Pages

Friday 4 March 2011

காங்கிரஸின் தொடர் பிடிவாதம் எதிரொலி-60 சீட் தர திமுக சம்மதம்?

 காங்கிரஸ் கட்சி தொடர்ந்து வறட்டுப் பிடிவாதம் பிடித்து வருவதால் கூட்டணியின் வெற்றி பாதிக்கப்பட்டு விடக் கூடாதே என்ற ஒரே காரணத்திற்காக திமுக இறங்கி வர முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே காங்கிரஸ் கட்சிக்கு அதிகபட்சமாக 60 சீட்களைத் தர அது சம்மதித்துள்ளதாகவும் தெரிகிறது. இன்று மாலைக்குள் இதுதொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

திமுக கூட்டணியில் இதுவரை 52 சீட்களை கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்கிக் கொடுத்துள்ளது. தற்போது மீதம் 182 இடங்கள்தான் உள்ளன. கடந்த தேர்தலில் திமுக 132 தொகுதிகளில் போட்டியிட்டது (132 என்பது திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகளையும் சேர்த்து-திமுக மட்டும் போட்டியிட்ட தொகுதிகள் என்று பார்த்தால் 129தான்).

இந்த முறை திமுக மீண்டும் 129 சீட்களில் போட்டியிடத் தீர்மானித்துள்ளது. அதேசமயம், திமுகவின் சின்னத்தில் முஸ்லீம் லீக் 3, மூவேந்தர் முன்னேற்றக் கழகம் ஒன்று என மொத்தம் 133 தொகுதிகளை திமுக குறி வைத்துள்ளது.

எனவே தற்போது மிச்சம் உள்ளது 50 தொகுதிகள் மட்டுமே. ஆனால் தமிழக காங்கிரஸாரும், மேலிடத்திலும் இதை ஏற்பதாக இல்லை. கடந்த முறை போட்டியிட்டது 48 தொகுதிகளாக இருந்தாலும் கூட, சில குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே செல்வாக்கைப் பெற்றுள்ள பாமகவுக்கு முதல் ஆளாய் 31 தொகுதிகளையும், புதிதாக வந்து சேர்ந்த கொங்கு நாடு கட்சிக்கு 7 சீட்களையும் திமுக தலைமை ஒதுக்கியதைக் கெளரவக் குறைச்சலாக காங்கிரஸ் கருதுகிறதாம்.

எனவே தங்களுக்கு குறைந்தது 65 தொகுதிகளையாவது ஒதுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்துகிறது.

நேற்று மாலை தமிழக காங்கிரஸ் கட்சியின் ஐவர் குழுவுடன் குலாம் நபி ஆசாத் இதுதொடர்பாக ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. இக்கூட்டத்திற்குப் பின்னர் சோனியா காந்தியையும் குலாம் நபி ஆசாத் சந்தித்துப் பேசினார்.

65 தொகுதிகள் தேவை என்பதை திமுகவிடம் வலியுறுத்துவது என்று இந்த ஆலோசனைகளின்போது தீர்மானிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

அதேசமயம் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக பாமக தரப்பு, முதல்வர் கருணாநிதியைத் தொடர்பு கொண்டு சில யோசனைகளைக் கூறியிருப்பதாக தெரிகிறது. அதாவது தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகளிலிருந்து சிலவற்றை காங்கிரஸுக்குக் கொடுக்கத் தயாராக இருப்பதாக பாமக கூறியதாக தெரிகிறது. அதேபோல எக்காரணத்தைக் கொண்டும் காங்கிரஸை நழுவ விட்டு விட வேண்டாம் என்று கொங்கு நாடு கட்சியம் திமுகவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாம்.

இதையடுத்து தற்போது தங்களது தரப்பிலிருந்து 60 தொகுதிகள் வரை தரத் தயார் என்று திமுக தரப்பிலிருந்து காங்கிரஸுக்குத் தகவல் போயுள்ளதாம். பாமக விரும்பினால் மீதமுள்ள தொகுதிகளை விட்டுத் தரட்டும், அதை காங்கிரஸே பேசிக் கொள்ளட்டும் என்றும் திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு முன்பு 1991 தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 64 தொகுதிகள் தரப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த புதிய திருப்பத்தைத் தொடர்ந்து இன்றைக்குள் உடன்பாடு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல முதல்வர் கருணாநிதியுடன், சோனியா காந்தி தொலைபேசியில் இன்று தொடர்பு கொள்ளக் கூடும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

No comments:

Post a Comment