தேர்தல் நேரத்தில் ஆட்சியாளர்களின் குறைகளை எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டி பொதுக்கூட்டங்கள் நடத்திக் கொண்டும், அறிக்கைகளை வெளியிட்டுக் கொண்டும் இருப்பார்கள். ஆட்சியாளர்களோ விடுபட்ட பணிகளை விரைந்து முடித்து மக்களிடம் நல்ல பெயரெடுக்க முயன்று கொண்டிருப்பார்கள். இது சாதாரண கவுன்சிலர் முதல் எம்.எல்.ஏ., எம்.பி. வரை அனைவருக்கும் பொதுவானதுதான்.மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் இதற்கு விதிவிலக்கு அல்ல. சமீபகாலமாக தனது நாடாளுமன்றத் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் தன்னால் செய்யப்பட்ட பணிகள் இவை இவை எனச் சுட்டிக்காட்டி, தொடர்ந்து பத்திரிகைகளுக்கு செய்திகளை வெளியிட்டவண்ணம் உள்ளார் இவர்.சிவகங்கை, காரைக்குடி மற்றும் காளையார்கோவில் பகுதிகளில் 3 புதிய எரிவாயு விநியோகஸ்தர்களை நியமிப்பது தொடர்பாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தலைவருக்குக் கடிதம் எழுதினேன். அவர் விரைவில் பரிசீலனை செய்யவுள்ளதாகத் தெரிவித்துள்ளார் என்று ஓர் அறிக்கை.மதுரை-தொண்டி தேசிய நெடுஞ்சாலையைச் சீரமைக்க மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சருக்குக் கடிதம் அனுப்பினேன். அவரும் அதற்கான நிதியை ஒதுக்கியுள்ளார். விரைவில் இதற்கான பணிகள் தொடங்கும். காரைக்குடி தாலுகா, பனங்குடி கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என்ற தனது பரிந்துரையின் பேரில், தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் அதற்காக உத்தரவிட்டுள்ளார் என மற்றொரு அறிக்கை.தனது முயற்சியால்தான் புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தில் ரயில் முன்பதிவு மையம் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது என்று இன்னொரு அறிக்கை. புதுக்கோட்டை மாவட்டம், அரிமழம் ஒன்றியத்தில் உள்ள கீழாநிலைக்கோட்டை-உசிலம்பட்டி சாலையை தனது பரிந்துரையின்பேரில் ரூ. 8.36 லட்சம் செலவில் சீர்படுத்தும் பணி நடைபெறவுள்ளதாக மேலும் ஓர் அறிக்கை என அறிக்கைகளை வெளியிட்டுக் கொண்டே இருக்கிறார். இது தேர்தல் ஜுரத்தின் விளைவுதானோ!
No comments:
Post a Comment