கடலோர மாவட்டங்களில் திமுக-காங்கிரஸ் அணிக்கு வெற்றி வாய்ப்பு கடுமையாக பாதிக்கப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிமுக-தேமுதிக இணைந்திருப்பதால் அந்த அணிக்கு ஏற்கெனவே உள்ள வெற்றியுடன் கூடுதல் வெற்றி வாய்ப்பு கிடைக்கும் சூழல் உருவாகி உள்ளது.
தமிழகத்தில் மொத்தமுள்ள 13 கடலோர மாவட்டங்களில் மட்டும் 37 சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன. கடலூர், கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, ராமநாதபுரம் என வட மற்றும் தென் மாவட்டங்களைச் சேர்ந்த பேரவைத் தொகுதிகள் கலந்து வருகின்றன. திமுக-அதிமுக அணியில் கூட்டணிகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், எந்தெந்த தொகுதிகளில் யார் யாருக்கு வெற்றி வாய்ப்பு என அரசியல் வட்டாரங்களிலும், மக்களிடத்திலும் பேசப்பட்டு வருகிறது.
கடலோர மாவட்டங்கள்: கடலோர மாவட்டங்களிலுள்ள 37 தொகுதிகளில் தனித் தொகுதிகளும் அடங்கி வருகின்றன. இந்தத் தொகுதிகள் எப்போதுமே அதிமுக அணிக்கே சாதகமாக இருக்கின்றன என மீனவச் சமுதாயத்தைச் சேர்ந்த பிரமுகர்கள் தெரிவிக்கின்றனர்.
""மத்திய அரசு மீன்பிடி ஒழுங்கு முறை சட்டம், கடலோர மேலாண்மைச் சட்டம் போன்றவற்றைக் கொண்டு வந்து மீனவ மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இது காங்கிரஸ் கட்சி மீதான அதிருப்தியை அதிகரித்துள்ளது'' என்கிறார் சென்னையைச் சேர்ந்த மீனவ சங்கப் பிரதிநிதி ஒருவர். தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவங்கள், கடத்தல்கள் போன்றவை திமுக அரசு மீது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன. இதனால், கடலோர மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பு திமுக அணிக்கு எதிராகத் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிமுக-தேமுதிக: திமுக அணிக்கு எதிரான வாக்குகள் அனைத்துமே அதிமுக அணிக்குத்தான் திரும்பும் என கூறமுடியாது என்ற கருத்தும் நிலவுகிறது. ""அதிமுக இப்போது தேமுதிகவுடன் கூட்டணி வைத்துள்ளது. கடலோர மாவட்டங்களில் தேமுதிகவுக்கு குறிப்பிட்ட அளவு வாக்கு வங்கி உள்ளது. இந்தக் கட்சி அதிமுகவுடன் இணைந்துள்ளால் எதிர்க்கட்சிக்கு வாக்குகளின் சதவீதம் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது'' என தென் மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
இலவசங்கள் பலன் அளிக்குமா? திமுக ஆட்சியில் அளிக்கப்பட்ட வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி போன்ற இலவசங்கள் அளிக்கப்பட்டாலும், கடலோர மாவட்டங்களில் மீனவ மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர். இந்தச் சூழ்நிலையில், மத்திய அரசின் சட்டங்களும் மக்களின் மனதில் கடும் விளைவை ஏற்படுத்தியுள்ளன. இதனால், தேர்தலில் இலவசங்கள் எடுபட வாய்ப்பே இல்லை என மீனவ மக்கள் கருத்துக் கூறுகின்றனர்.
காங்கிரஸ் நின்றால்: கடலோர மாவட்டங்களில் உள்ள சட்டப் பேரவைத் தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுமானால் அந்தக் கட்சியை எதிர்த்து அதிமுக நேரடியாக களத்தில் இறங்கும் என கூறப்படுகிறது. காங்கிரஸýக்கு இருக்கும் எதிர்ப்பலையைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி அதை வாக்குளாக மாற்றுவது எளிது என எதிர்க்கட்சியினரிடையே கருத்து மேலோங்கியுள்ளது.
எனவே, தொகுதி ஒதுக்கீட்டில் கடலோர மாவட்டங்களில் உள்ள தொகுதிகளை காங்கிரஸ் கட்சி விரும்பாது எனவும் கூறப்படுகிறது. ஏற்கெனவே திமுகவுடனான தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையில் அத்தகைய மாவட்டங்களில் உள்ள தொகுதிகள் குறித்து பேசப்பட்ட போது அதை காங்கிரஸ் விரும்பவில்லை என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எனவே, கடலோர மாவட்டங்களில் உள்ள பேரவைத் தொகுதிகளை வெல்லப்போவது யார் என்பதைத் தீர்மானிப்பது மற்ற தொகுதிகளைக் காட்டிலும் எளிது என்பதே நிச்சயம்!
No comments:
Post a Comment