Pages

Saturday 5 March 2011

மேலும் ஒரு சீட் கிடைச்சிருந்தா நல்லா இருக்கும்: ராமதாஸ்

 திமுக கூட்டணியில் எங்களுக்கு மேலும் ஒரு சீட் கிடைத்திருந்தால் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருப்பேன் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.

பாமக பொதுக் குழு கூட்டத்தில் பேசிய அவர், நான் பேரன் திருமண பத்திரிகை எடுத்துக் கொண்டு முதல்வர் கருணாநிதியை சந்திக்கச் சென்றேன். பாமகவுக்கு 31 தொகுதிகளைப் பெற்றுக் கொண்டு மகிழ்ச்சியோடு திரும்பி வந்தேன். மேலும் ஒரு தொகுதி கொடுத்திருந்தால் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருப்பேன்.

31 தானா என நீங்கள் நினைப்பதை நானும் ஆமோதிக்கிறேன். ராஜ்யசபா எம்பி தேர்வில் நமக்கு மனக்குறை இருந்தது. நம்மை கூட்டணியில் இருந்து நீக்குவதாக தீர்மானம் நிறைவேற்றிய திமுக உயர் மட்டக் குழுவே, மீண்டும் நம்மை கூட்டணியில் சேர்ப்பதாக தீர்மானம் போட்டது. அதன் பின்பு நான், திமுக ஆட்சிக்கு எதிராக பேட்டியோ, அறிக்கையோ கொடுக்கவில்லை.

கடந்த ஓராண்டாகவே நாம் திமுக கூட்டணியில் தான் இருக்க வேண்டுமென்ற தீர்மானத்தில் இருந்தேன் என்றார் ராமதாஸ்.

திமுக கூட்டணிக்கு வி.தொ.கட்சி ஆதரவு:

இந் நிலையில் திமுக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், நடைபெறவிருக்கும் தமிழக சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் திமுக கூட்டணிக்கு மறுமலர்ச்சி முஸ்லீம் லீக், தமிழ்நாடு போயர் (ஒட்டர், பண்டி, கொட்டா) முன்னேற்றச் சங்கம் ஆகிய இயக்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.

மறுமலர்ச்சி முஸ்லீம் லீக் கட்சியின் தலைவர் அச. உமர்பாரூக் மற்றும் மாநில நிர்வாகிகளும்-தமிழ்நாடு போயர் (ஒட்டர், பண்டி, கொட்டா) முன்னேற்றச் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.பி. குமரவேல்சாமி, மாநிலப் பொருளாளர் எம். சாம்பசிவம் உள்ளிட்ட மாநில நிர்வாகிகளும் இன்று சென்னை, அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் முதல்வர் கருணாநிதியை நேரில் சந்தித்து, நடைபெறவிருக்கும் சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் வெற்றி பெற அமோக ஆதரவு அளிப்பதோடு, திமுக கூட்டணி வெற்றிபெற பாடுபடுவதாக உறுதி அளித்தனர்.

இது போல் தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர் கள் கட்சியின் தலைவர் பொன்.குமார், மற்றம் மாநில நிர்வாகிகள் அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில் முதல்வர் கருணாநிதியை நேரில் சந்தித்து நடைபெற விருக்கும் சட்டப் பேரவைத் தேர்தலில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் வெற்றி பெற அமோக ஆதரவு அளிப்பதோடு, திமுக கூட்டணி வெற்றி பெற பாடுபடுவதாக உறுதி அளித்தனர் என்று கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment