Pages

Tuesday 1 March 2011

தொகுதிப் பங்கீடு: சோனியாவுடன் தமிழக காங்கிரஸ் குழு ஆலோசனை

தொகுதிப் பங்கீட்டில் திமுக உறுதியுடன் இருக்கும் நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியுடன் அந்தக் கட்சியின் தொகுதிப் பங்கீட்டு குழு தில்லியில் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தியது.

 திமுகவுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சு நடத்துவதற்காக மத்திய அமைச்சர்கள் ப. சிதம்பரம், ஜி.கே. வாசன், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.வீ. தங்கபாலு, காங்கிரஸ் அகில இந்தியச் செயலாளர் ஜெயக்குமார் ஆகியோரைக் கொண்ட ஐவர் குழுவை கட்சி மேலிடம் அமைத்தது.
 துணை முதல்வர் க. ஸ்டாலின், திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் டி. ஆர். பாலு, அமைச்சர்கள் ஆர்க்காடு வீராசாமி, துரைமுருகன், பொன்முடி ஆகியோரைக் கொண்ட திமுக குழுவினருடன் பிப்ரவரி 20-ம் தேதி காங்கிரஸ் ஐவர் குழுவினர் முதல் கட்டமாக பேச்சு நடத்தினர்.
 அப்போது 80 தொகுதிகள், ஆட்சியில் பங்கு, குறைந்தபட்ச செயல் திட்டம், கூட்டணி ஒருங்கிணைப்பு குழு ஆகிய கோரிக்கைகள் காங்கிரஸ் தரப்பில் முன் வைக்கப்பட்டதாகவும், இதனை ஏற்றுக் கொள்ளாத திமுக 53 தொகுதிகள் மட்டுமே தரமுடியும் என்று கூறியதாகவும் தெரிகிறது.
 பிப்ரவரி 23-ம் தேதி தில்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை ஐவர் குழுவினர் சந்தித்து திமுகவுடனான பேச்சுவார்த்தை விவரங்களை தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து பிப்ரவரி 25-ம் தேதி திமுகவுடன் ஐவர் குழுவினர் 2-ம் கட்டமாகப் பேச்சு நடத்தினர்.
 அப்போது ஆட்சியில் பங்கு, 75 தொகுதிகள் என்பது காங்கிரஸ் சார்பில் மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
 இதனை நிராகரித்த திமுக 53-க்கு மேல் தர வாய்ப்பில்லை என்று கூறியதாக தெரிகிறது. அந்த நேரத்தில் அண்ணா அறிவாலயத்தில் இருந்த முதல்வர் கருணாநிதியை ஐவர் குழுவினர் சந்திக்காமல் சென்றது இதனை உறுதிபடுத்துவது போல இருந்தது.
 இதனிடையே, கூட்டணி விஷயத்தில் குட்டக் குட்ட குனியக் கூடாது. சுதந்திரமாக சுயமரியாதையுடன் திமுக முடிவெடுக்க வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி திங்கள்கிழமை (பிப்ரவரி 28) வெளியிட்ட அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியது. வீரமணி மூலம் தங்களை மிரட்டுவதாக தமிழக காங்கிரஸ் தலைவர்கள் கொந்தளிக்க ஆரம்பித்தனர்.
 இந்நிலையில் காங்கிரஸ் ஐவர் குழுவினர் தில்லியில் செவ்வாய்க்கிழமை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து திமுகவுடன் நடைபெற்ற 2-வது கட்ட பேச்சுவார்த்தை விவரங்களை தெரிவித்தனர். அப்போது சோனியா காந்தியின் அரசியல் ஆலோசகர் அகம்மது படேல், தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் குலாம்நபி ஆசாத் ஆகியோர் உடனிருந்தனர்.
 சோனியா-சிதம்பரம் தனியாக ஆலோசனை: இதனிடையே, தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்துடன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தனியாக ஆலோசனை நடத்தினார். செவ்வாய்க்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் ஐவர் குழுவின் சந்திப்புக்குப் பிறகு இந்த ஆலோசனை நடைபெற்றது. ஏப்ரல் 13-ல் தமிழக சட்டப் பேரவைக்கு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் திமுகவுடனான தொகுதிப் பங்கீட்டில் தொடரும் இழுபறி குறித்து இருவரும் விவாதித்ததாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
 திமுக கூட்டணியில் பாமகவுக்கு 31, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 10, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 என ஒதுக்கப்பட்டுள்ளதாலும், குறைந்தது 140 தொகுதிகளில் திமுக போட்டியிட விரும்புவதாலும் காங்கிரஸ் எதிர்பார்க்கும் தொகுதிகள் கிடைப்பதில் சிக்கல் நீடிப்பதாகக் கூறப்படுகிறது.
 ஆனாலும், ஆட்சியில் பங்கு, 75 தொகுதிகள் என்பதில் காங்கிரஸ் உறுதியாக இருப்பதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 இழுபறி இல்லை

 ""தொகுதி பங்கீடு குறித்து திமுகவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை விவரங்களை சோனியா காந்தியிடம் எடுத்துக் கூறினோம். அடுத்த கட்ட பேச்சுவார்த்தையில் சுமுகமான முடிவு ஏற்படும். அடுத்த கட்ட பேச்சுவார்த்தை தில்லியிலா அல்லது சென்னையிலா என்பதை சோனியா காந்தி அறிவிப்பார். திமுகவுடனான தொகுதிப் பங்கீட்டில் இழுபறி ஏதுமில்லை'' என்று செய்தியாளர்களிடம் கே.வீ.தங்கபாலு தெரிவித்தார்.

No comments:

Post a Comment