Tuesday, 8 March 2011
என்ன செய்யப் போகிறார்கள் சுயேச்சைகள்?
புதுச்சேரி சட்டப்பேரவையில் எப்போதும் சுயேச்சை எம்எல்ஏக்கள் முக்கியத்துவம் பெற்று வருகின்றனர். அதற்குக் காரணம் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைப்பதில்லை. அது போன்ற நிலையில் சுயேச்சைகளைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு ஆட்சியை நகர்த்தி வருகின்றனர்.
இப்போதைய காங்கிரஸ் அரசும் தன்னுடைய பங்குக்கு 3 சுயேச்சைகளை அருகில் வைத்துக் கொண்டுதான் கடந்த 5 ஆண்டுகளாக ஆட்சி நடத்தி வருகிறது. திமுக எம்எல்ஏக்களின் ஆதரவு இருந்தாலும் இந்த சுயேச்சை எம்எல்ஏக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தது. காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்குக் கூட எந்தப் பதவியும் அளிக்காமல் 3 சுயேச்சை எம்எல்ஏக்களுக்கும் வாரியத் தலைவர் பதவி அளிக்கப்பட்டது.
இதில் காரைக்கால் நெடுங்காடு தொகுதியைச் சேர்ந்த சுயேச்சை எம்எல்ஏ மாரிமுத்து அரசின் போக்குவரத்துக்கழக தலைவராக இருந்து வருகிறார். அடிப்படையில் அவர் திமுகவைச் சேர்ந்தவர்.
கடந்த தேர்தலில் அவருக்கு திமுக சார்பில் இந்தத் தொகுதி கிடைக்கவில்லை. கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சிக்குக் கொடுக்கப்பட்டது. அதனால் அதிருப்தி அடைந்து சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மீண்டும் திமுகவுக்குச் செல்லவும் அங்கு டிக்கெட் கேட்கவும் முடியாது.
கடந்த 5 ஆண்டுகளில் இவர் காங்கிரஸýக்கு அளித்த ஆதரவைக் காரணம் காட்டி இப்போது காங்கிரஸ் கட்சியில் நெடுங்காடு தொகுதியில் டிக்கெட் கேட்டுள்ளதாகத் தெரிகிறது.
காங்கிரஸ் கட்சியும் அவருக்கு இத்தொகுதியில் போட்டியிட டிக்கெட் கொடுக்கும் என்றும், இப்போது எம்எல்ஏக்களாக இருப்பவர்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்படும் என்ற எழுதப்படாத அரசியல் ஜனநாயகத்தின் அடிப்படையில் இவருக்கு டிக்கெட் வாங்கிக் கொடுக்க காங்கிரஸ் கிரீன் சிக்னல் கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதனால் டிக்கெட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்.
இத்தொகுதியில் கடந்த முறை காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் சந்திரகாசுக்கு மீண்டும்
காங்கிரஸ் டிக்கெட் கொடுக்காது என்பது புரிந்துவிட்டது. அதனால் இவர் என்ன செய்தார் தெரியுமா? முன்னாள்
முதல்வர் ரங்கசாமி தொடங்கியுள்ள புதிய கட்சியில் தன்னுடைய ஆதரவாளர்களுடன் அண்மையில் இணைந்துவிட்டார்.
இப்போது ரங்கசாமி கட்சியில் இவருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. கூடவே இத்தொகுதியில் இவருக்கு சீட்டும் கிடைத்துவிடும்.
கட்சி வேறாக இருந்தாலும் கடந்தமுறை எதிரும் புதிருமாக இருந்த 2 வேட்பாளர்கள் மீண்டும் இந்தத் தொகுதியில் களமிறங்குகின்றனர்.
மற்றொரு சுயேச்சை எம்எல்ஏ ஏழுமலை. முன்னாள் அமைச்சரான இவர் ஊசுடு தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவர் அரசின் பாசிக் நிறுவனத்தின் தலைவராகப் பதவியில் இருக்கிறார். முன்னாள் அமைச்சர் கண்ணன் இவரை அரசியலுக்கு அறிமுகப்படுத்தினார்.
கடந்தத் தேர்தலுக்கு முன்பே காங்கிரஸ் ஆட்சிக்கு ஆதரவு அளிக்கும் எம்எல்ஏவாக இவர் இருந்து வந்தார். இருப்பினும் கடந்தத் தேர்தலில் கேட்டுப் பார்த்தும் காங்கிரஸ் சார்பில் போட்டியிட டிக்கெட் கிடைக்கவில்லை. கூட்டணி கட்சியில் இத் தொகுதி திமுகவைச் சேர்ந்த மதிவாணனுக்குச் சென்று விட்டது. இருப்பினும் துணிச்சலுடன் சுயேச்சையாகப் போட்டியிட்டு கடந்த தேர்தலில் வெற்றி பெற்றார்.
கடந்த 5 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சிக்கு ஆதரவு கொடுத்து வருகிறார். இப்போது காங்கிரஸ் சார்பில் போட்டியிட டிக்கெட் கேட்டு வருகிறார். கொடுப்பார்களா என்று தெரியவில்லை.
வில்லியனூர் தொகுதியைச் சேர்ந்த சுயேச்சை எம்எல்ஏ ஜெ. நாராயணசாமி. இப்போது அரசின் வடிசாராய ஆலையின் தலைவராக இருக்கிறார். இப்போதுள்ள காங்கிரஸ் அரசுக்கு கடந்த 5 ஆண்டுளாக ஆதரவு கொடுத்து வருகிறார். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக உடல்நலம் சரியில்லாமல் மற்றவர்களின் உதவியுடன் சட்டப்பேரவைக்கு வருவது, அரசு விழாக்களில் பங்கேற்பது என்ற அளவில் மட்டும் இருந்து வருகிறார். அதனால் இப்போது மீண்டும் போட்டியிடமாட்டார் என்று அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
கடந்தத் தேர்தலில் இத்தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் தேனி ஜெயக்குமார் இவரிடம் தோல்வி அடைந்தார்.
இப்போது மீண்டும் இத் தொகுதியில் போட்டியிடாமல் காங்கிரஸ் சார்பில் மங்கலம் தொகுதியில் போட்டியிட தேனி
ஜெயக்குமார் முயன்று வருகிறார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment