Pages

Thursday, 24 February 2011

அ.தி.மு.க. அணியில் பார்வர்டு பிளாக் கட்சிக்கு ஒரு தொகுதி

அ.தி.மு.க. தலைமையிலான அணியில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சிக்கு ஒரு சட்டப்பேரவை தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை, சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தேசிய செயலாளர் தேவராஜன், தேசிய செயலாளரும், மேற்குவங்க மாநில வேளாண்மை துறை அமைச்சருமான நரேன் தேவ், கட்சியின் மாநில பொதுச் செயலாளர் பி.வி. கதிரவன் உள்ளிட்ட அக்கட்சி நிர்வாகிகள் புதன்கிழமை சந்தித்துப் பேசினர்.
இந்த சந்திப்பு குறித்து பின்னர் செய்தியாளர்களிடம் தேவராஜன் கூறியதாவது:
தமிழ்நாட்டில் இடதுசாரி, ஜனநாயக, முற்போக்கு அணியை வலுப்படுத்தும் வகையில், வரும் சட்டப்பேரவை தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான அணியில் சேர்ந்து போட்டியிடுவது என்று அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி முடிவு செய்துள்ளது. இது குறித்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினோம்.
இந்தத் தேர்தலில் அ.தி.மு.க. அணியில் எங்கள் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. சிங்கம் சின்னத்தில் எங்கள் கட்சி வேட்பாளர் போட்டியிடுவார் என்றார் தேவராஜன்.
எந்த தொகுதி?
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தொகுதியில்தான் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி தொடர்ச்சியாக போட்டியிட்டு வருகிறது. அக்கட்சியின் பிரதிநிதிகள் ஏற்கெனவே இந்தத் தொகுதியிலிருந்து சட்டப்பேரவைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். எனவே, இந்தத் தேர்தலிலும் தங்கள் கட்சிக்கு உசிலம்பட்டி தொகுதியை ஒதுக்க வேண்டும் என்று
அ.தி.மு.க.விடம் பார்வர்டு பிளாக் கட்சி கேட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment