மனோதிடமற்ற, முதுகெலும்பில்லாத பிரதமர் என்று மன்மோகன் சிங் மீது அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: கூட்டணிக் கட்சிகளை சமாளிக்க முடியாத தனது இயலாமையை ஊடகங்களுடனான கலந்துரையாடலின்போது பிரதமர் ஒப்புக் கொண்டிருக்கிறார். அரசின் தோல்விகளுக்கு கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் ஏற்பட்ட சமரசங்களே காரணம் என்று தனது உரையாடலின் போது சுட்டிக்காட்டிக் கொண்டே இருந்தார் மன்மோகன் சிங். ரூ. 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருந்த நிலையில், 2-வது முறையாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அமைக்கப்பட்ட போது, ஆ. ராசா மீண்டும் தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக்கப்பட்டது குறித்து கேட்டதற்கு, தனது விருப்பப்படி ராசா நியமனம் செய்யப்படவில்லை என்றும், கூட்டணிக் கட்சியின் நிர்பந்தமே அதற்கு காரணம் என்றும் பிரமதர் கூறினார். அமைச்சர்களை நியமிக்கும் அதிகாரம் பிரதமரிடம் தான் இருக்கிறது என்று இந்திய அரசியல் சாசனத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டு உள்ளது. குறிப்பிட்ட பிரச்சினைகள் குறித்து தனது கட்சியின் தலைவருடனும், கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களுடனும் கலந்து ஆலோசிப்பதில் தவறில்லை. ஆனால், மத்திய அமைச்சரை தேர்ந்தெடுப்பதில் தனக்கு எந்தவித பங்கும் இல்லை என்றும், இந்த விஷயத்தில் தன்னுடைய கைகள் கட்டப்பட்டுவிட்டன என்றும் ஊடகங்கள் முன்பு பிரதமர் பதவியில் இருப்பவர் ஒப்புக் கொண்டிருப்பது இந்திய அரசியல் சாசனத்தையே அவமதிப்பது போல் உள்ளது. முதலில் வருபவருக்கு முதலில் வழங்குவது என்ற கொள்கையின் அடிப்படையில் 2ஜி அலைக்கற்றையை லெட்டர் பேடு நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்தது போன்ற பல்வேறு சர்ச்சைக்குரிய நடவடிக்கைகளை ராசா எடுத்த போது மௌனம் சாதித்தது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, இது தொடர்பாக தன்னுடைய கவலையை தெரிவித்து ராசாவுக்கு கடிதம் எழுதியதாக மன்மோகன் சிங் குறிப்பிட்டார். 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முற்றிலும் வெளிப்படையான முறையில் நடப்பதாகவும், தான் ஏற்கெனவே அளித்த வாக்குறுதிக்கு முரணாக எதுவும் நடக்காது என்றும், எந்தத் தவறுக்கும் இடமில்லை என்றும் ராசா உறுதி அளித்தார் என்று பிரதமர் குறிப்பிட்டார். ராசா அளித்த உறுதியின் அடிப்படையில், ரூ. 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி மதிப்புடைய இந்த நாட்டின் சொத்து கொள்ளையடிக்கப்பட்டதை பிரதமர் அமைதியாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருந்தார். இந்த நாட்டுக்கு ஏற்பட்ட இழப்பு குறித்து தனக்குத் தெரியாது என்று பொருளாதார நிபுணரான மன்மோகன் சிங் சொல்லியிருக்கக் கூடாது. இந்தப் பிரச்சினையில் தலையிட்டு, நாட்டின் சொத்து சுரண்டப்படுவதை தடுத்து இருக்க வேண்டும். ஆனால், கூட்டணி தர்மம் என்கிற தெளிவற்ற காரணத்தைக் காட்டி, வாய்மூடி மௌனியாக அவர் இருந்துவிட்டார். இது தான் இன்று இந்தியா எதிர்கொண்டிருக்கின்ற வருத்தம் தோய்ந்த உண்மை நிலை. தன்னுடைய அமைச்சர்களை கட்டுப்படுத்த முடியாததோடு மட்டுமல்லாமல், எல்லை மீறி பிரச்சினைகள் செல்லும் போதும் அதில் தலையிட முடியாத ஒருவரை நாம் பிரதமராக பெற்றிருக்கிறோம். எஸ். பாண்ட் அலைக்கற்றை ஒதுக்கீடு, காமன்வெல்த் விளையாட்டு ஊழல், ஆதர்ஷ் வீட்டுவசதி சங்க ஊழல் போன்ற கேள்விகளுக்கும் திருப்திகரமான பதில்களை பிரதமர் தரவில்லை. மொத்தத்தில் பிரதமரின் கலந்துரையாடல் புஸ்வாணமாக அமைந்துவிட்டது. இதன் மூலம் கூட்டணி தர்மம் என்ற எளிதில் உடையக்கூடிய கண்ணாடி போன்ற பலவீனமான கேடயத்தை பயன்படுத்தி, இந்த நாட்டை தொற்றிக் கொண்டிருக்கிற அனைத்து நோய்களையும் மூடி மறைக்கும் மனோதிடமற்ற, முதுகெலும்பில்லாத பிரதமர் நமக்கு வாய்த்திருக்கிறார் என்பது வெளிப்பட்டிருப்பதாக ஜெயலலிதா கூறியுள்ளார்
No comments:
Post a Comment