Pages

Tuesday, 22 February 2011

80 தொகுதிகள் கேட்கிறது காங்கிரஸ்

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் 80 தொகுதிகளில் போட்டியிடுவதற்கு காங்கிரஸ் தரப்பில் விருப்பம் தெரிவித்துள்ளதாக அந்தக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. தி.மு.க., காங்கிரஸ் இடையே தேர்தல் தொகுதி உடன்பாடு தொடர்பான பேச்சு அண்ணா அறிவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இதற்காக, காங்கிரஸ் கட்சியின் தேர்தல் தொகுதிப் பங்கீட்டுக் குழுவில் இடம்பெற்றுள்ள தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வீ.தங்கபாலு, மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், ஜி.கே.வாசன், மாநிலங்களவை உறுப்பினர் ஜெயந்தி நடராஜன், எம்.எல்.ஏ. ஜெயக்குமார் ஆகியோர் அண்ணா அறிவாலயத்துக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை வந்தனர். தி.மு.க.வின் தேர்தல் தொகுதி பங்கீட்டுக் குழுவில் உள்ள துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் ஆர்க்காடு வீராசாமி, துரைமுருகன், பொன்முடி, தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு ஆகியோர் காங்கிரஸ் தலைவர்களை வாயில் வரை வந்து வரவேற்று அழைத்துச் சென்றனர். தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை மாலை 4 மணிக்குத் தொடங்கி ஒரு மணி நேரம் நடைபெற்றது. அப்போது, தி.மு.க. கூட்டணியில் 80 தொகுதிகளில் போட்டியிடுவதற்கு காங்கிரஸ் தரப்பில் விருப்பம் தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் மேலிடம் ஆட்சியில் பங்குபெற விரும்புவதாகவும் குழுவினர் தெரிவித்துள்ளனர். தி.மு.க. தரப்பில் பா.ம.க.வுக்கு கடந்த முறை ஒதுக்கப்பட்ட அதே 31 தொகுதிகள் இப்போதும் அளிக்கப்பட்டிருப்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடந்த 2006 பேரவைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இருந்த கம்யூனிஸ்டுகள் இப்போது அ.தி.மு.க. கூட்டணிக்குச் சென்றுள்ளனர். அவர்கள் போட்டியிட்ட 23 தொகுதிகளில் விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளுக்கு ஒதுக்கியது போக மீதமுள்ள தொகுதிகளை காங்கிரஸýக்குத் தருவதாகத் தெரிவித்துள்ளனர். விடுதலைச் சிறுத்தைகள், புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகளுக்கு ஒதுக்கியது போக 8 முதல் 12 தொகுதிகள் வரை காங்கிரஸ் கட்சிக்கு இந்த முறை கூடுதலாக அளிக்க தி.மு.க. தயாராக இருப்பதாகத் தெரியவந்துள்ளது. இதன்மூலம், காங்கிரஸ் கட்சிக்கு 55 முதல் 60 தொகுதிகள் வரை ஒதுக்கப்படலாம் என்று தி.மு.க. தரப்பில் சூசகமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, தங்களின் கட்சி மேலிடத்தில் தெரிவித்து, அவர்களின் கருத்தையும் அறிந்துவருவதாக காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்துள்ளனர். பேச்சுவார்த்தைக்குப் பிறகு நிருபர்களிடம் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வீ.தங்கபாலு கூறியது: காங்கிரஸ் கட்சித் தரப்பில் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது என்ற விருப்பதைத் தெரிவித்துள்ளோம். பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்றது. இதுகுறித்த விவரங்களை இரு கட்சிகளின் மேலிடங்களுக்கும் தெரிவிப்போம். அவர்களுடனான ஆலோசனைக்குப் பிறகு, ஓரிரு நாள்களில் இரண்டாம் கட்டப் பேச்சு நடக்கும் என்றார். துணை முதல்வரும், தி.மு.க. தொகுதிப் பங்கீட்டுக் குழுவின் தலைவருமான மு.க.ஸ்டாலின், "காங்கிரஸýடனான பேச்சுவார்த்தை சுமுகமாகப் போய்க்கொண்டிருக்கிறது. ஓரிரு நாளில் அடுத்தக்கட்டப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு முடிவு எட்டப்படும்' என்றார்.

No comments:

Post a Comment