Pages

Monday, 21 February 2011

27 தொகுதிகளில் போட்டியிட அகில இந்திய பாரம்பரிய மீனவர் சங்கம் முடிவு

வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் அகில இந்திய பாரம்பரிய மீனவர் சங்கம் 27 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளது.

 சென்னை பட்டினப்பாக்கத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து மீனவ சங்கங்களின் கலந்துரையாடல் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சங்கத்தின் பொதுச் செயலாளர் ச. ரூபேஷ்குமார் தசலைமை வகித்தார். மீனவர் சங்கத் தலைவர் எஸ். மகேஷ், பொதுச் செயலாளர் ராபர்ட், பொருளாளர் பி. பிரகாஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
 இதில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள்:
 தமிழகத்தில் 37 சட்டப் பேரவைத் தொகுதிகளில் மீனவர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். இதில் வெற்றி வாய்ப்புள்ள 27 தொகுதிகளில் இதர மீனவர் அமைப்புகளுடன் இணைந்து அகில இந்திய பாரம்பரிய மீனவர் சங்கம் போட்டியிடும்.
 இலங்கைக் கடற்படையினரால் தொடர்ந்து தமிழக மீனவர்கள் கொலை தாக்குதலுக்கு ஆளாவதும், சிறை பிடிக்கப்படுவதும் மிகுந்த துயரையும் வேதனையையும் அளிக்கிறது. இதனால், மீனவர்களின் வாழ்வாதாரமே முடங்கியுள்ளது. இதைத் தடுத்த நிறுத்த இனியாவது மத்திய, மாநில அரசுகள் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 இலங்கைக்கு கச்சத்தீவை தாரைவார்த்த ஒப்பந்தத்தை ரத்து செய்து, தமிழக மீனவர்களின் மீன்பிடி உரிமையை நிலைநாட்டும் வகையில் கச்சத்தீவை மீட்க மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 மீனவ மக்களை கடல் சார் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும். நீர்நிலை சார்ந்த துறைகளில் கல்வி, வேலைவாய்ப்பில் 50 சதவீத ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

No comments:

Post a Comment