Pages

Tuesday 1 March 2011

அடம்பிடிக்காமல் விட்டுக் கொடுத்துள்ளோம்: திருமாவளவன்

கூட்டணித் தலைமைக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்பதற்காக "நடுக் கண்டம் எனக்கு' என்று அடம்பிடிக்காமல் தொகுதி பங்கீட்டில் விட்டுக் கொடுத்துள்ளோம் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

 இது குறித்து செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
 குறைந்தது 15 தொகுதிகளில் போட்டியிட்டால்தான் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தைப் பெறும் அளவுக்கு வெற்றி பெற முடியும் என்பதால் 15 தொகுதிகளை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கோரியது. இது எமது தகுதிக்கு மீறியதாகவோ, அடாவடித்தனமான கோரிக்கையாகவோ யாரும் கருதிவிட முடியாது.
 234 தொகுதிகளிலும் எங்களுக்கு வாக்கு வங்கி இருப்பதை 2006, 2009 தேர்தல்களில் உறுதிப்படுத்தியுள்ளோம். "வட மாவட்டங்களில் மட்டும்' அல்லது "தென் மாவட்டங்களில் மட்டும்' என்று ஒரு பகுதி சார்ந்த கட்சியாகவோ, ஒரு சமூகம் சார்ந்த கட்சியாகவோ இல்லாமல் அனைத்துத் தரப்பு மக்களும் அங்கம் வகிக்கும் கட்சியாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வளர்ந்துள்ளது.
 ஏமாற்றம்: இந்நிலையில் தி.மு.க. கூட்டணியில் 10 தொகுதிகளை மட்டுமே பெற முடிந்ததை ஓர் ஏமாற்றமாக கருதுவதில் தவறு இருக்க முடியாது. நெருக்கடியான நேரங்களில் தி.மு.க.வுக்கு உறுதுணையாக இருந்ததால் வீண்பழிகளுக்கும், அவதூறுகளுக்கும் ஆளானவர்கள் நாங்கள். லாப-நஷ்ட கணக்கு பார்க்காமல் அரசியலில் நட்புக்கு புதிய இலக்கணமாகச் செயலாற்றி வருகிறோம்.
 எனவே, தி.மு.க.வுடன் தோழமையுடன் கூடிய ஒரு எதிர்பார்ப்பை கொண்டிருப்பதில் தவறென்ன இருக்க முடியும்? எனினும், இப்போதுள்ள சூழலில் நடைமுறை சாத்தியக் கூறுகளைக் கணக்கில் கொண்டு கூட்டணித் தலைமைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்பதற்காக விட்டுக் கொடுத்து இந்த உடன்பாட்டுக்கு வந்துள்ளோம். "நடு கண்டம் எனக்கு' என்று அடம்பிடிக்காமல் மற்றவர்களுக்கும் பகிர்ந்தளிக்க வேண்டும் என்ற உயர்ந்த உள்ளத்தோடு உடன்பாடு கண்டு அரசியலில் நம்பகத் தன்மைக்கு அடையாளம் விடுதலைச் சிறுத்தைகள் என்பதை நிலைநாட்டும் வகையில் இந்த முடிவை மேற்கொண்டுள்ளோம்.
 பெற்ற 10 தொகுதிகளிலும் எங்களை தமிழக மக்கள் வெற்றி பெற வைப்பார்கள். தி.மு.க. மீண்டும் ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது என்ற வரலாற்றை உருவாக்குவோம். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் போட்டியிட விரும்புவோர் மார்ச் 10-ம் தேதிக்குள் விருப்ப மனுக்களை அளிக்கலாம் என்று திருமாவளவன் கேட்டுக் கொண்டுள்ளார்

No comments:

Post a Comment