Pages

Sunday, 6 March 2011

இடதுசாரிகள் திமுக கூட்டணிக்கு வர வேண்டும்: திருமாவளவன்

இடதுசாரிகள் திமுக கூட்டணிக்கு வர வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அழைப்பு விடுத்துள்ளார்.

 மத்திய அமைச்சரவையில் இருந்து விலகுவதாக சனிக்கிழமை கூடிய திமுக உயர் நிலை செயல்திட்டக் குழு முடிவெடுத்த பிறகு, கட்சியின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்துக்கு திருமாவளவன், ரவிக்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் வந்தனர். முதல்வரும், கட்சித் தலைவருமான கருணாநிதி, பொதுச் செயலாளர் அன்பழகன் ஆகியோருடன் அவர் ஆலோசனை நடத்தினார்.
 இது குறித்து தினமணி நிருபரிடம் அவர் கூறியது:
 மத்திய அமைச்சரவையிலிருந்து திமுக விலகியிருப்பது வரவேற்கத்தக்கது. இதன் மூலம் திமுகவின் பலம் பன்மடங்கு அதிகரிக்கும். திமுகவின் இந்த முடிவு திமுக தொண்டர்களிடம் மிகுந்த எழுச்சியையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அண்ணா அறிவாலயத்தில் இதனை உணர முடிகிறது.
 காங்கிரஸ் தனித்து போட்டியிட்டாலும், வேறு கூட்டணியில் சேர்ந்து போட்டியிட்டாலும் அது திமுக அணியை எந்த விதத்திலும் பலவீனப்படுத்தாது. காங்கிரஸ் இல்லாததால் திமுகவுக்கு கூடுதல் தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும். அதன் மூலம் அக்கட்சிக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கும். திமுகவுக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு அளிப்போம்.
 திமுக அணியில் காங்கிரஸ் இடம் பெற்றதால்தான் இடதுசாரி கட்சிகள் அதிமுக அணிக்கு சென்றன. இப்போது காங்கிரஸ் இல்லாததால் திமுக அணிக்கு வருவதில் இடதுசாரிகளுக்கு எவ்வித பிரச்னையும் இருக்காது. எனவே, அவர்கள் திமுக அணிக்கு வர வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறேன்.
 காங்கிரஸ் இல்லாததால் கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளுக்கு கூடுதல் இடங்கள் கிடைக்குமா என்பது பற்றியெல்லாம் நாங்கள் சிந்திக்கவில்லை. அதற்கான நேரமும் இதுவல்ல என்றார்
 திருமாவளவன்

No comments:

Post a Comment