Pages

Monday, 21 February 2011

'தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்ய வேண்டியது அ.தி.மு.க.தான்'


சென்னை, பிப். 20: பேரவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டை அ.தி.மு.க. தலைமைதான் இறுதி செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் கூறினார்.
 அ.தி.மு.க. அணியில் உள்ள கட்சிகள் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஏற்கனவே ஒரு சுற்று பேச்சுவார்த்தையை நிறைவு செய்துவிட்டன.
 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் அ.தி.மு.க.வுக்கும் இடையிலான இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை சனிக்கிழமை நடந்தது. பேச்சுவார்த்தையின் இறுதியில், "விரைவில் தொகுதிப் பங்கீட்டு உடன்பாடு ஏற்படும்' என்று அக்கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் தெரிவித்திருந்தார்.
 இந்த நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, அ.தி.மு.க. இடையிலான இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இந்த பேச்சுவார்த்தையில் அ.தி.மு.க. சார்பில் கட்சியின் பொருளாளர் ஓ. பன்னீர்செல்வம், தலைமை நிலையச் செயலாளர் கே.ஏ. செங்கோட்டையன், தேர்தல் பிரிவுச் செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் பங்கேற்றனர்.
 இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் அக்கட்சியின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன், துணைச் செயலாளர்கள் சி. மகேந்திரன், பழனிச்சாமி ஆகியோர் பங்கேற்றனர்.
 சுமார் ஒரு மணி நேரம் நீடித்த இந்த சந்திப்புக்கு பிறகு, தா. பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறியது: வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிக்கான அணியை அமைப்பது, திட்டமிடுதல் குறித்து தொடர்ந்து பேசிவருகிறோம். இன்னும் சில தினங்களில் இந்த பேச்சுவார்த்தை இறுதி செய்யப்படும். அதை இறுதி செய்ய வேண்டிய பொறுப்பு அ.தி.மு.க. தலைமையிடம் உள்ளது. தமிழக மக்கள் விரும்பும் கூட்டணியின் வெற்றிப் பயணம் தொடரும். அடுத்த கட்டப் பேச்சுவார்த்தை எப்போது என்பதை சில தினங்களில் அறிவிப்போம் என்றார் தா. பாண்டியன்.

No comments:

Post a Comment