Pages

Saturday, 26 February 2011

தேர்தல் நேரத்தில் கிடைத்தால்தான் உண்டு!

தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் நேரம் வந்தாலும் வந்தது, அமைச்சர்களும், அதிகாரிகளும் அரசு திட்டப் பணிகளை முடுக்கிவிட்டு வரும் அதே வேளையில், கோரிக்கைகளுக்கு தீர்வு காண்பதிலும் ஊழியர் சங்கங்கள் மும்முரமாக உள்ளன.தேர்தல் நேரத்தில் எல்லா தரப்பு மக்களையும் திருப்தி அடையச் செய்யும் வகையில், ஆளும்கட்சி பல்வேறு அறிவிப்புகளையும், சலுகைகளையும் அளித்து வருவது தெரிந்ததே. அதனை பயன்படுத்திக் கொண்டு இந்த தேர்தல் நேரத்தில் கேட்டால்தான் கிடைக்கும் என்ற நோக்கத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், வருவாய்த் துறையினர் என பல்வேறு தரப்பினரும் போராட்டக் களத்தில் குதித்துள்ளனர்.இதனிடையே, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தென்னிந்திய திருச்சபையின் (சி.எஸ்.ஐ.) டி.டி.டி.ஏ. பள்ளிகளில், 2008ஆம் ஆண்டு பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு பணி அங்கீகாரம் வழங்க வேண்டும் என தென்னிந்திய சி.எஸ்.ஐ. பள்ளி ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இத்தனை நாள்களாக என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என ஆசிரியர்களிடம் கேட்டால், ""இதுவரை கேட்டும் பயனில்லை. இப்போது தேர்தல் வருவதால் சிறுபான்மை மக்களின் வாக்கு வங்கியை கருத்தில்கொண்டு கோரிக்கை நிறைவேற்றப்படலாம் என்பதை உணர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்'' என்கின்றனர்.கடந்த 17ஆம் தேதி பேராயர் கால்டுவெல் வாழ்ந்த இல்ல திறப்பு விழாவில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட சி.எஸ்.ஐ. பேராயர்கள் சார்பில் முதல்வர் கருணாநிதிக்கு "இரண்டாம் கால்டுவெல்' பட்டம் வழங்கப்பட்டது. அந்தப் பட்டம் வழங்கி மூன்று நாள்கள் ஆன பின்பும் ஆசிரியர்களின் கோரிக்கைக்கு தீர்வு ஏற்படவில்லை.இந்நிலையில், 20ஆம் தேதி சி.எஸ்.ஐ. ஆசிரியர்களின் போராட்ட அறிவிப்பை வெளியிட்டார் திருநெல்வேலி பேராயர் ஜே.ஜே. கிறிஸ்துதாஸ். அதன்படி ஆசிரியர்கள் புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தையும் மேற்கொண்டனர்.

No comments:

Post a Comment