Pages

Tuesday, 1 March 2011

விடுதலைச் சிறுத்தைகளுக்கு 10 தொகுதிகள்

சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதற்கான ஒப்பந்தம் தி.மு.க. - விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் இடையே திங்கள்கிழமை ஏற்பட்டது. இதன் மூலம் வரும் தேர்தலில் தி.மு.க. அணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இடம்பெறுவது உறுதியாகியுள்ளது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், பொதுச் செயலாளர் ரவிக்குமார், செய்தித் தொடர்பாளர் வன்னி அரசு ஆகியோர் முதல்வர் கருணாநிதியை சென்னை அண்ணா அறிவாலயத்தில் திங்கள்கிழமை இரவு சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்பின்போது துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் துரைமுருகன், ஆர்க்காடு வீராசாமி, பொன்முடி ஆகிய தி.மு.க. நிர்வாகிகளும் உடனிருந்தனர். சுமார் 30 நிமிடங்கள் நடந்த இந்தச் சந்திப்பின்போது, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 10 பேரவை தொகுதிகளை ஒதுக்குவது என ஒப்பந்தம் ஏற்பட்டது. ஒப்பந்தத்தில் கருணாநிதியும், திருமாவளவனும் கையெழுத்திட்டனர். இது குறித்து பின்னர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தி.மு.க. அணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 10 சட்டப்பேரவை தொகுதிகளை ஒதுக்குவது என்று ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. எங்கள் கட்சிக்கு 25 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று தி.மு.க. தலைமையிடம் எழுத்துப்பூர்வமாக கோரிக்கை வைத்தோம். பின்னர் பேச்சுவார்த்தையின்போது 15 தொகுதிகளை அவசியம் ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். இப்போது 10 தொகுதிகளை ஒதுக்கியுள்ளார்கள். கூட்டணிக்கு தலைமை வகிக்கும் தி.மு.க.வுக்கு நாங்கள் நெருக்கடி கொடுக்க விரும்பவில்லை. எனவே, இந்தத் தொகுதிகளை திருப்தியுடன் ஏற்றுக் கொள்கிறோம். தி.மு.க. அணியின் வெற்றிக்கு எங்கள் கட்சித் தொண்டர்கள் முழு ஒத்துழைப்பு அளிப்பார்கள். நாங்கள் போட்டியிடும் தொகுதிகளில் எங்களுக்கென ஒரு தனிச் சின்னத்தில் போட்டியிடுவோம் என்றார் திருமாவளவன். கடந்த தேர்தலில்: கடந்த 2006 சட்டப்பேரவை தேர்தலில் அ.தி.மு.க. அணியில் இடம்பெற்றிருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 9 தொகுதிகளில் போட்டியிட்டு, மங்களூர், காட்டுமன்னார்கோயில் ஆகிய 2 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்றது

No comments:

Post a Comment