Pages

Sunday 6 March 2011

தி.மு.க. அமைச்சர்கள் இன்று ராஜிநாமா

 தி.மு.க.வைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் பிரதமர் மன்மோகன் சிங்கை திங்கள்கிழமை நேரில் சந்தித்து தங்களது ராஜிநாமா கடிதங்களை வழங்குவார்கள் என்று தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு தெரிவித்தார்.

 சட்டப் பேரவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டில் தி.மு.க.-காங்கிரஸ் இடையே உடன்பாடு ஏற்படாமல் இழுபறியாக இருந்தது.
 காங்கிரஸ் ஏற்க முடியாத அளவுக்கு நிபந்தனைகளை விதிப்பதால் மத்திய அமைச்சரவையில் இருந்து விலகிக் கொண்டு, பிரச்னைகளின் அடிப்படையில் மட்டும் மத்திய அரசுக்கு ஆதரவு தருவது என தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக் குழுவில் சனிக்கிழமை முடிவு எடுக்கப்பட்டது.
 தி.மு.க.விடம் பேச்சு நடத்த காங்கிரஸ் தரப்பில் மூத்த தலைவர்களில் ஒருவரான பிரணாப் முகர்ஜி அல்லது குலாம் நபி ஆசாத் சென்னைக்கு ஞாயிற்றுக்கிழமை வரலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், யாரும் வரவில்லை.
 இது தொடர்பாக சென்னையிலுள்ள அண்ணா அறிவாலயத்தில் நிருபர்களிடம் டி.ஆர்.பாலு ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
 மத்திய அமைச்சரவையில் இருந்து விலக முடிவு செய்தபிறகு, காங்கிரஸ் தரப்பில் இருந்து இதுவரை யாரும் எங்களைத் தொடர்புகொள்ளவில்லை.
 எனவே, ஏற்கெனவே எடுக்கப்பட்ட முடிவின்படி, தி.மு.க.வைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் (2 கேபினட் அமைச்சர்கள், 4 இணை அமைச்சர்கள்) தில்லிக்கு திங்கள்கிழமை செல்வார்கள். அங்கு பிரதமர் மன்மோகன்சிங்கை நேரில் சந்தித்து தங்களது பதவி விலகல் கடிதங்களை வழங்குவார்கள்.
 இப்போதைக்கு காங்கிரஸýடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு உள்ளதா, இல்லையா என்பது குறித்து கருத்துத் தெரிவிக்க விரும்பவில்லை.
 இந்தக் கூட்டணியைப் புதுப்பிப்பது குறித்து எங்களது கட்சித் தலைமைதான் முடிவு எடுக்க வேண்டும் என்றார் டி.ஆர்.பாலு.
 இன்று தில்லி செல்கிறோம்- அழகிரி: சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற உயர்நிலை செயல்திட்டக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, திமுகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் ராஜிநாமா கடிதங்களுடன் திங்கள்கிழமை தில்லி செல்கிறோம்' என்று மத்திய அமைச்சர் அழகிரி திருச்சியில் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
 வெற்றி வாய்ப்பைப் பாதிக்காது-ஜி.கே.மணி: காங்கிரஸ் விலகினாலும் தி.மு.க. கூட்டணியின் வெற்றி வாய்ப்பை அது பாதிக்காது என்று பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி கூறினார்.
 தொகுதிப் பங்கீடு தொடர்பாக தி.மு.க. தேர்தல் குழுவினருடன் ஜி.கே.மணி தலைமையிலான பா.ம.க. குழுவினர் ஞாயிற்றுக்கிழமை சந்தித்து முதல் கட்டப் பேச்சு நடத்தினர்.
 அதன்பிறகு, முதல்வர் கருணாநிதியையும் அவர்கள் சந்தித்தனர்.
 பேச்சுவார்த்தைக்குப் பிறகு பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி நிருபர்களிடம் கூறியதாவது:
 தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் குறித்து முதல் கட்டப் பேச்சு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 நாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியலை அவர்களிடம் அளித்தோம். இந்தப் பேச்சு மகிழ்ச்சியளிக்கும் வகையிலும், சுமுகமாகவும் இருந்தது. நாங்கள் போட்டியிடும் தொகுதிகள் ஏறத்தாழ முடிவாகிவிட்டன.
 காங்கிரஸ் இந்தக் கூட்டணியில் இடம்பெற வேண்டும் என்று தி.மு.க. மனமார விரும்பியது. இந்தக் கூட்டணியில் சிக்கல் ஏற்பட்டதையடுத்து தி.மு.க. இந்த முடிவை எடுத்துள்ளது. ஆனால், இந்த விஷயம் இத்துடன் முடிந்துவிடவில்லை என்று பா.ம.க. கருதுகிறது. முதல்வர் கருணாநிதி இதுகுறித்து இறுதி முடிவு எடுப்பார்.
 காங்கிரஸ் விலகினாலும் தி.மு.க. கூட்டணியின் வெற்றி வாய்ப்பை அது பாதிக்காது. ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி திட்டம், இலவச கலர் டி.வி., கலைஞர் காப்பீட்டுத் திட்டம் உள்ளிட்ட ஏராளமான திட்டங்கள் மக்களைச் சென்றடைந்துள்ளன.
 எனவே, தி.முக. கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்றார் ஜி.கே.மணி.
 கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகினால், பா.ம.க. அதிகத் தொகுதிகளைக் கேட்குமா என்று கேட்டதற்கு, இது முதல்வர் கருணாநிதி தலைமையில் பேசி முடிவு எடுக்க வேண்டிய விஷயம் என்றார் மணி.
 மத்திய முன்னாள் அமைச்சர்கள் ஏ.கே.மூர்த்தி, ஆர்.வேலு, எம்.எல்.ஏ. வேல்முருகன் உள்ளிட்டோர் இந்தக் குழுவில் இடம்பெற்றிருந்தனர்.
 வரவேற்கத்தக்கது- கி.வீரமணி: மத்திய அமைச்சரவையில் இருந்து விலகுவதாக தி.மு.க. எடுத்துள்ள முடிவு வரவேற்கத்தக்கது என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்தார்.
 காங்கிரஸ் கூட்டணியில் விலகுவதாக தி.மு.க. எடுத்த முடிவையடுத்து ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து முதல்வர் கருணாநிதியுடன் கி.வீரமணி ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடத்தினார்.
 அதன்பிறகு நிருபர்களிடம் அவர் கூறியதாவது: தொகுதிப் பங்கீட்டில் காங்கிரஸின் மிரட்டலுக்குப் பணியத் தேவையில்லை என்று திராவிடர் கழகம் எடுத்த நிலைக்கு ஏற்ப தி.மு.க. முடிவு எடுத்துள்ளது வரவேற்கத்தக்கது.
 தமிழர்கள் அனைவரும் தி.மு.க. எடுத்த முடிவைப் பாராட்டுகிறார்கள். இந்த முடிவால் தி.மு.க.வில் புதிய எழுச்சியும், நம்பிக்கையும் ஏற்பட்டுள்ளது என்றார் வீரமணி

No comments:

Post a Comment