Pages

Thursday, 24 February 2011

தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டு அ.தி.மு.க.வினர் 12,056 பேர் மனு

வரும் தமிழக சட்டப்பேரவை தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டும் என்று கோரி, 12 ஆயிரத்து 56 அ.தி.மு.க.வினர் கட்சித் தலைமையிடம் விருப்ப மனு அளித்துள்ளனர்.

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட விரும்பும் அ.தி.மு.க. தொண்டர்கள் விருப்ப மனு அளிக்கலாம் என்று கட்சி பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்ததைத் தொடர்ந்து, பிப்ரவரி 5-ம் தேதி முதல் அ.தி.மு.க.வினர் விருப்ப மனு அளித்தனர். மனு அளிக்க இம்மாதம் 18-ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், மேலும் கால அவகாசம் தர வேண்டும் என்ற கட்சியினரின் வேண்டுகோளை ஏற்று, பிப்ரவரி 23 வரை மனு அளிக்கலாம் என ஜெயலலிதா தெரிவித்திருந்தார்.
இந்த சூழலில், ஏராளமான அ.தி.மு.க.வினர் ஆர்வத்துடன் விருப்ப மனு அளித்துள்ளனர். இதனால், கடந்த 20 நாள்களாக சென்னை, அவ்வை சண்மும் சாலையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் தினமும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்தனர்.
விருப்ப மனு தர கடைசி நாளான புதன்கிழமையும் ஏராளமானோர் மனு அளித்தனர். புதன்கிழமை மாலை வரை 12 ஆயிரத்து 268 பேர் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டு விருப்ப மனு அளித்துள்ளதாக அ.தி.மு.க. தலைமை அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதில் தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்காக 12 ஆயிரத்து 56 பேர் மனு அளித்துள்ளனர். அவர்களில் 1,503 பேர், கட்சிப் பொதுச் செயலாளரான ஜெயலலிதா தங்கள் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு அளித்துள்ளனர்.
இது தவிர, புதுச்சேரி மாநில பேரவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டு 181 பேரும், கேரள பேரவைத் தேர்தலுக்காக 31 பேரும் மனு அளித்துள்ளனர்.
அ.தி.மு.க. தொண்டர்கள் செலுத்திய விருப்ப மனுக் கட்டணம் மூலம் ரூ.12 கோடியே 14 லட்சத்து 96 ஆயிரம் வசூலாகியுள்ளது.

அ.தி.மு.க. அணியில் பார்வர்டு பிளாக் கட்சிக்கு ஒரு தொகுதி

அ.தி.மு.க. தலைமையிலான அணியில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சிக்கு ஒரு சட்டப்பேரவை தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை, சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தேசிய செயலாளர் தேவராஜன், தேசிய செயலாளரும், மேற்குவங்க மாநில வேளாண்மை துறை அமைச்சருமான நரேன் தேவ், கட்சியின் மாநில பொதுச் செயலாளர் பி.வி. கதிரவன் உள்ளிட்ட அக்கட்சி நிர்வாகிகள் புதன்கிழமை சந்தித்துப் பேசினர்.
இந்த சந்திப்பு குறித்து பின்னர் செய்தியாளர்களிடம் தேவராஜன் கூறியதாவது:
தமிழ்நாட்டில் இடதுசாரி, ஜனநாயக, முற்போக்கு அணியை வலுப்படுத்தும் வகையில், வரும் சட்டப்பேரவை தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான அணியில் சேர்ந்து போட்டியிடுவது என்று அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி முடிவு செய்துள்ளது. இது குறித்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினோம்.
இந்தத் தேர்தலில் அ.தி.மு.க. அணியில் எங்கள் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. சிங்கம் சின்னத்தில் எங்கள் கட்சி வேட்பாளர் போட்டியிடுவார் என்றார் தேவராஜன்.
எந்த தொகுதி?
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தொகுதியில்தான் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி தொடர்ச்சியாக போட்டியிட்டு வருகிறது. அக்கட்சியின் பிரதிநிதிகள் ஏற்கெனவே இந்தத் தொகுதியிலிருந்து சட்டப்பேரவைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். எனவே, இந்தத் தேர்தலிலும் தங்கள் கட்சிக்கு உசிலம்பட்டி தொகுதியை ஒதுக்க வேண்டும் என்று
அ.தி.மு.க.விடம் பார்வர்டு பிளாக் கட்சி கேட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

பேரவைத் தேர்தல்: சோனியாவுடன் ஐவர் குழுவினர் சந்திப்பு

தமிழக சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக அமைக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியின் ஐவர் குழுவினர், கட்சித் தலைவர் சோனியா காந்தியை தில்லியில் புதன்கிழமை சந்தித்தனர்.

சட்டப்பேரவைத் தேர்தலுக்காக கூட்டணி கட்சிகளுடன் காங்கிரஸ் கட்சி சார்பில் தொகுதிப் பங்கீடு பற்றி பேசுவதற்காக மத்திய அமைச்சர்கள் ப. சிதம்பரம், ஜி.கே. வாசன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.வீ. தங்கபாலு, அகில இந்திய செய்தி தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன், ஜெயகுமார் எம்.எல்.ஏ. ஆகியோரைக் கொண்ட ஐவர் குழுவை சோனியா காந்தி அமைத்துள்ளார்.
இந்தக் குழுவினர் தி.மு.க.வின் தொகுதி பங்கீட்டுக் குழுவுடன் அண்மையில் முதல் கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். இந்நிலையில், ஐவர் குழுவினர் கட்சித் தலைவர் சோனியா காந்தியை புதன்கிழமை மாலை தில்லியில் சந்தித்துப் பேசினர்.
சோனியா காந்தியின் இல்லத்தில் நடந்த இந்த சந்திப்பின்போது, தமிழ்நாடு காங்கிரஸ் மேலிடப் பார்வையாளர் குலாம் நபி ஆசாத், சோனியாவின் அரசியல் ஆலோசகர் அகமது படேல், மத்திய அமைச்சர் வயலார் ரவி ஆகியோரும் உடனிருந்தனர்.
முதல்கட்ட பேச்சின்போது தி.மு.க.வினர் தெரிவித்த கருத்துகளை, சோனியா காந்தியிடம் ஐவர் குழுவினர் தெரியப்படுத்தியதாகவும், சோனியா காந்தி கூறும் ஆலோசனைகளின் அடிப்படையில், தி.மு.க. நிர்வாகிகளுடன் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் ஐவர் குழுவினர் ஈடுபடுவார்கள் என்றும் காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

மணவிழாவில் பிரசாரத்தை தொடங்கினார் முதல்வர்!


நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு மக்கள் ஆதரவு வழங்க வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி கேட்டுக் கொண்டார்.
திருவண்ணாமலையில் புதன்கிழமை நடைபெற்ற முன்னாள் அமைச்சர் கு. பிச்சாண்டி இல்லத் திருமண விழாவில், முதல்வர் பேசியது:
"திமுகவில் ஏதோ பதவியில் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த இயக்கத்தில் யாரும் தங்களை ஆரம்பத்தில் ஈடுபடுத்திக் கொள்ளவில்லை. இது ஒரு பகுத்தறிவுப் பாசறை. திராவிடக் கொள்கைகளை, திராவிட இன உணர்வை, தமிழ்மொழிப் பற்றை பரப்புவதற்காக உருவாக்கப்பட்ட இயக்கம். பெரியாரால் உருவாக்கப்பட்ட சுயமரியாதை இயக்கம், அண்ணாவால் அரசியல் இயக்கமாக திராவிட முன்னேற்றக் கழகம் உருவெடுத்தது. இன்றைக்கு இந்திய துணைக் கண்டத்தில் உள்ள அரசியல் கட்சிகளில் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய, இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயிக்கக்கூடிய கட்சிகளில் ஒன்றாக திமுக மாறியுள்ளது.
நாங்கள் ஆற்றுகின்ற பணிகளை ஆராய்ந்து, ஜனநாயக மக்கள் சக்திக்கும், சர்வாதிகாரத்துக்கும் நடைபெறும் போராட்ட தேர்தல் களத்தில் நாம் நிற்கும்
நேரத்தில் இத்திருமணம் நடைபெறுகிறது.
மணமக்கள், தாங்கள் பெறும் குழந்தைச் செல்வங்களுக்கு, ஆணாக இருந்தால் வெற்றிச்செல்வன் என்றும், பெண்ணாக இருந்தால் வெற்றிச்செல்வி என்றும் பெயர் சூட்டக் கூடிய அளவுக்கு நடைபெறவுள்ள தேர்தலில் நீங்கள் உங்கள் ஆதரவை வழங்க வேண்டும் என்றார் முதல்வர்.
பிரமுகர்கள்: பாமக தலைவர் ஜி.கே. மணி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.எம். காதர்மொகிதீன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலர் ரவிக்குமார், புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி. சண்முகம் உள்ளிட்டோர் மணவிழாவில் பங்கேற்றனர்.
ஆரணி மக்களவைத் தொகுதி உறுப்பினர் என்ற முறையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் எம்.கிருஷ்ணசாமி, அவரது மகனும் செய்யாறு எம்எல்ஏவுமான எம்.கே. விஷ்ணுபிரசாத், எம்எல்ஏக்கள் பி.எஸ். விஜயகுமார் (போளூர்), சி. ஞானசேகரன் (வேலூர்) ஆகியோர் பங்கேற்றனர்.

Wednesday, 23 February 2011

"தி.மு.க கூட்டணியை தோற்கடிப்போம்': என்.எஸ்.பழனிசாமி


 தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் தி.மு.க கூட்டணியை தோற்கடிப்போம் என்று கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் என்.எஸ்.பழனிசாமி (முன்னாள் எம்.எல்.ஏ) தெரிவித்தார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை அவர் கூறியது:
விவசாய விரோதக் கொள்கையுடன் தி.மு.க அரசு செயல்படுகிறது. வரும் சட்டப்பேரவை தேர்தலில் தி.மு.க கூட்டணியை விவசாயிகள் தோற்கடிக்க வேண்டும். தேர்தலில் ஆதரவு யாருக்கு என்பதை விவசாய அமைப்புகள் ஒன்று கூடி விவாதித்து முடிவு செய்யும்.
கள் எந்தக் கலப்படமும் இல்லாத பானம். இதனை நச்சு கள் என்று கூறி விவசாயிகளை சிறையில் அடைக்கும் தி.மு.க அரசை கண்டித்து வரும் 24-ம் தேதி கோவையில் எப்.ஐ.ஆர். நகல் எரிப்புப் போராட்டம் நடைபெறும் என்றார்.

234 தொகுதிகளிலும் பா.ஜ.க. போட்டி: பொன். ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் பாஜக போட்டியிடும் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

வேலூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்க வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
தமிழ்நாட்டில் பாஜக தனிப்பெரும் சக்தியாக வளர்ந்துள்ளது. 234 தொகுதிகளிலும் போட்டியிடுவோம். இதுவரை கூட்டணி குறித்து எந்தக் கட்சியும் எங்களுடன் பேசவில்லை. தமிழகத்தில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றுசேர்ந்து திமுகவை ஆட்சியைவிட்டு அகற்றவேண்டும்.
மதுக்கடைகளை மூட வலியுறுத்தி நாகர்கோவிலில் இம்மாதம் 26-ம் தேதி சிலம்பொலி போராட்டம் நடைபெறும்.
தமிழகத்தில் அவசரக் கோலத்தில் நடக்கவிருந்த மேலவைத் தேர்தல் நிறுத்தப்பட்டது தமிழக பாஜகவுக்கு கிடைத்த வெற்றி. சட்டப்பேரவை, உள்ளாட்சித் தேர்தல் முடிந்த பின்னரே மேலவைக்கு தேர்தல் நடத்தவேண்டும்.
இலங்கைத் தமிழர்கள், தமிழக மீனவர்கள் பிரச்னையில் அரசியல் லாபம் கருதாமல் உழைக்கவேண்டும்.
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படுவதற்கு பாஜக தொடர்ந்து தனது எதிர்ப்பை பதிவுசெய்துள்ளது.
ஜனவரி 12-ம் தேதி இலங்கை கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்ட வீரபாண்டியன் குடும்பத்துக்கு தமிழக பாஜக சார்பில் ரூ. 2 லட்சம் வழங்கியுள்ளோம். அவரது சகோதரி ரேவதியின் படிப்புச் செலவை பாஜக ஏற்கும்.
இலங்கை அரசால் கொடுமையான தாக்குதலுக்கு ஆளாகி, குடும்பம், சொத்துகளை இழந்து தவிக்கும் இலங்கைத் தமிழர்கள் மறுவாழ்வுக்கு பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் மார்ச் 6-ம் தேதி முதல் 15-ம் தேதிவரை நிதிவசூல் செய்யப்படும்.
சென்னையில் 8-ம் தேதி ஒரே நேரத்தில் 30 இடங்களில் பாஜக பொறுப்பாளர்கள் வீதிவீதியாகச் சென்று நிதி வசூலிப்பார்கள். இந்தப் பணம் முழுவதும் இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வுக்கு அனுப்பிவைக்கப்படும் என்றார் அவர்.

Tuesday, 22 February 2011

சட்டசபை தேர்தலில் காங்கிரசை எதிர்க்கும் கட்சிக்கே ஆதரவு: சீமான்

வரும் சட்டசபை தேர்தலில் காங்கிரஸை எதிர்க்கும் கட்சிக்கு தான் நாங்கள் ஆதரவு அளிப்போம் என்று நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டம் நேற்று கோவை சிவானந்தா காலனியில் நடந்தது. அதில் சீமான் கலந்து கொண்டு பேசியதாவது,

காங்கிரஸ் கட்சியை ஒழித்துக் கட்டுவது தான் எங்கள் கனவு. இலங்கையில் தமிழ் இன அழிவுக்கு காரணமே காங்கிரஸ் தான். எனவே, அக்கட்சியை வீழ்த்த துடித்துக் கொண்டிருக்கிறோம்.

வரும் சட்டசபை தேர்தலில் காங்கிரசை எதிர்க்கும் கட்சிக்கே நாங்கள் ஆதரவு அளிப்போம். காங்கிரசை எதிர்ப்பதனால் ஜெயலிதாவுக்கு ஆதராக போய்விடுமே என்றால் இரட்டை இலைக்கு ஓட்டு கேட்பதால் சிறுமை வந்துவிடாது. மக்களை காங்கிரசின் கை சின்னத்தில் ஓட்டுப் போடாதீர்கள் என்று சொல்லும்போது, மாறாக எந்த சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்பதை சொல்லித் தான் ஆக வேண்டும்.

அதற்காக அதிமுகவுக்கு ஓட்டு கேட்பதில் சிறுமை ஒன்றும் இல்லை என்கிறோம். காங்கிரஸை வீழ்த்துவது தான் எங்கள் கட்சியின் முதல் பயணம். தமிழன் இன்னும் உயிரோடுதான் இருக்கிறான் என்பதை காங்கிரசுக்கு புரிய வைக்க வேண்டும் என்றார்.

முன்னதாக சீமான் நிருபர்களிடம் கூறியதாவது,

மீனவர்களுக்காக திமுக ஆர்பாட்டம் நடத்தியதெல்லாம் தேர்தல் வருவதால் நடத்தப்படும் நாடகம். வரும் தேர்தலில் திமுகவை மீனவர்கள் வீழ்த்துவார்கள்.

இலங்கை அரசு திட்டமிட்டே தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த பிரச்சனை குறித்து இந்திய வெளியுறவு துறை செயலாளர் நிருபமா ராவ் இலங்கை சென்று பேச்சுவார்த்தை நடத்திய பிறகும் தாக்குதல் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இந்தச் செயல் இலங்கை இந்தியாவின் குரலை மதிக்கவில்லை என்பதையே காட்டுகிறது. 

சட்டசபை தேர்தலில் காங்கிரசுக்கு எதிராக பிரசாரம் செயவதோடில்லாமல் அக்கட்சியை தோற்கடிப்போம். முதல்வர் பதவிக்கு கருணாநிதி வருவாரா? அல்லது ஜெயலலிதா வருவாரா? என்று கவலை இல்லை.

காங்கிரசை எதிர்தது நிற்கும் வலிமையான கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரம் செய்வோம். பா.ம.க., விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு எங்களுடைய ஆதரவும் இல்லை. எதிர்ப்பும் இல்லை என்றார்.