Pages

Friday 4 March 2011

அதிமுக அணியில் தேமுதிக


ஏப்ரல் மாதம் நடக்கவுள்ள தமிழக சட்டப்பேரவைப் பொதுத் தேர்தலில் அதிமுக அணியில் 41 தொகுதிகளில் தேமுதிக போட்டியிடுகிறது.
 அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை தே.மு.தி.க. நிறுவனர் விஜயகாந்த் வெள்ளிக்கிழமை இரவு சந்தித்துப் பேசினார். அப்போது இதற்கான உடன்படிக்கையில் இருவரும் கையெழுத்திட்டனர்.
 இந்தச் சந்திப்பு இரவு 9.25 முதல் 9.45 மணி வரை நடந்தது. தே.மு.தி.க. அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், இளைஞரணி செயலாளர் சுதீஷ் ஆகியோரும் விஜயகாந்துடன் சென்றிருந்தனர்.
 திமுக அரசை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் என சேலம் மாநாட்டில் அழைப்பு விடுத்தார் விஜயகாந்த். அதன் தொடர்ச்சியாக அதிமுக அணியில் தேமுதிக சேரக்கூடும் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. இந் நிலையில் பிப்ரவரி 24-ம் தேதி கட்சியின் அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையிலான குழுவினர் அதிமுக தலைமை அலுவலகத்துக்குச் சென்று தொகுதிப் பங்கீடு பற்றி அதிமுக குழுவினருடன் பேசினர்.
 அதிமுக அணியில் தேமுதிக சேருவது பற்றிய முறைப்படியான அறிவிப்பாக அந்தச் சந்திப்பு இருந்தது. அதன்பிறகு அதிமுக அணியில் தேமுதிக எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்பது தெரிவிக்கப்படாமலே இருந்தது.
 வெள்ளிக்கிழமை அமாவாசை என்பதால் ஜெயலலிதாவும் விஜயகாந்தும் சந்தித்து தொகுதிப் பங்கீட்டை முடிவு செய்து உடன்பாட்டில் கையெழுத்திடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
 ஆனால் இரவு வரையில் திமுக, அதிமுக என இரு அணிகளிலுமே தொகுதிப்பங்கீடு பற்றி எந்தப் புதிய அறிகுறிகளும் இல்லாமல் இருந்தது. இருந்தாலும் ஜெயலலிதாவைச் சந்திக்க விஜயகாந்த் செல்வதாக இரவு 8.30 மணிக்கு தெரிவிக்கப்பட்டது.
 சந்திப்பு முடிந்த பிறகு வெளியே வந்த விஜயகாந்த், செய்தியாளர்களிடம் எதுவும் கூறவில்லை. அதிமுக தரப்பில் தொகுதிப் பங்கீடு குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டது.
 தமிழக சட்டப்பேரவைப் பொதுத் தேர்தலில் அதிமுக தலைமையிலான அணியில் தேமுதிக 41 தொகுதிகளில் போட்டியிடுவது என முடிவு செய்யப்படுகிறது என்ற உடன்படிக்கையில் ஜெயலலிதாவும், விஜயகாந்த்தும் கையெழுத்திட்டுள்ளனர்.
 அதிமுக அணியில் தேமுதிகவுக்கான தொகுதிகள் எண்ணிக்கை முடிவாகிவிட்ட நிலையில், இடதுசாரிகள் மற்றும் மதிமுகவுக்கான தொகுதிகள் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை முடிவாகிவிடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment