல் வட்டாரத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. திமுக தலைவரின் எண்ண ஓட்டம் தெரியாமல் வீரமணி இப்படி ஒரு கருத்தை தெரிவித்திருக்க மாட்டார் என்பதே அதற்குக் காரணம். காங்கிரஸ் கட்சியினர் தங்கள் பலத்தை அறிந்து தொகுதி எண்ணிக்கையைக் கேட்கவில்லை; மாறாக ஒவ்வொரு தலைவரின் அணிக்கும் குறிப்பிட்ட அளவு என்பதை மனதில் வைத்துக் கொண்டு தொகுதிகளைக் கேட்கிறார்கள் என்று திமுக தரப்பினர் வருத்தம் தெரிவிக்கின்றனர். ""மக்களவைத் தேர்தலில் 15 தொகுதிகளில் 8 தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் கட்சியால் வெற்றி பெற முடிந்தது. அதிலும் 3 தொகுதிகள் இழுபறியில்தான் வெற்றி பெற முடிந்தது என்பதை மறந்துவிட்டு காங்கிரஸ் கட்சியினர் பேசுகின்றனர்'' என்பது திமுக தலைவர்களின் கருத்தாக உள்ளது. கொடுப்பதற்கு தொகுதிகள் இல்லாத சூழ்நிலையில் கூடுதல் தொகுதி வேண்டும் என்று கேட்டு இன்னும் இழுத்துக் கொண்டிருந்தால் இந்தக் கூட்டணி மீது மக்களின் நன்மதிப்பு குறைந்துவிடும் என திமுகவினர் அச்சம் தெரிவிக்கின்றனர். அதனால்தான் காங்கிரஸின் நெருக்குதலுக்குப் பணிய வேண்டாம் என்ற வீரமணியின் அறிக்கை வந்திருக்கிறது என்பது அரசியல் பார்வையாளர்களின் கருத்தாக உள்ளது. காங்கிரஸ் தலைவர்கள் சிலரும் தங்களுக்கு இப்போதைய சூழ்நிலையில் வேறு வழியில்லை என்று கூறுகின்றனர். அதிமுக தரப்பிலும் கூட்டணி கட்சிகள் முடிவாகிவிட்ட நிலையில், தாங்கள் எதிர்பார்க்கும் அளவுக்குத் தொகுதிகள் அங்கு கிடைக்காது என்று கூறுகின்றனர். ஆட்சியில் பங்கு என்பதை திமுகவிடம் வேண்டுமானால் வலியுறுத்தலாமே தவிர, ஜெயலலிதாவிடம் அதைப் பற்றிப் பேசவே முடியாது என்றும் குறிப்பிடுகின்றனர். எனவே மீதம் உள்ள 190 தொகுதிகளில், 2006 அளவில் திமுகவுக்கு ஒதுக்கியது போக மீதி சுமார் 60 தொகுதிகள் கிடைக்கும். அந்த அளவில் காங்கிரஸ் தொகுதிகளைப் பெற்றுக் கொண்டு கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமா அல்லது வேறு வாய்ப்புகளைப் பரிசீலிக்குமா என்பது ஓரிரு நாள்களில் முடிவாகிவிடும் என்று இரு தரப்பினரும் கூறுகின்றனர். அதிமுக அணியில் தொகுதிப் பங்கீடு மார்ச் முதல் வாரத்தில் முடிந்து, விரைவில் ஜெயலலிதா பிரசாரத்தைத் தொடங்கிவிடுவார் என எதிர்பார்க்கப்படுவதால், திமுக அணியிலும் தொகுதிப் பங்கீட்டை விரைவாக முடிக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

No comments:

Post a Comment