(2011 தேர்தல் ஒரு பார்வை என்ற தலைப்பில் தமிழர் சமூக, அரசியல், பண்பாட்டு பொருளாதார ஆய்வகம் சென்னையில் (18-09-2009) நடத்திய ஆய்வரங்கத்தில் “தேர்தலில் பங்கு பெறாத இயக்கங்களும் மக்கள் பணியிலே அவர்களது தார்மீகக் கடமையும் - தேர்தல் புறக்கணிப்பு சரியா? தவறா? மாற்று வழி என்ன?” எனும் பொருள் குறித்துத் ததேவிஇ பொதுச் செயலாளர் தோழர் தியாகு ஆற்றிய உரை) இந்த நிகழ்வில் கலந்து கொள்கிற அமைப்புச் சார்ந்த, அமைப்புச் சாராத அறிஞர்கள், ஆய்வாளர்கள் இவர்கள் அனைவருமே தேர்தலில் பங்குபெறாத இயக்கங்கள் என்ற வரையறைக்குள் வருவார்களா? என்பது எனக்குத் தெரியாது. ஏனென்றால் பங்கு பெறுவதை வலியுறுத்தி வாதிடுவதற்கும் ஒரு வாய்ப்பிருக்கிறது. விவாதத்தில் அது ஒரு தரப்பாக இருக்க முடியும்.
நான் சார்ந்திருக்கிற தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் தேர்தலில் போட்டியிடுவதில்லை, நாங்கள் வாக்களிப்பதும் இல்லை என்பது ஒரு பொதுவான நிலைப்பாடு. எப்படி 'கடவுளை மற, மனிதனை நினை' என்பதில் கடவுளை மறப்பதைக் காட்டிலும் மனிதனை நினைப்பது முக்கியமானதோ, அதேபோல், 'தேர்தல் மறு, போராட்டம் எடு' என்பதில் தேர்தலில் பங்கு பெறாமல் இருப்பதைக் காட்டிலும் மக்கள் போராட்டங்களை முன்னெடுப்பது முக்கியமானது. அந்தப் போராட்டங்களுக்கு எது துணையாக இருக்கும்? என்பதுதான் கேள்வி. தேர்தல் பங்கேற்பு பயன்படுமா? புறக்கணிப்பு பயன்படுமா?
எது முதன்மை வழி
சமூக மாற்றம், விடுதலை என்பதில் நம்பிக்கை வைத்திருக்கிற எந்த ஒர் இயக்கத்திற்கும் தேர்தல் என்பதே முதன்மை வழியாக இருக்க முடியாது. அனைத்துக்கும் அடிப்படை என்பதாகவும் இருக்க முடியாது. இதுதான் நம்மையும் பதவி அரசியல் கட்சிகளையும் வேறுபடுத்துகிற கோடு. அவர்களும் கூட போராடுகிறார்கள், மக்கள் பிரச்சனைகளுக்காகப் போராடுகிறார்கள், மக்களைத் திரட்டிப் போராடுகிறார்கள். ஆனால் அவர்களின் அந்தப் போராட்டங்கள் தேர்தலைக் குறியாக வைத்து அதற்கேற்ப நடத்தப்படுகின்றன.
அவர்களுக்குப் பதவி அரசியலுக்கான ஒரு துணைக் கருவியே போராட்டங்கள். நமக்குத் தேர்தல் புறக்கணிப்பாக இருந்தாலும் சரி, பங்கேற்பாக இருந்தாலும் சரி, அது போராட்டங்களுக்கான ஒரு துணைக் கருவி, அவ்வளவுதான். தேர்தலே முதன்மை வழியல்ல. எனவே, பங்கேற்பு, புறக்கணிப்பு என்பவற்றை ஏதோ இரண்டில் ஒன்றுதான் முதன்மை என்று நாம் பார்க்க வேண்டியதில்லை. புறக்கணிக்கிறவர்களும் அதை முதன்மை யாகக் கருதவில்லை. பங்கேற்கிறவர்களும் அதை முதன்மையாகக் கருத மாட்டார்கள் என்று நான் நம்புகிறேன். நம் வழி போராட்ட வழிதான், வெகு மக்கள் போராட்டங்கள்தான்.
லெனின் அறிவுரை
அடுத்தாற்போல, தேர்தல் பங்கேற்பு, புறக்கணிப்பு என்பதை எந்தக் கோணத்திலிருந்து அணுகுவது? மார்க்சியத்தில் நம்பிக்கை கொண்டிருக்கிறவர்கள் தேர்தல் புறக்கணிப்பு, பங்கேற்பு குறித்து “இடதுசாரி கம்ய+னிசம் ஓர் இளம் பிராயக் கோளாறு” என்ற லெனின் நூலைத்தான் அடிப்படையாகக் கொண்டு விவாதிப்பார்கள்.
தேர்தல் புறக்கணிப்பை முன்னிறுத்திய இயக்கங்களுக்குத் தேர்தல் பங்கேற்பை ஒரு வழிமுறையாக வலியுறுத்தி லெனின் அதிலே பல வாதங்களை முன் வைத்திருக்கிறார். பிரித்தானிய இடதுசாரிகள், வேறு தீவிர இடதுசாரிகள்… இவர்களுக்கெல்லாம் அவர் எடுத்துரைக்கிறார்: தேர்தலில் நீங்கள் பங்கேற்க வேண்டும், அல்லது ஒரு கட்சியை ஆதரிக்க வேண்டும் என்கிறார். உருசியப் புரட்சியின் பட்டறிவையும் எடுத்துக்காட்டுவார்.
போல்சுவிக்குகள் முதலில் டூமா என்னும் உருசிய நாடாளுமன்றத்துக்கான தேர்தலைப் புறக்கணிக்கிறார்கள். பிறகு அப்படிப் புறக்கணித்தது சரியில்லை என்று தன்னாய்வு செய்து கொள்கிறார்கள். மீண்டும் தேர்தல் நடக்கிற பொழுது அதிலே பங்கேற்கிறார்கள்.
உருசியமும் நேபாளமும்
நம் காலத்திலேயே நேபாளத்தில் மாவோயிஸ்டுகள் முதலில் நாடாளுமன்றம் சென்று, பிறகு மக்கள் - போர் என்கிற ஆயுதப் போராட்ட வழியைப் பத்தாண்டு காலம் கையாண்டு, அதன் வழியாக சனநாய கத்துக்கான மக்கள் எழுச்சியைத் தோற்றுவித்து, அந்த எழுச்சியின் உச்ச கட்டமாக அரசமைப்புப் பேரவைக்கான தேர்தலை நடத்துமாறு நிர்பந்தித்து, அந்தத் தேர்தலில் போட்டியிட்டு வென்றார்கள். பார்க்கப் போனால், நிலவும் அமைப்பைப் பாதுகாக்க விரும்பும் கட்சிகள்தாம் தேர்தலை நடத்த மறுத்தன. அரசமைப்புப் பேரவையைக் கூட்ட மறுத்தன. இப்போதும் கூட அங்குப் புதிய அரசமைப்புக்கான முட்டுக்கட்டை தொடர்வது நமக்குத் தெரியும்.
இரட்டை வழிமுறைகளைக் கையாள் வதற்கு முன்னுதாரணமாக ஒர் அரசியல் அறிஞர் நேபாள நிகழ்வுகளை எடுத்துக்காட்டிப் பேசும் போது நான் அவருக்கு நினைவுபடுத்தினேன் - உருசியாவிலேயே அதுதான் நடந்தது.
உருசியப் புரட்சி நெருங்கி வருகிற பொழுது, இன்னும் ஒருசில நாள் மட்டும் மீதமிருக்கிற பொழுது உருசியாவில் அரசமைப்புப் பேரவைக்கான தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் போல்சுவிக்குகள் பங்கேற்றார்கள். பங்கேற்றது மட்டுமல்ல, அந்தத் தேர்தலி;ல் தொழிலாளி வர்க்கம் வாக்களிக்கிற தொகுதிகளில் பெறப்பட்ட வாக்குகளைச் சான்றாகக் காட்டி லெனின் “சோவியத்துகளுக்கே அனைத்து அதிகாரமும்” என்ற முழக்கத்தைச் செயல்படுத்துவதற்கு உரிய தருணம் வந்துவிட்டது என்று வாதிட்டார். அரசமைப்புப் பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு அதில் கிடைத்த வாக்குகளின் அடிப்படையில், 'இனிமேல் காத்திருக்க வேண்டாம், முழுமையாகப் புரட்சிகர அதிகாரத்தைக் கைப்பற்றும் நிலை வந்துவி;ட்டது' என்று வாதிட்டார்.
எனவே இன்றைய நேபாளப் புரட்சியில் மட்டுமல்ல, அன்றைய உருசியப் புரட்சியிலேயே அப்படி ஒரு படிப்பினை இருக்கிறது. இந்தப் படிப்பினைகளின் அடிப்படையில் சிலநேரம் பங்கேற்பது, சிலநேரம் புறக்கணிப்பது என்ற ஒரு நிலைப்பாட்டை மார்க்சிய லெனினியக் கோணத்தில் வலியுறுத்துவார்கள்.
சீனப் புரட்சியில் மாவோ தேர்தலில் பங்கேற்கவில்லை, நாடாளுமன்றத்துக்குச் செல்லவில்லை என்று சொல்கிற பொழுது, இதற்கு மாவோவே பதிலளித்தார்: தேர்தலே நடக்கவில்லை, நாங்கள் எப்படிப் பங்கேற்பது? இங்கு ஒரு நாடாளுமன்றமே இல்லாதபோது நாங்கள் எப்படி அதில் இடம் பெறுவது? என்று எதிர்க்கேள்வி போடுவார். இல்லாத இடத்தில் அதுபற்றிக் கேள்வியே இல்லை.
சமரன், மாஸ்லைன் கட்டுரைகளுக்கு மறுப்பு
நான் சிறையில் இருந்த காலத்தில் தேர்தல் புறக்கணிப்பை வலியுறுத்தி 'சமரன்' ஏட்டில் தோழர் ஏ.எம்.கோதண்டராமன் எழுதிய இரண்டு கட்டுரைகள் வெளிவந்தன. இந்தக் கட்டுரைகளில் அவர் லெனினை மேற்கோள்காட்டி புரட்சிகரச் சூழலில் புறக்கணிப்பு, பிற்போக்கான சூழலில் பங்கெடுப்பு என்று விதி வகுத்து எழுதியிருந்தார். அதை மறுத்து நான் அவருக்குக் கடிதம் எழுதினேன். அப்படியெல்லாம் ஒரு விதி கிடையாது. போராட்டத்தி;ற்கு எது துணை செய்யும் என்பதுதான் அடிப்படை. லெனினுடைய மேற்கோளைத் தவறாகப் புரிந்து கொண்டு எழுதியிருக்கிறீர்கள் என்று.
அதே போல “மாஸ்லைன்” ஏட்டில் ஒரு கட்டுரை வந்தது. உருசியாவில் பங்கேற்பு, புறக்கணிப்பு பற்றி. சமரன், மாஸ்லைன் கட்டுரைகளை மறுத்து நான் எழுதிய கடிதங்களை ஒரு சிறு நூலாக நான் சிறையில் இருந்தபோதே சிபிஎம் கட்சி சார்பில் வெளியிட்டார்கள். “நக்சலைட்டுகளுக்கு ஒரு சிறைப் பறவையின் வேண்டுகோள்” என்று அதற்குத் தலைப்புக் கொடுத்திருந்தார்கள். அந்த விவாதங்கள் எல்லாம் இப்போது நாம் எடுக்கிற நிலைக்குப் பயன்படக் கூடியவை. ஒரு தமிழ்த் தேசிய நிலைப்பாட்டிற்கு வந்ததற்குப் பிறகும் இதே தேர்தல் புறக்கணிப்பு, பங்கேற்பு குறித்து விவாதங்கள் நடைபெற்றன.
ததேபொக, ததேவிஇ
பிறகு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியாக உருவெடுத்த, அப்போது மார்க்சியப் பொதுவுடைமைக் கட்சியாக (எம்.சி.பி., பிறகு எம்.சி.பி.ஐ.) அறியப்பட்ட இயக்கம் - அந்த நேரத்தில் நான் சிறையில் இருந்தாலும் அந்த நிகழ்வு எனக்குத் தெரியும் என்பதால் சொல்கிறேன். - அவர்கள் தேர்தலில் பங்கேற்றார்கள், ஒரு கட்டத்திற்குப் பிறகு தமிழ்த் தேசிய நிலைப்பாட்டின் அடிப்படையில் தேர்தல் புறக்கணிப்பு என்ற முடிவுக்கு வந்து விட்டார்கள்.
எமது தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் தொடக்கத்திலிருந்தே நாங்கள் புறக்கணிப்பு என்ற நிலைப்பாட்டில் இருக்கிறோம். புறக்கணிப்பா? பங்கேற்பா? என்பது போராட்டத்தின் தேவையைப் பொறுத்துத் தீர்வு செய்யப்படுவதாகக் கருதுகிறோம்.
இன்னும் அம்பேத்கர் இயக்கங்கள், தந்தை பெரியாரை வழிகாட்டியாகக் கொண்ட இயக்கங்கள்… அவர்களுக்கு என்று சில வழிமுறைகள் இருக்கின்றன. இவை குறித்தும் விவாதிக்க வேண்டும், ஆய்வு செய்ய வேண்டும். நான் இங்கு முக்கியமாகக் கருதுவது தேர்தல் புறக்கணிப்பு - பங்கேற்பு என்ற சிக்கலை ஆராய்வதற்கு இரண்டு விதமான களங்கள் உள்ளன. இரண்டையும் வேறுபடுத்திப் பார்;க்க வேண்டும்.
லெனின் ஆய்வுக் களம்
லெனினுடைய ஆய்வு முழுவதும் உருசியா தொடர்பாக, பிரிட்டன் தொடர்பாக, செர்மனி தொடர்பாக, ஐரோப்;பிய தேசங்கள் தொடர்பாக அமைந்தது. ஏறத்தாழ தேச அரசுகளாக உருவான பிறகு, தேசிய விடுதலை பற்றிய கேள்வி இல்லாத சமூகச் சூழலில், அவர் இந்தச் சிக்கலை ஆராய்ந்தார். சமூக மாற்றத்திற்கான போராட்டங்களில் - உருசியாவில் மன்னராட்சியை ஒழிப்பதற்கான சனநாயகப் புரட்சியாக இருந்தாலும், பிறகு பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தை நிறுவுகிற சோசலிசப் புரட்சியாக இருந்தாலும் - தேசிய விடுதலை என்ற கேள்வி முன்னுக்கு வரவில்லை. அவை தேசிய விடுதலைக்கான போராட்டங்கள் அல்ல.
தேசிய விடுதலைப் போராட்டம் என்ற நிலையில் இருக்கிற நாடுகளில் தேர்தல் பங்கேற்பு புறக்கணிப்பு பற்றிய விவாதங்கள் லெனினின் ஆய்வுகளில் இடம் பெறவே இல்லை. ஏனென்றால், அப்படிப்பட்ட நாடுகளில் தேர்தல், சனநாயகம், நாடாளுமன்றம் என்ற ஒன்றே இல்லை. காட்டாக, சீனத்திலே சனநாயகப் புரட்சியில் இப்படித்தான் இருந்தது. தேசிய விடுதலைக் கூறு இருந்தது. வியத்நாமிலும் இதே நிலைதான். ஆனால் வேறு சில நாடுகளில் அந்தச் சூழல் இருந்தது. பிரித்தானிய இந்தியாவில் வரம்புக்குட்பட்ட வாக்குரிமை, தேர்தல், இரட்டை ஆட்சிமுறை, நாடாளுமன்றம் எல்லாம் இருந்தன.
எனவே இன்றைக்கும் அந்த வேறுபாடுகள் நமக்குத் தேவைப்படுகின்றன. முதலாவதாக, ஒரு தேசிய விடுதலைப் போராட்டத்தை நடத்துகிற சூழலில் இது குறித்து என்ன நிலைப்பாடு? இரண்டாவதாக தேசிய விடுதலை என்பது முன்னிற்காத சூழலில், உள்நாட்டு ஆளும் வர்க்கங்களுக்கு எதிரான போராட்டத்தில் அந்த நாட்டின் சனநாயகத் தன்மை கொண்ட, சனநாயகச் சாயல் கொண்ட, அல்லது சனநாயக வடிவம் கொண்ட நிறுவனங்களை எவ்வாறு பயன்படுத்திக் கொள்வது? இந்த இரண்டையும் நாம் வேறுபடுத்திப் பார்க்க வேண்டும். இரண்டையும் ஒன்றாகக் குழப்பிக் கொள்ளும் போதுதான், உருசியாவைப் போலவே இங்கும் செய்யலாம், பிரிட்டனுக்கு லெனின் கொடுத்த அறிவுரையே நமக்கும் பொருந்தும் என்ற எண்ணங்கள் பிறக்கின்றன.
லெனின் அடிக்கடி வலியுறுத்திய அணுகுமுறை மெய்ம்மைகளிலிருந்து உண்மைக்கு என்பதாகும். நாம் சில சத்தியங்களை - உண்மைகளை முன்கூட்டியே நம்பி அவற்றுக்குப் பொருத்தமாகப் புறச் சூழல் இருப்பதாகக் கொள்வது உதவாது. தேர்தல் பங்கேற்பின் அவலமான அனுபவங்களையும், தேர்தலில் பங்கேற்கும் கட்சிகள் மீதான வெறுப்பையும் அடிப்படையாக வைத்துத் தேர்தல் புறக்கணிப்பு என்று நிலையெடுத்து, இதனை நியாயப் படுத்துவதற்காக ஏற்கெனவே புரட்சிகரச் சூழல் தோன்றிவிட்டதாக வரையறுப்பது சரியல்ல. புரட்சி வாசல் கதவைத் தட்டிக் கொண்டு நிற்கும் போது, எதற்காகத் தேர்தலில் பங்கேற்க வேண்டும்? என்று கேட்டோம். இவ்வளவு காலம் தட்டினால் கதவு உடைந்திருக்க வேண்டும். அப்படி எதுவும் நடக்கவில்லை.
எனவே, இரண்டு காரணிகள் உள்ளன. முதலாவது நம் போராட்டத்தின் தன்மை பற்றியது. தேசிய விடுதலைப் போராட்டமா? அல்லது உள்நாட்டளவில் சனநாயகம் அல்லது சமூக மாற்றத்துக்கான போராட்டமா? இரண்டாவது நம் போராட்டக் களத்தின் தூல நிலைமைகள் பற்றியது. இவற்றின் அடிப்படையில் ஒரு பொது நிலைப்பாடு அல்லது மூலவுத்தியை வகுத்துக் கொள்ள வேண்டும்;. அதன் கூறுகளாகத் தந்திரவுத்திகளை முடிவு செய்ய வேண்டும்.
இந்த விவாதத்தில் பங்கேற்கிற அனைவருக்குமே பொதுவாக மக்கள் நலன், சமூக மற்றம், சாதி ஒழிப்பு, புரட்சி இவற்றில் நம்பிக்கை இருக்கும், ஆர்வம் இருக்கும். ஆனால் இது போதாது. நம்முடைய மூலவுத்தி என்ன? என்பது குறித்துத் தெளிந்த பார்வை வேண்டும்.
விடுதலைப் போராட்டமும் தேர்தலும்
நாம் இங்கே தமிழ்நாட்டில் தேர்தல் பங்கேற்பு, புறக்கணிப்பு பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம். 2011 சட்டப் பேரவைத் தேர்தலை மனதிற்கொண்டு பேசிக் கொண்டிருக்கிறோம். தமிழ்நாடு, தமிழ்ச் சமூகம் எப்படி இருக்கிறது? தமிழ்நாட்டின் அரசியல் தகுநிலை என்னவாக இருக்கிறது? இங்கே இரண்டு செய்திகள் அடிப்படையானவை. ஒன்று: தமிழ்நாடு இந்திய வல்லாதிக்கத்தின் கீழ் அடிமை நாடாக இருக்கிறது. தமிழர்கள் மீது தேசிய இன ஒடுக்குமுறை கோலோச்சுகிறது. தமிழ்த் தேசம் ஓர் அடிமைத் தேசம். இரண்டு: தமிழ்ச் சமூகம் அடிப்படையில் சாதிச் சமூகமாக இருக்கிறது. வர்ணசாதி ஒடுக்குமுறை கோலோச்சுகிறது. இந்த இருவகை ஒடுக்குமுறையிலிருந்தும் விடுதலைக்காகப் போராட வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம். இந்தப் போராட்டத்தில் தேர்தலின் பங்கு என்ன?
வியத்நாம் விடுதலைப் போராட்டம் என்பது அயலார் ஆதிக்கத்துக்கு எதிரான தேசிய விடுதலை, பிரபுத்துவ ஒடுக்குமுறைக்கு எதிரான சனநாயகம் ஆகிய இரு கூறுகளைக் கொண்டிருந்தது. ஆகவேதான் அது தேசிய சனநாயகப் புரட்சி எனப்பட்டது. சீனத்திலும் இப்படித்தான். அரைக்காலனிய அரைப் பிரபுத்துவச் சமூகத்தி;ல்; தேசிய விடுதலைக்கும், சனநாயகத்திற்குமாகப் போராட வேண்டிய திருந்தது. சீனப் புரட்சியும் தேசிய சனநாயகப் புரட்சிதான். பாட்டாளி வர்க்கத் தலைமை என்பதைக் காட்டும் வகையில் மக்கள் - சனநாயகப் புரட்சி எனப்பட்டது. தமிழ்நாட்டிலும் தேசிய சனநாயகப் புரட்சிதான் இன்றைய தேவை. நம் தனித்தன்மையைக் கணக்கில் கொண்டு சனநாயகத்தைச் சமூகநீதி என்கிறோம்.
தமிழ்த் தேசியச் சமூகநீதிப் புரட்சியின் உடனடி அரசியல் கடமை தமிழ்த் தேசிய விடுதலையாகும். இந்த அடிப்படை யிலிருந்துதான், தேர்தல் தொடர்பான சிக்கல்களை அணுகுகிறோம். எமது பார்வையில் இந்தியா நம் நாடு அல்ல. தமிழ்நாடுதான் நம் நாடு. இந்தியா நம்நாடு, இந்தியப் புரட்சி செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் எவ்வளவு நேர்மையான வர்களாக இருந்தாலும், எம்மால் அவர்களோடு சேர்ந்து மூலவுத்தி வகையில் ஒரு பொது நிலைப்பாட்டிற்கு வர முடியாது.
தேசிய விடுதலையும் தேர்தல் புறக்கணிப்பும்
உலகெங்கும் என்ன நடந்துள்ளது, என்ன நடந்து வருகிறது என்று பார்த்தால், தேசிய விடுதலை இயக்கங்கள் பொதுவாக தேர்தல் புறக்கணிப்பையே வழிமுறையாகக் கொண்டுள்ளன. பங்கேற்பு என்பது விதிவிலக்கே. பழைய வகைக் காலனியாதிக்கம் கோலோச்சிக் கொண்டிருந்த வரை தேர்தல் என்பதே அரிதாய் இருந்ததால் பெரிய சிக்கல் வரவில்லை. ஆனால் புதிய வகைக் காலனியாதிக்கத்தில் சனநாயக வடிவங்களுக்கும் இடம் இருப்பதால், பங்கேற்பதா? புறக்கணி;ப்பதா? என்ற சிக்கல் எழுந்து விடுகிறது. குறிப்பாக, இரண்டாம் உலகப் போருக்குப் பின் விடுதலையின் பெயரால் அதிகாரக் கைமாற்றம் பெற்ற நாடுகளில் தேசிய இன ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் இந்தச் சிக்கல் முன்னுக்கு வந்துள்ளது. ஆனால் இத்தகைய நாடுகளிலும் கூட தேசிய விடுதலை இயக்கங்களுக்குத் தேர்தல் புறக்கணிப்பே பொது வழிமுறையாக இருக்க முடியும் என்பது பட்டறிவாகும்.
தென்னாப்பிரிக்காவில் என்ன நடந்தது என்று பார்ப்போம். விடுதலைக்கு முன் இன ஒதுக்கல் கோலோச்சிய தென்னாப்பிரிக்கா ஒரு வகைக் காலனியாதிக்கமாக வரைய றுக்கப்பட்டது. வெள்ளையர்கள் வந்தேறிகளா, சொந்த நாட்டவர்களா, என்பதைப் பொறுத்து அது வந்தேறிகளின் காலனியாதிக்கம், அல்லது உள்நாட்டுக் காலனியாதிக்கம் என்று அழைக்கப்பட்டது. ஒரே நாட்டுக்குள் ஒர் இனத்தவர் பிற இன மக்களை அடிமைப்படுத்துவதற்கு எதிரான போராட்டத்தை ஆப்பிரிக்கத் தேசியக் காங்கிரசும், தென்னாபிரிக்கப் பொதுமைக் கட்சியும் தேசிய விடுதலை இயக்கமாகவே கருதின. அங்கு வெள்ளையர் அல்லாத அனைவரும் - கலப்பினத்தவர், ஆசிய இனத்தவர், ஆப்ரிக்க இனத்தவர், அனைவரும் - சேர்ந்து கறுப்பினத்தவராகக் கருதப்பட்டனர். அது கறுப்பினத்தின் தேசிய விடுதலைப் போராட்டம். தொடக்கத்தில் கறுப்பின மக்களுக்கு அடிப்படை அரசியல் உரிமைகள் ஏதுமில்லை, ஆட்சியில் எவ்விதப் பங்குமில்லை.
இன ஒதுக்கல் அரசின் நாடாளுமன்றங்கள்
ஆனால், தொடர்;ச்சியான போராட்டங்களின் விளைவாகவும், புறத் திருந்தான நெருக்குதலின் விளைவாகவும் சில அரசியல் சீர்திருத்தங்களைக் கொண்டுவர வேண்டிய கட்டாயம் இன ஒதுக்கல் அரசுக்கு ஏற்பட்டது. இவ்வாறு மூன்று வகையான நாடாளுமன்றங்கள் உருவாக்கப்பட்டன. வெள்ளையர்களுக்கான நாடாளுமன்றம் மட்டும் முழுமையான சட்டமியற்றும் அதிகாரம் கொண்டது. கலப்பினத்தவர்களுக்கான நாடாளுமன்றம் இரண்டாம் தரமானது. ஆசியர்களுக்கான நாடாளுமன்றம் மூன்றாம் தரமானது. பின்சொன்ன இரு அவைகளும் பெரும்பாலும் கலந்தாய்வு மன்றங்களாகவே இருந்தன. இறுதி நோக்கில் அவற்றுக்குச் சட்டமியற்றும் அதிகாரம் கிடையாது. அவை சாரத்தில் இறைமையில்லா நிறுவனங்களாகவே இருந்தன - தமிழ்நாடு சட்டமன்றம் போலவே! வெள்ளை நாடாளுமன்றத்திற்கு மட்டுமே இறைமை சொந்தம்.
ஆப்பிரிக்க இனத்தவர்க்கென்று எவ்வகை நாடாளுமன்றமும் இல்லை. ஆனால் அவர்களுக்கென்று அவர்கள் சார்ந்த பழங்குடியினத்தைப் பொறுத்து 13 தாயகங்கள் அறிவிக்கப்பட்டன. பெரும்பாலும் வளங்குன்றி வறண்ட பரப்புகளே இவ்வாறு பழங்குடித் தாயகங்கள் ஆக்கப்பட்டன. பழங்குடி மக்கள் தத்தமது தாயகத்துக்கான ஆட்சியைத் தேர்ந்தெடுக்க வாக்குரிமையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆப்பிரிக்கர் ஒருவர் பிரிட்டோரியாவிலோ சொகனஸ்பர்க்கிலோ வசிப்பவராகவும் உழைப்பவராகவும் இருக்கலாம். ஆனால் அங்கே அவருக்கு வாக்குரிமை கிடையாது. எங்கோ இருக்கும் பழங்குடித் தாயகத்திற்கான ஆட்சிமன்றத்தைத் தேர்ந்தெடுப்பதற்குத்தான் அவர் வாக்களிக்கலாம்.
புறக்கணிப்பு ஏன்?
சுருங்கச் சொல்லின், அனைத்து அதிகாரமும் வெள்ளையருக்கே என்ற நிலையை இந்தச் சீர்திருத்தங்கள் மாற்றிவிடவில்லை. ஆனாலும் புதிய நிறுவனங்களான வெள்ளையரல்லாதவருக்குரிய நாடாளுமன்றங்களையும் ஆட்சி மன்றங்களையும் போராட்ட வளர்ச்சிக்குப் பயன்படுத்திக் கொள்ளலாமா? என்ற கேள்வி எழுந்தது. இப்படிப் பயன்படுத்திக் கொள்வதால் சிற்சில நன்மைகளும் கூட விளையக் கூடும். ஆயின், இதற்கு விலையாக, கறுப்பர் அதிகாரம் பற்றிய மாயைகள் பிறக்கவும் வளரவும் இது உறுதுணையாகி விடும். ஆகவே, கறுப்பின விடுதலைக்கான அமைப்புகள் இந்தப் புதிய மன்றங்களையும் அவற்றுக்கான தேர்தலையும் புறக்கணிக்க முடிவு செய்தன. இந்தப் புறக்கணிப்பால் அரசின் சீர்திருத்தங்கள் சீந்துவாரற்று மதிப்பிழந்தன. ஆப்பிரிக்கத் தேசியக் காங்கிரசும் தென் ஆப்பிரிக்கப் பொதுமைக் கட்சியும் பிற விடுதலை அமைப்புகளும் ஒருவர்க்கு ஒரு வாக்கு (ழநெ அயnஇ ழநெ எழவந) என்ற முழக்கத்தில் உறுதியாக நின்றன. அனைத்து இனத்தவர்க்கும் ஒரே நாடாளுமன்றம், அதற்கான தேர்தலில் ஒவ்வொருவருக்கும் ஒரு வாக்கு, ஒரு வாக்குக்கு ஒரே மதிப்பு என்ற உண்மையான சனநாயக அடிப்படையில் தேர்தல் நடத்தக் கோரின. அந்தத் தேர்தல் பெரும்பான்மையினரான கறுப்பின மக்களின் அதிகாரத்துக்கு வழிகோலும் என்பதால் வெள்ளை இனவெறி அரசு பிடிவாதமாக மறுத்து வந்தது. போத்தா அதிபராக இருக்கும் வரை இதே நிலைதான்.
பங்கேற்பு எப்போது?
ஆனால் கறுப்பின மக்களின் உறுதியான போராட்டம், வெள்ளையர் இடையிலான சனநாயக ஆற்றல்கள் அதற்களித்த ஆதரவின் பெருக்கம், பன்னாட்டு நெருக்குதல் யாவும் சேர்ந்து வெள்ளை ஆட்சியாளர்களின் போக்கில் ஒரு மாற்றத்தைக் கொண்டுவந்தன. இந்த மாற்றத்தின் விளைவாகவே நெல்சன் மண்டேலாவும் அவரின் தோழர்களும் கால் நூற்றாண்டுக்கு மேலான சிறையடைப்பிலிருந்து விடுதலை செய்யப்பட்டனர். புதிய வெள்ளை அதிபர் தெகிலர்க்கும் மண்டேலாவும் இனஒதுக்கலுக்கு முடிவு கட்டுவதற்கான வழிமுறைகள் குறித்துப் பேசி உடன்பாடு கண்டனர். இடைக்கால அரசு ஏற்படுத்தப்பட்டு ஒருவர்க்கு ஒரு வாக்கு என்ற அடிப்படையில் தேர்தல் அறிவிக்கப்பட்டது. முதன்முதலாக இந்தத் தேர்தலில்தான் ஆப்பிரிக்கத் தேசியக் காங்கிரசு பங்கேற்று, வெற்றியும் பெற்றது.
இதிலிருந்து தெரிவது என்னவென்றால், தேர்தலானது அதிகார மாயையைத் தோற்றுவிக்குமானால் விடுதலை இயக்கம் அதில் பங்கேற்பது போராட்டத்துக்கு உதவாது, ஊறுதான் செய்யும். இந்நிலையில் புறக்கணிப்புதான் சரியானது. தேர்தலானது கோட்பாட்டளவிலாவது மெய்யான அதிகாரத்துக்கு வழிகோலுவதாய் இருக்கும் நிலையில் அதில் பங்கேற்பது குறித்துக் கருதிப் பார்க்கலாம். மற்றக் காரணிகளையும் கணக்கில் கொண்டு, பங்கேற்கவும் செய்யலாம். இந்தப் பங்கேற்பினால் விடுதலை கிடைக்காமற் போகலாம், ஆனால் விடுதலைப் போராட்டத்துக்கான ஆதரவு விரிவடைந்து உறுதிப்படும்.
நமீபியாவில் நடந்தது என்ன?
இதே தென் ஆப்பிரிக்க இனவெறி அரசின் காலனி நாடாக இருந்த நமீபியா எனப்படும் தென்மேற்கு ஆப்பிரிக்கா. இந்த நாட்டின் விடுதலைக்காக சாம் நுயோமா தலைமையில் தென்மேற்கு ஆப்பிரிக்க விடுதலை அமைப்பு ஆயுதப் போராட்டம் நடத்தியது. முடிவில் ஐ.நா. தலையிட்டு ஏற்படுத்திய இணக்க உடன்படிக்கையின் அடிப்படையில் தேர்தல் நடைபெற்று, விடுதலை ஈட்டி சுவாப்போ அதிகாரத்துக்கு வந்தது. ஆயுதப் போராட்டம் நடத்துகிற விடுதலை இயக்கங்கள் கூட தேர்தல் என்ற வடிவத்தைப் புறந்தள்ளி விடுவதில்லை என்பதற்கு இது ஒரு சான்று. அது அரசியல் அதிகாரத்துக்கான போராட்டத்தைத் திசைதிருப்புவதாக இருக்கக் கூடாது என்பதுதான் முக்கியமானது.
நம் நாட்டின் சட்டவாத இடதுசாரிகளிடம் கேட்டால் சொல்வார்கள்: ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டு நல்லவிதமாகத் தேர்தல் பாதைக்குத் திரும்பியதால் விடுதலை கிடைத்தது என்று! நேபாளத்தில் ஏற்பட்ட இணக்கத்துக்கு சீதாராம் எச்சூரியும், ஏ.பி. பரதனும் இப்படித்தான் விளக்கமளித்தார்கள். உண்மையில் மாவோவியர்கள் தலைமையிலான மக்கள் - போர்தான் மன்னராட்சிக்கு எதிரான வெகுமக்கள் எழுச்சிக்கு வழி செய்தது என்பதையும், அதுதான் மற்ற அரசியல் கட்சிகளோடு உடன்பாட்டுக்கு வழி செய்தது என்பதையும் அவர்கள் பார்ப்பதில்லை. மக்கள் - போரும் அதன் விளைவான மக்கள் - எழுச்சியும் இல்லாமல் வெறும் வாக்குச் சீட்டு மூலமாகவே முடியாட்சியை வீழ்த்தி விட்டார்கள் என்பது திரிபுவாதமே தவிர வேறன்று. கொசோவாவில் கடுமையான ஆயுதப் போராட்டத்துக்குப் பிறகுதான் வாக்கெடுப்பு வந்தது. அது போராட்டத்தின் பலனை அறுவடை செய்கிற வடிவமே தவிர, அது மட்டுமே போராட்ட வடிவமா என்றால் இல்லை. கிழக்குத் திமோரிலும் இதே நிலைதான். அங்கெல்லாம் தேர்தல் பங்கேற்பு என்பது போராட்டத்துக்கு நிறைவாகவே தவிர, மாற்றாக அன்று.
தமிழீழப் பாடம்
தேசிய விடுதலை இயக்கத்துக்கும் தேர்தல் பங்கேற்புக்குமான உறவு குறித்துத் தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றிலிருந்தும் பாடம் கற்கலாம். 1976 வட்டுக்கோட்டைத் தீர்மானத்துக்குப் பிறகு அதற்கான வெகுமக்கள் ஒப்புதலைப் பெற 1977 பொதுத் தேர்லைத் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி பயன்படுத்திக் கொண்டது சரியானதே. அந்தத் தேர்தல் முடிவு தமிழீழத் தனியரசுக்கான சனநாயகக் கட்டளையைப் பெற்றுத் தந்தது. ஆனால் அதன் பிறகு விடுதலைப் போராட்டத்துக்கான தேர்தல் பாதையை சிங்கள அரசு அடைத்து விட்டது. ஆனால் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியோ நாடாளுமன்றத் தேர்தலை மட்டுமன்று, மாவட்ட வளர்ச்சி மன்றத் தேர்தலைக் கூட விட்டு வைக்காமல் போட்டியிட்டது. விடுதலைப் போராளி இயக்கங்கள் இந்தத் தேர்தல்களைப் புறக்கணிக்க அறைகூவின. பதவிகளுக்காகவே தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி இத்தேர்தல்களில் பங்கேற்றது விடுதலைக்கு இரண்டகம் ஆயிற்று.
தேசிய விடுதலைக் குறிக்கோளில் கிஞ்சிற்றும் விட்டுக் கொடுக்காமல் உறுதியாக நின்ற தமிழீழ விடுதலைப் புலிகள் எந்தத் தேர்தலிலும் போட்டியிட்டதில்லை. அல்லது அவர்கள் விடுதலைக் குறிக்கோளுக்குப் பயன்படும் விதத்தில் - குறைந்தது அதற்கு ஊறு நேராத விதத்தில் - போட்டியிடுவதற்கு ஒரு தேர்தல் கூட கிடைக்கவில்லை. தேர்தல் புறக்கணிப்பே விடுதலைப் புலிகளின் மூலவுத்தியாக இருந்து வந்தது.
1987 இந்திய--இலங்கை ஒப்பந்தப்படி வடக்கு--கிழக்கு மாகாண சபைக்குத் தேர்தல் நடைபெற்ற போதும் விடுதலைப் புலிகள் அதில் பங்கேற்கவில்லை. தமிழீழ மக்களும் அத்தேர்தலைப் புறக்கணித்த நிலையில் மாகாண சபைத் தேர்தலும் மாகாண சபையுமே கேலிக் கூத்தாகிப் போயின. 'மாகாண முதல்வர்' வரதராசப்பெருமாள் இந்தியப் படையின் பாதுகாப்போடு தமிழீழத்தைப் பறைசாற்றி விட்டுத் தமிழீழத்தை விட்டே ஓடிப் போய் வரலாற்றில் எட்டப்பன் வரிசையில் இடம் பிடித்துக் கொண்டனர்.
சிறிமா பண்டாரநாயக்கா வரவிடாமல் தடுப்பதற்காக சேனநாயகாவை ஆதரிப்பது, செயவர்த்தனா வரவிடாமல் தடுப்பதற்காகப் பண்டாரநாயக்காவை ஆதரிப்பது, ரணில் விக்கிரமசிங்கா வரவிடாமல் தடுப்பதற்காகச் சந்திரிகாவை ஆதரிப்பது, மகிந்த இராட்சபட்சர் வரவிடாமல் தடுப்பதற்காக ரணிலை ஆதரிப்பது… இவ்வாறான தந்திரவுத்தி எதையும் புலிகள் எப்போதும் கைக்கொண்டதில்லை. 'பெரிய தீமையை எதிர்த்துச் சிறிய தீமையை ஆதரிப்பது' என்றெல்லாம் சில நண்பர்கள் சொல்கிறார்களே அந்த வகையில் கூட புலிகள் சிங்களப் பேரினவாதக் கட்சிகளில் ஒன்றுக்கெதிராக மற்றொன்றை ஆதரித்ததில்லை. சிங்களக் கட்சிகளை எதிர்த்துத் தமிழ்க் கட்சியை ஆதரித்ததும் கூட இல்லை. தேர்தல் புறக்கணிப்பே விடுதலைப் புலிகளின் மூலவுத்தியாக இருந்தது.
2004 தேர்தல்
விதி என்றால் விலக்கும் உண்டுதானே? 2004 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குப் புலிகள் ஆதரவு தந்து வெற்றி தேடிக் கொடுத்தார்கள். இந்த விதிவிலக்கான முடிவுக்கு அப்போதையத் தனித்தன்மையான நிலைமைகளே காரணம்: (1) சிங்கள அரசுக்கும் புலிகளுக்கும் இடையே போர்;நிறுத்தம் நடைமுறையில் இருந்தது. (2) யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் தொடங்கிய பொங்கு தமிழ் எழுச்சி ஈழப் பரப்பெங்கும் படர்ந்து, அதுவரை உறங்கிக் கிடந்த அரசியல் ஆற்றல்களை எழுப்பிவிட்டது. (3) இதன் விளைவாகப் பிறந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஈழத் தமிழர்களின் ஒரே பேராளாக விடுதலைப் புலிகளை ஏற்றுக்கொண்டது. (4) இடைக்கால நிர்வாக சபை அமைப்பது தொடர்பான புலிகளின் முன்மொழிவுகளுக்கு வாக்காளர்களின் ஒப்புதலைப் பெறுவதற்குத் தேர்தல் ஒரு வாய்ப்பாயிற்று.
இந்த வகையில் புலிகளின் உத்தி வெற்றி பெற்றது. புலிகளுக்கும் அவர்களின் முன்மொழிவுகளுக்;கும் தமிழீழ மக்களின் பெரும்பான்மை ஆதரவு இருப்பதைத் தேர்தல் முடிவுகள் காட்டின.
விதிவிலக்கு விதியாகாது
நாமும் கூட தேர்தல் புறக்கணிப்பைப் பொதுவான மூலவுத்தியாகக் கடைப்பிடிக்கும் போதே விதிவிலக்கான நிலைமைகளில் மாறுபட்ட முடிவுகள் எடுக்கலாம். சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் இதைச் செய்தோம். இன அழிப்புப் போரின் உச்சத்தில் - ஓர் இடைக்காலப் போர் நிறுத்தமாவது ஏற்படச் செய்ய வேண்டுமென்று அதற்கான கடைசி முயற்சியாகத் தமிழ்நாட்டில் காங்கிரசைத் தோற்கடிக்கும் முயற்சியில் இறங்கினோம். ஆனால் இந்த எதிர்வகை உத்தியையே ஒவ்வொரு தேர்தலிலும் கடைப்பிடிக்க முடியாது. பழிவாங்கல் அல்லது தண்டனை என்ற முறையில் ஒரு கட்சி அல்லது தலைவரைத் தோற்கடிப்பதற்காகவே அடிப்படையில் அதே கொள்கை கொண்ட கட்சி அல்லது தலைவரை ஆதரித்தல் என்பது மக்களைப் பற்றியும், அவர்களது விடுதலைக்கான குறிக்கோளைப் பற்றியும் அக்கறையற்ற போக்கினையே காட்டும். மக்களைப் போராட்டப் பாதையில் அணிதிரட்டுவதற்கான நம் மூலவுத்திக்கு ஊறு செய்யும் படியான எந்தத் தந்திரவுத்தியும் நமக்கு ஏற்புடைத்தன்று.
தமிழகத்தில் நாம் என்ன செய்யலாம் என்பது பற்றிச் சற்றே விரிவாகச் சொல்ல வேண்டும். அரசியல் விடுதலை பெறுவதற்கோ, விடுதலை நோக்கி முன்னேறுவதற்கோ இங்கு நடைபெறும் தேர்தல் இடமளிக்குமா என்று பாருங்கள். செயலளவில் இல்லா விட்டாலும் கோட்பாடளவிலாவது இப்படி ஒரு வாய்ப்பு இருந்தால் அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வதில் தவறில்லை.
நாடாளுமன்றத் தேர்தலைப் பொறுத்த வரை, உங்களால் ஒருபோதும் பெரும்பான்மை பெற முடியாது@ அரசமைப்பில் திருத்தங்கள் செய்தவற்கான மூன்றிலிரு பங்கு பெரும்பான்மைக்கு வாய்ப்பே இல்லை. இந்தியாவெங்கும் தேசிய இன உரிமைக்காகவும், சனநாயகத்துக்காகவும், சமூகநீதிக்காகவும் போராடும் ஆற்றல்களை ஒன்றுபடுத்தி அல்லது ஒருங்கிணைத்துத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறலாமே என்று நீங்கள் கேட்கலாம். முதலாளியத்துக் குரிய, அதிலும் வல்லாதிக்க முதலாளியத்துக் குரிய இயல்பென்று லெனின் சுட்டிக்காட்டிய ஏற்றத்தாழ்வான வளர்ச்சி என்ற புறநிலை யையும், அதன் விளைவாக அரசியல் வளர்ச்சியில் ஏற்படும் ஏற்றத்தாழ்வையும் கணக்கில் கொண்டால் இந்தக் கேள்வியே எழாது. கடந்த அறுபதாண்டு கால இந்திய வரலாற்றில் தேர்தல் வழிப்பட்டோ தேர்தலுக்கு அப்பாற்பட்டோ அரசியல் இயக்கங்களின் வளர்ச்சியில் இந்த ஏற்றத்தாழ்வை எளிதில் உய்த்தறியலாம்.
இந்தியா முழுவதற்குமான சமூக மாற்றம், இந்தியப் புரட்சி, இந்திய அளவிலான தேர்தல் வெற்றி…. இதெல்லாம் போகாத ஊருக்கு வழிகாட்டுவதே தவிர வேறல்ல. இது புரட்சியை நிரந்தரமாக ஒத்தி வைக்கப் பயன்படும் கானல்நீர் வேட்டையே ஆகும். சனநாயகப் புரட்சி, புதிய சனநாயகப் புரட்சி, மக்கள்--சனநாயகப் புரட்சி, சோசலிசப் புரட்சி… எந்தப் பெயரில் என்றாலும் இந்தியப் புரட்சி என்பது வெறும் வாய்வீச்சே.
இந்திய அளவில் தேர்தலில் போட்டியிட்டு வெல்வது நடைமுறையளவில் மட்டுமன்று, கோட்பாட்டளவிலேயே முடியாத காரியம். கோட்பாட்டளவில் முடியும் என்றால் முயற்சி செய்து பார்ப்பதில் பொருளுண்டு. அந்த முயற்சி வெற்றி பெறா விட்டாலும் மாற்றுவழி தேடுவதற்குரிய நியாயத்தை வழங்கும். கோட்பாட்டளவிலேயே முடியாத ஒரு முயற்சியில் ஈடுபடுவது மக்களிடையே மயக்கம் வளர்ப்பது மட்டுமன்று, போராடும் ஆற்றலை வீணடிப்பதும் ஆகும்.
தமிழகச் சட்டப் பேரவையைப் பொறுத்த வரை தனக்கென்று இறைமை இல்லாத பேர்-அவைதான். இதை உண்மையாகவே சட்டப் பேரவை என்றும், இதன்வழித் தேர்ந்தெடுக்கப்படும் ஆட்சியை உண்மையாகவே அரசு என்றும் நம்புவது, மக்களை நம்பச் சொல்வது ஏமாற்றுத்தனம் அல்லது ஏமாளித்தனமே ஆகும்.
இடதுசாரிக் கட்சிகள் எனப்படுகிறவை எவ்வளவுதான் முயன்றும் இந்திய அளவில் சீராக வளர முடியவில்லை, தேர்தலிலும் அவ்வாறு வெல்ல முடியவில்லை என்பது கண்கூடு. மாநில அளவில் அவை ஆட்சியமைக்கும் அளவுக்கு வெற்றி கண்டுள்ள மேற்கு வங்கம், கேரளம், திரிபுரம் ஆகிய பகுதிகளிலும் கூட இந்திய ஆளும் வர்க்கக் கட்சிகளுக்கு அடிப்படையிலேயே மாறான கொள்கைகள் எதையும் கடைப்பிடிக்கவில்லை, அதற்கு வழியே இல்லை.
தமிழகத்தில் திராவிட இயக்கக் கட்சிகளின் பட்டறிவும், தமிழ்த் தேசிய நிலைப்பாட்டுடன் தேர்தலில் போட்டியிட்ட ஈ.வெ.கி.சம்பத் தலைமையிலான தமிழ்த் தேசியக் கட்சி, ம.பொ.சி தலைமையிலான தமிழரசுக் கழகம், சி.பா.ஆதித்தனார் தலைமையிலான நாம் தமிழர் கட்சி ஆகியவற்றின் பட்டறிவும் கூட இன்றைய இந்திய அரசமைப்பில் தேர்தல் பங்கேற்பினால் தீமைகள் உண்டே தவிர நன்மைகள் இல்லை என்பதையே காட்டும்.
இந்தி எதிர்ப்புப் போராட்டத்தால் அரசியலில் வளர்ச்சி கண்டு ஆட்சியைப் பிடித்த திராவிட முன்னேற்றக் கழகமோ, அதன் தொடர்ச்சியாக எழுந்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமோ மாநில ஆட்சியைப் பயன்படுத்தி அல்லது இந்திய நாடாளுமன்றப் பதவிகளையும் இந்திய அரசிலான அமைச்சர் பதவிகளையும் பயன்படுத்தி இந்தித் திணிப்பைத் தடுக்க உருப்படியாக எதுவும் செய்ய முடியவில்லை, அரசமைப்புச் சட்டத்தின் 17ஆவது பகுதியில் ஒரே ஒரு சொல்லைக் கூட நீக்கவோ திருத்தவோ முடியவில்லை என்பதை மறந்து விடக் கூடாது. இது நமக்கோர் பாடம், எச்சரிக்கை!
ஆக, நண்பர்களே, தேர்தலைப் புறக்கணிப்பது தவிர வேறு வழியில்லை. வரும் 2011 சட்டப் பேரவைத் தேர்தலில் இந்த முடிவை மாற்றவோ சற்றுத் தளர்த்தவோ காரணம் ஒன்றுமில்லை. ஆனால் இந்தப் புறக்கணிப்பு செயலின்மைக்கு வழிகாட்டுவதாய் இருக்கக் கூடாது என்றால், மக்களைப் போராட்ட அரசியலுக்கு அணிதிரட்டுவதில் நாம் முழுக் கவனம் செலுத்த வேண்டும். தேர்தலை மறுப்பது மறுப்பதற்காகவே அல்ல, போராட்டம் எடுப்பதற்காகவே என்பதை மனத்திற் கொள்வோம்.