Pages

Tuesday, 22 February 2011

இந்த முறையும் 35 இடங்கள் வேண்டும்: அ.தி.மு.க. தொகுதிப் பங்கீட்டுக் குழுவிடம் மதிமுக வலியுறுத்தல்

 2006 சட்டப்பேரவைத் தேர்தலில் ஒதுக்கப்பட்ட 35 தொகுதிகளுக்குக் குறையாமல் இந்த முறையும் ஒதுக்கீடு செய்ய வேண்டும் அ.தி.மு.க. தொகுதிப் பங்கீட்டுக் குழுவிடம் ம.தி.மு.க. கோரியுள்ளது. அ.தி.மு.க. கூட்டணியில் தேர்தல் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை ராயப்பேட்டையில் உள்ள அந்தக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்துப் பேசுவதற்காக அதிமுக சார்பில் அந்தக் கட்சியின் பொருளாளர் ஓ. பன்னீர்செல்வம், தலைமை நிலையச் செயலாளர் கே.ஏ. செங்கோட்டையன், தேர்தல் பிரிவுச் செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோரைக் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவினருடன் ம.தி.மு.க.வின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் ஆர்.டி.மாரியப்பன், காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் பாலவாக்கம் சோமு, செய்தித் தொடர்பாளர் நன்மாறன் ஆகியோர் அடங்கிய குழுவினர் திங்கள்கிழமை இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, தங்களது கட்சிக்கு கடந்த முறை ஒதுக்கிய 35 தொகுதிகள் என்ற அளவுக்குக் குறையாமல் இந்த முறையும் ஒதுக்க வேண்டும் என்று மதிமுக தரப்பில் கோரப்பட்டுள்ளது. 2006-ல் அதிமுகக் கூட்டணியில் மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் மட்டுமே இருந்தன. அதனால் 35 தொகுதிகள் வழங்கப்பட்டன. ஆனால், இப்போது அதிமுக கூட்டணியில் அதிக எண்ணிக்கையில் கட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேலும் சில கட்சிகள் வருவதற்கு வாய்ப்புள்ளதால், அப்போதையச் சூழலைக் கருத்தில் கொண்டு தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ம.தி.மு.க.வுக்கு வழங்கப்படும் தொகுதிகளின் எண்ணிக்கையை இரு கட்சியின் தலைவர்களும் பேசி முடிவு செய்வார்கள் என்றும் அதிமுக குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த முறை 20 முதல் 25 தொகுதிகள் வரை ம.தி.மு.க.வுக்கு ஒதுக்க அதிமுக முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. வன்னியர் கூட்டமைப்பு நிபந்தனையற்ற ஆதரவு: வன்னியர் கூட்டமைப்பு சார்பில் அதன் நிறுவனர் சி.என்.ராமமூர்த்தி உள்ளிட்டோர் அதிமுக குழுவினருடன் பேச்சு நடத்தினர். பேச்சுக்குப் பிறகு நிருபர்களிடம் பேசிய அவர், "வரும் தேர்தலில் தொகுதிகள் வழங்கினால் போட்டியிடுவோம். இல்லையென்றாலும் அதிமுக கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவோம்' என்று கூறினார். அதிமுக அணியில் இதுவரை மனிதநேய மக்கள் கட்சிக்கு 3, புதிய தமிழகம் கட்சிக்கு 2, இந்திய குடியரசு கட்சிக்கு 1, மூவேந்தர் முன்னணிக் கழகத்துக்கு 1 என்று தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் தொடர்ந்து அதிமுகவுடன் பேசி வருகின்றன. புதிய தமிழகம் கட்சி தங்களுக்குக் கூடுதல் தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று மீண்டும் கோரிக்கை வைத்துள்ளது. அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் மாநிலச் செயலாளர் பி.வி. கதிரவன், மாநிலப் பொருளாளர் ஆர். மாயத்தேவர், மாநிலச் செயலாளர் எம். பசும்பொன், மாநிலக் குழு உறுப்பினர்கள் எஸ்.பி. அல்லிக்கொடி, வி. பாலாஜி ஆகியோர் அதிமுக குழுவினருடன் திங்கள்கிழமை பேச்சு  நடத்தினர்.

No comments:

Post a Comment