Pages

Thursday, 24 February 2011

பேரவைத் தேர்தல்: சோனியாவுடன் ஐவர் குழுவினர் சந்திப்பு

தமிழக சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக அமைக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியின் ஐவர் குழுவினர், கட்சித் தலைவர் சோனியா காந்தியை தில்லியில் புதன்கிழமை சந்தித்தனர்.

சட்டப்பேரவைத் தேர்தலுக்காக கூட்டணி கட்சிகளுடன் காங்கிரஸ் கட்சி சார்பில் தொகுதிப் பங்கீடு பற்றி பேசுவதற்காக மத்திய அமைச்சர்கள் ப. சிதம்பரம், ஜி.கே. வாசன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.வீ. தங்கபாலு, அகில இந்திய செய்தி தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன், ஜெயகுமார் எம்.எல்.ஏ. ஆகியோரைக் கொண்ட ஐவர் குழுவை சோனியா காந்தி அமைத்துள்ளார்.
இந்தக் குழுவினர் தி.மு.க.வின் தொகுதி பங்கீட்டுக் குழுவுடன் அண்மையில் முதல் கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். இந்நிலையில், ஐவர் குழுவினர் கட்சித் தலைவர் சோனியா காந்தியை புதன்கிழமை மாலை தில்லியில் சந்தித்துப் பேசினர்.
சோனியா காந்தியின் இல்லத்தில் நடந்த இந்த சந்திப்பின்போது, தமிழ்நாடு காங்கிரஸ் மேலிடப் பார்வையாளர் குலாம் நபி ஆசாத், சோனியாவின் அரசியல் ஆலோசகர் அகமது படேல், மத்திய அமைச்சர் வயலார் ரவி ஆகியோரும் உடனிருந்தனர்.
முதல்கட்ட பேச்சின்போது தி.மு.க.வினர் தெரிவித்த கருத்துகளை, சோனியா காந்தியிடம் ஐவர் குழுவினர் தெரியப்படுத்தியதாகவும், சோனியா காந்தி கூறும் ஆலோசனைகளின் அடிப்படையில், தி.மு.க. நிர்வாகிகளுடன் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் ஐவர் குழுவினர் ஈடுபடுவார்கள் என்றும் காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment