Pages

Thursday, 24 February 2011

மணவிழாவில் பிரசாரத்தை தொடங்கினார் முதல்வர்!


நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு மக்கள் ஆதரவு வழங்க வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி கேட்டுக் கொண்டார்.
திருவண்ணாமலையில் புதன்கிழமை நடைபெற்ற முன்னாள் அமைச்சர் கு. பிச்சாண்டி இல்லத் திருமண விழாவில், முதல்வர் பேசியது:
"திமுகவில் ஏதோ பதவியில் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த இயக்கத்தில் யாரும் தங்களை ஆரம்பத்தில் ஈடுபடுத்திக் கொள்ளவில்லை. இது ஒரு பகுத்தறிவுப் பாசறை. திராவிடக் கொள்கைகளை, திராவிட இன உணர்வை, தமிழ்மொழிப் பற்றை பரப்புவதற்காக உருவாக்கப்பட்ட இயக்கம். பெரியாரால் உருவாக்கப்பட்ட சுயமரியாதை இயக்கம், அண்ணாவால் அரசியல் இயக்கமாக திராவிட முன்னேற்றக் கழகம் உருவெடுத்தது. இன்றைக்கு இந்திய துணைக் கண்டத்தில் உள்ள அரசியல் கட்சிகளில் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய, இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயிக்கக்கூடிய கட்சிகளில் ஒன்றாக திமுக மாறியுள்ளது.
நாங்கள் ஆற்றுகின்ற பணிகளை ஆராய்ந்து, ஜனநாயக மக்கள் சக்திக்கும், சர்வாதிகாரத்துக்கும் நடைபெறும் போராட்ட தேர்தல் களத்தில் நாம் நிற்கும்
நேரத்தில் இத்திருமணம் நடைபெறுகிறது.
மணமக்கள், தாங்கள் பெறும் குழந்தைச் செல்வங்களுக்கு, ஆணாக இருந்தால் வெற்றிச்செல்வன் என்றும், பெண்ணாக இருந்தால் வெற்றிச்செல்வி என்றும் பெயர் சூட்டக் கூடிய அளவுக்கு நடைபெறவுள்ள தேர்தலில் நீங்கள் உங்கள் ஆதரவை வழங்க வேண்டும் என்றார் முதல்வர்.
பிரமுகர்கள்: பாமக தலைவர் ஜி.கே. மணி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.எம். காதர்மொகிதீன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலர் ரவிக்குமார், புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி. சண்முகம் உள்ளிட்டோர் மணவிழாவில் பங்கேற்றனர்.
ஆரணி மக்களவைத் தொகுதி உறுப்பினர் என்ற முறையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் எம்.கிருஷ்ணசாமி, அவரது மகனும் செய்யாறு எம்எல்ஏவுமான எம்.கே. விஷ்ணுபிரசாத், எம்எல்ஏக்கள் பி.எஸ். விஜயகுமார் (போளூர்), சி. ஞானசேகரன் (வேலூர்) ஆகியோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment