Pages

Tuesday 8 March 2011

காங்கிரஸுக்காக தொகுதிகளை விட்டுத்தர முடியாது: பாமக

பேரவைத் தேர்தலில் கூடுதல் தொகுதிகள் கேட்கும் காங்கிரஸை திருப்திபடுத்த தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளை தியாகம் செய்யுமாறு கேட்க மாட்டார்கள் என திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக நம்பிக்கை தெரிவித்துள்ளது.
எங்களுக்கு ஒதுக்கப்பட்ட 31 தொகுதிகள் தொடர்ந்து எங்களிடம்தான் உள்ளது. வேறு கட்சிக்காக தொகுதிகளை தியாகம் செய்யுமாறு எங்களைக் கேட்கமாட்டார்கள் என பாமக மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார்.
திமுக கூட்டணியில் பாமகவுக்கு 31 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தங்களுக்கு வெற்றிவாய்ப்புள்ள தொகுதிகளை இறுதிசெய்ய திமுகவுடன் பாமக தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறது.
தொகுதிப் பங்கீடு தொடர்பாக காங்கிரஸுடனான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படாததால் மத்திய அரசில் இருந்து விலக இருப்பதாக கடந்த சனிக்கிழமையன்று திமுக திடீரென அறிவித்தது.
காங்கிரஸ் 63 தொகுதிகள் கேட்பது நியாயமற்றது என திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எனினும் காங்கிரஸ்-திமுக கூட்டணியைக் காப்பாற்றும்விதத்தில் அக்கட்சிகளைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் இன்றுவரை பேச்சுவார்த்தையை தொடர்ந்து நடத்திவருகின்றனர்.
பாமகவிடம் கொடுக்கப்பட்ட 3 தொகுதிகளை திரும்ப வாங்கி காங்கிரஸிடம் அளிக்கும்வகையில் இரு கட்சிகளிடையே ஒரு சமாதான உடன்படிக்கை ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்த நிலையில் தங்களுக்கு கொடுக்கப்பட்ட தொகுதிகளை தியாகம் செய்யுமாறு யாரும் தங்களை கேட்க மாட்டார்கள் என பாமக தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment