Pages

Thursday, 24 February 2011

தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டு அ.தி.மு.க.வினர் 12,056 பேர் மனு

வரும் தமிழக சட்டப்பேரவை தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டும் என்று கோரி, 12 ஆயிரத்து 56 அ.தி.மு.க.வினர் கட்சித் தலைமையிடம் விருப்ப மனு அளித்துள்ளனர்.

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட விரும்பும் அ.தி.மு.க. தொண்டர்கள் விருப்ப மனு அளிக்கலாம் என்று கட்சி பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்ததைத் தொடர்ந்து, பிப்ரவரி 5-ம் தேதி முதல் அ.தி.மு.க.வினர் விருப்ப மனு அளித்தனர். மனு அளிக்க இம்மாதம் 18-ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், மேலும் கால அவகாசம் தர வேண்டும் என்ற கட்சியினரின் வேண்டுகோளை ஏற்று, பிப்ரவரி 23 வரை மனு அளிக்கலாம் என ஜெயலலிதா தெரிவித்திருந்தார்.
இந்த சூழலில், ஏராளமான அ.தி.மு.க.வினர் ஆர்வத்துடன் விருப்ப மனு அளித்துள்ளனர். இதனால், கடந்த 20 நாள்களாக சென்னை, அவ்வை சண்மும் சாலையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் தினமும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்தனர்.
விருப்ப மனு தர கடைசி நாளான புதன்கிழமையும் ஏராளமானோர் மனு அளித்தனர். புதன்கிழமை மாலை வரை 12 ஆயிரத்து 268 பேர் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டு விருப்ப மனு அளித்துள்ளதாக அ.தி.மு.க. தலைமை அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதில் தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்காக 12 ஆயிரத்து 56 பேர் மனு அளித்துள்ளனர். அவர்களில் 1,503 பேர், கட்சிப் பொதுச் செயலாளரான ஜெயலலிதா தங்கள் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு அளித்துள்ளனர்.
இது தவிர, புதுச்சேரி மாநில பேரவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டு 181 பேரும், கேரள பேரவைத் தேர்தலுக்காக 31 பேரும் மனு அளித்துள்ளனர்.
அ.தி.மு.க. தொண்டர்கள் செலுத்திய விருப்ப மனுக் கட்டணம் மூலம் ரூ.12 கோடியே 14 லட்சத்து 96 ஆயிரம் வசூலாகியுள்ளது.

No comments:

Post a Comment