அதிமுக, தேமுதிக கூட்டணி தொடர்பான பூர்வாங்கப் பேச்சுக்கள் முடி்து விட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து விரைவில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும், தேமுதிக தலைவர் விஜயகாந்த்தும் சந்திக்கவுள்ளதாக பரபரப்பாக பேசப்படுகிறது. சட்டசபைத் தேர்தலில் எப்பாடு பட்டாவது வென்றாக வேண்டிய மிக கஷ்டமான நிலையில் இருக்கிறார் ஜெயலலிதா. இதற்காக கூட்டணியைப் பலப்படுத்த வேண்டிய நிலையிலும் அவர் உள்ளார். இதையடுத்து தேமுதிகவை தனது வலையில் இழுக்க ஜெயலலிதா தீர்மானித்திருக்கிறார். இதற்காக தேமுதிக தரப்புடன் அதிமுகவின் 2ம் கட்டத் தலைவர்கள் அளவிலான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அந்தப் பேச்சுவார்த்தை தற்போது வெற்றிகரமாக முடிந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
பண்ருட்டி ராமச்சந்திரன், பிரமேலதா விஜயகாந்த் உள்ளிட்ட தேமுதிக குழுவுடன், அதிமுக தரப்பில் சசிகலா உள்ளிட்டோர் அடங்கிய குழு பேசியுள்ளதாம். இந்தப் பேச்சுவார்த்தையின் போது தங்களுக்கு 15 சதவீத வாக்கு வங்கி இருப்பதால் அதிக சீட்களை தர வேண்டும் என தேமுதிக தரப்பு வற்புறுத்தியதாம். இந்தக் கோரிக்கையை லாவகமாக எதிர்கொண்ட அதிமுக தரப்பு அதிகபட்சம் 50 சீட்கள் வரை தரத் தயாராக இருப்பதாக கூறியுள்ளதாம். முதலி்ல இதற்கு விஜயகாந்த் தயங்கினாலும் தற்போது இதற்கு ஒத்து வர அவர் முடிவு செய்து விட்டதாக கூறப்படுகிறது. அடுத்த கட்டமாக ஜெயலலிதாவும், விஜயகாந்த்தும் விரைவில் சந்திக்கவுள்ளனராம். இதற்கு முதல் கட்டமாக ஜெயலலிதா தலைமையில் தமிழகத்தில் ஜூலை 5ம் தேதி நடக்கவுள்ள பந்த் போராட்டத்தில் தேமுதிகவையும் கலந்து கொள்ள வைக்கும் பொறுப்பு தா.பாண்டியனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாம். அவரும் விஜயகாந்த்தை இதுதொடர்பாக நேரில் சந்தித்து வற்புறுத்தவுள்ளாராம்.
இந்தப் போராட்டத்தின்போது தமிழகத்தில் அதிமுக கூட்டணி இதுதான் என்பதை மறைமுகமாக காட்டுவது ஜெயலலிதாவின் திட்டமாம். இந்த போராட்டத்திற்குப் பின்னர் முறைப்படி அதிமுக கூட்டணியை ஜெயலலிதா அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்பாக விஜயகாந்த், ஜெயலலிதாவை சந்தித்துப் பேசி விடுவார் என்று தெரிகிறது. தேமுதிக தவிர இன்னொரு முக்கிய கட்சிக்கும் அதிமுக தரப்பிலிருந்து வலை வீசப்பட்டுள்ளதாம். அந்தக் கட்சியும், அதிமுகவின் ஆஃபர் குறித்து தீவிரமாக பரிசீலித்து வருவதாக தெரிகிறது.
No comments:
Post a Comment