Pages

Friday, 4 March 2011

பிரசார நேரத்தை இரவு 11 மணி வரை நீட்டிக்க வேண்டும்: தேர்தல் ஆணையத்திடம் திமுக, பாமக கோரிக்கை

தேர்தல் பிரசாரத்தை இரவு 11 மணி வரை நீட்டிக்க வேண்டும் என்று தி.மு.க.வும், பா.ம.க.வும் தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளன.

 தமிழகத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து அங்கீகரிக்கப்பட்ட 9 அரசியல் கட்சிகளுடன் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினார்.
 இந்தக் கூட்டத்தில், க.பொன்முடி, கல்யாண சுந்தரம் (திமுக), பொள்ளாச்சி ஜெயராமன், பாலகங்கா (அதிமுக), பீட்டர் அல்போன்ஸ், யசோதா (காங்கிரஸ்), வழக்கறிஞர்கள் பாலு, ஜோதி (பாமக), கே.பாலகிருஷ்ணன், ஆறுமுகநயினார் (மார்க்சிஸ்ட்), தமிழிசை சௌந்தரராஜன் (பாஜக), பழனிச்சாமி, வீரபாண்டியன் (இந்திய கம்யூனிஸ்ட்), பகுஜன் சமாஜ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
 கூட்டம் இரண்டரை மணி நேரத்துக்கும் மேலாக நடந்தது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் உள்பட அனைத்து அம்சங்களையும் காட்சிப்பட ஊடகம் வாயிலாக பிரவீண் குமார் விளக்கினார். கூட்டத்தில் பங்கேற்ற பின், அமைச்சரும், திமுக பிரதிநிதியுமான க.பொன்முடி கூறியது:
 தேர்தல் அமைதியாக நடக்க தேர்தல் ஆணையத்துக்கு அளிக்க வேண்டிய அனைத்து உதவிகளையும் செய்வோம். வாக்குப்பதிவு ஏப்ரல் 13-ம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் தேதியில் மாற்றமில்லை என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. இந்தத் தேதியில் தேர்தல் நடத்தினாலும் அதை எதிர்கொள்ள திமுக தயாராக இருக்கிறது. நேரத்தை இரவு 11 மணி வரை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம். இந்தத் தேர்தலில் தேர்தல் ஆணையம் கெடுபிடி எதுவும் காட்டவில்லை. வழக்கமான தேர்தல்களைப் போன்றுதான் இதுவும் இருக்கிறது.
 பீட்டர் அல்போன்ஸ் (காங்கிரஸ்): சட்டப் பேரவைக்குத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு முதல் முறையாக அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. பிரசாரத்தின் போது தவறான நடத்தை இருந்தால் அதைத் தெரிவிக்க 24 மணி நேர இலவச தொலைபேசி சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், வேட்பாளரின் பிரசாரத்தையோ, அரசியல் கட்சிகளின் பிரசாரத்தையோ முடக்க நினைக்கும் வகையில் தவறான புகார் அளிக்கப்பட்டால் அந்தப் புகார்களை அளிப்போர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினோம். வீடுகளில் சுவர் விளம்பரம் உள்ளிட்ட பிரசாரங்களை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களிடம் அனுமதி பெற வேண்டும் என்ற விதி உள்ளது. ஒவ்வொரு வீட்டிலும் விளம்பரங்களைச் செய்வதற்கு ஒவ்வொரு முறையும் ஆட்சியரிடம் செல்ல வேண்டிய நிலை இருக்கிறது. இதைத் தவிர்க்க வீடுகளில் பிரசாரம் செய்ய அனுமதி அளிப்பதற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் தனி அதிகாரியை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தினோம். இதைப் பரிசீலிப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
 வழக்கறிஞர் கே.பாலு (பாமக): புதிதாக வகுக்கப்பட்டுள்ள தேர்தல் நடத்தை நெறிமுறைகள், விதிகள் பிகார் மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டன. அதற்குப் பிறகு இப்போது தமிழகத்தில் நடைமுறைக்கு வருகிறது. பாமக இரண்டு கோரிக்கைளை முன்வைத்தது. தேர்தல் பிரசாரம் முடியும் நேரத்தை இரவு 10 மணி என்பதை 11 மணியாக நீட்டிக்க வேண்டும். மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் வாக்கு அளித்த பிறகு அத்தாட்சிக்கான ரசீது வழங்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. ஆனால், இப்போது அதற்கு வாய்ப்பில்லை எனத் தெரிவித்துள்ளது

No comments:

Post a Comment