Pages

Wednesday, 16 March 2011

வாக்காளர்களுக்கு அழகிரி, கார்த்தி சிதம்பரம் பணம் கொடுத்தனர்: விக்கிலீக்ஸ்

தேர்தல் நேரத்தில் வாக்களர்களுக்கு பணம் கொடுப்பது தென் இந்தியாவில் சாதாரண விஷயம் என்று விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது. மேலும் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி ஆகியோர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாகவும் விக்கிலிகீஸ் தகவல் கூறுகிறது.


உலகெங்கும் உள்ள அமெரிக்கத் தூதரகங்கள் தங்கள் நாட்டின் வெளியுறவுத்துறைக்கு அனுப்பிய பல்வேறு ரகசிய தகவல்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டு வருகிறது. இதில் இந்தியா தொடர்பான விவரங்களை விக்கிலீக்ஸ், த ஹிந்து நாளிதழுடன் பகிர்ந்து கொண்டுள்ளது.

இதுவரை விக்கிலீக்ஸ் வெளியிடாத இந்தத் தகவல்களை நேற்று முதல் ஹிந்து வெளியிட்டு வருகிறது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

2009ம் ஆண்டு மக்களவை தேர்தலின்போது வாக்காளர்களுக்கு பணம், பொருட்கள் கொடுத்தாக ஆந்திரா மற்றும் தமிழக அரசியல்வாதிகளும், அவர்கள் உதவியாளர்களும் ஒப்புக் கொண்டதாக சென்னையில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரி பிரடரிக் கப்லான் அமெரிக்காவுக்கு அனுப்பிய கேபிளில் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்க தூதரக குழுவிடம் கார்த்தி சிதம்பரம், ரசாயனத்துறை அமைச்சர் மு.க. அழகிரியின் நம்பிக்கைக்குரிய முன்னாள் மதுரை மேயர் எம். பட்டுராஜன், ஆந்திராவைச் சேர்ந்த மஜ்லிஸ் இ இத்தன்ஹதுல் முஸ்லிமீனைச் சேர்ந்த எம்.பி. அசாதுதீன் ஒவைசி ஆகியோர் தேர்தல் பிரச்சாரத்தின்போது தாங்களும், தங்கள் உதவியாளர்களும் வாக்களர்களுக்கு எவ்வாறு பண பட்டுவாடா செய்தார்கள் என்று ஒளிவுமறைவின்றி பேசியுள்ளனர்.

13-5-2009 அன்று அனுப்பப்பட்டுள்ள கேபிளில் கப்லான் தேர்தல் பணிகளை பண பலம் எவ்வாறு ஆட்டி படைக்கிறது என்று இந்த துறையில் உள்ள பலரிடம் சேகரித்த தகவல்களை அனுப்பியுள்ளார்.

வாக்காளர்களுக்கு அரசியல்வாதிகள் பணம், பொருள் முதலியவை கொடுப்பது என்பது தென் இந்தியாவில் சாதாரணமான ஒன்று. ஏழை வாக்காளர்கள் வேட்பாளர்கள் ஏதாவது கொடுக்க மாட்டார்களா என்று எதிர்பார்க்கின்றனர்.

அவர்களும் வாக்களர்களின் எதிர்பார்ப்புகளை எப்படியாவது பூர்த்தி செய்கின்றனர். கிணறு வெட்ட பணம் கொடுப்பதில் இருந்து, காலையில் செய்தித்தாள் கொடுக்கும்போது அதற்குள் பணத்தை வைத்து கொடுத்து வாக்காளர்களை தங்கள் பக்கம் இழுப்பது வரை செய்தவற்றை எல்லாம் அரசியல்வாதிகளும், அவர்கள் ஆட்களும் ஒப்புக் கொண்டுள்ளனர்.

இதற்கான பணம் கட்சி நிதி திரட்டுவதன் மூலம் கிடைக்கிறது. இவ்வாறு பணம் கொடுப்பதால் வாக்காளர்களின் மனம் மாறுகிறதா என்று உறுதியாக சொல்ல முடியவில்லை என்றாலும், சில நேரங்களில் நிச்சயம் மனம் மாறத்தான் செய்கிறது.

கப்லானும், அவரது சக ஊழியர்களும் சென்ற இடங்களில் எல்லாம் பத்திரிக்கையாளர்கள், அரசியல்வாதிகள், வாக்காளர்கள் லஞ்சம் என்பது தேர்தல் நேரத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை என்றே கூறினர்.

இந்த குழு சென்னை மற்றும் ஹைதராபாத்தில் உள்ள சேரிப் பகுதிகளுக்கு சென்றபோது தேர்தல் நேரத்தில் அங்குள்ள மக்கள் ஏதாவது கிடைக்காதா என்று எதிர்பார்ப்பதை தெரிந்து கொண்டனர்.

அரசியல் வல்லுநர் ஒருவர் அவர்களிடம் கூறுகையில், பிரச்சாரத்திற்கு சேரிப்பகுதிகள் மிகவும் முக்கியமானவை. அங்குள்ள மக்கள் தொகையும், அவர்கள் வறுமையும் லஞ்சம் மூலம் அவர்களை சுலபமாக வாங்கிவிடச் செய்கிறது என்றார்.

சென்னையில் உள்ள ஒரு என்ஜிஓ அமைப்பு கூறுகையில், தமிழகத்தில் வாக்காளர்களைக் கவர அவர்களுக்கு திமுகவும், அதிமுகவும் எப்பொழுதுமே லஞ்சம் கொடுக்கும். அவர்கள் பணப் பட்டுவாடாவுக்கென்று தனி முறை வைத்துள்ளனர்.

தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன் அரசியல் கட்சிகளின் ஏஜென்ட்கள் அரிசி மூட்டையில் பணத்தை கொண்டு வருவார்கள். அவர்களிடம் இருக்கும் வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர்களின் அடிப்படையில் பணப்பட்டுவாடா செய்வர். ஏஜென்டகள் வழக்கமாக தேர்தல் ஆணையம் தூங்கும்போது நடுராத்திரியில் குறிப்பாக 2 முதல் 4 மணிக்குள் தான் வருவார்கள்.

இன்னொரு செய்தித்தாள் கிடைக்குமா?:

இதுவரை தமிழகம் கண்டிராத அளவுக்கு அரசியலில் பணப்புழக்கத்தை விட்டவர் அழகிரி என்பது கப்லானின் கருத்து. அழகிரியின் நம்பிக்ககைக்கு பாத்திரமான பட்டுராஜன் கடந்த 2009ம் ஆண்டு ஜனவரி மாதம் நடந்த மக்களை இடைத் தேர்தலுக்காக வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதை ஒப்புக் கொண்டார். இது ஒன்றும் பெரிய ரகசியம் எல்லாம் கிடையாது. அழகிரி திருமங்கலத்தில் உள்ள ஒவ்வொரு வாக்காளருக்கும் ரூ. 5 ஆயிரம் கொடுத்தார் என்று பட்டுராஜன் கேபிளில் கூறியுள்ளார்.

இன்னொரு செய்தித்தாள் கிடைக்குமா என்ற தலைப்பில் கப்லான் எழுதிய கட்டுரையில் திருமங்கலத்தில் திமுக எவ்வாறு பணப்பட்டுவாடா செய்தது என்று விளக்கமாக கூறியுள்ளார்.

வழக்கமாக நடுராத்திரியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்கு பதிலாக திருமங்களத்தில் வாக்காளர் பட்டியலில் உள்ளவர்களுக்கு செய்தித்தாள்களில் ஒரு கவரில் பணம் வைத்து கொடுக்கப்பட்டது. அந்த செய்தித்தாள்களில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தி திமுக வாக்காளர் சீட்டு வைக்கப்பட்டிருந்தது. இதன் மூலம் அனைவரும் லஞ்சம் வாங்க வற்புறுத்தப்பட்டுள்ளனர். செய்தித்தாள்களில் வைத்து பணம் பட்டுவாடா செய்யப்பட்டதை பட்டுராஜனே ஒப்புக் கொண்டுள்ளார்.

மதுரையில் உள்ள காங்கிரஸ் நிர்வாகி எஸ். கண்ணன் தூதரக ஊழியர்களிடம் கூறுகையில், திருமங்கலத்தில் தலைக்கு ரூ. 5 ஆயிரம் கொடுக்கப்பட்டது அனைத்தையுமே மாற்றிவிட்டது. இது முன்பு கொடுக்கப்பட்ட தொகையை விட ரூ. 500 அதிகம் என்றார்.

2009ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின்போது திருமங்கலத்தில் செய்ததுபோல் பணம் பட்டுவாடா செய்வதில் சிரமம் ஏற்பட்டது. ஏனென்றால் சட்டசபை தொகுதியை விட மக்களவை தொகுதி 7 மடங்கு பெரியது. இருப்பினும் செய்தித்தாள் முறை மூலம் பணம் கொடுக்கத்தான் அழகிரி திட்டமிட்டுள்ளார்.

கார்த்தி சிதம்பரம்:

மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் 2009ம் ஆண்டு மக்களவை தேர்தல் பிரச்சாரத்தை அவரது மகன் கார்த்தி சிதம்பரம் தான் கவனித்துக் கொண்டார். கார்த்தி சிதம்பரம் ஓட்டுக்கு பணம் கொடுக்க மறுத்துவிட்டார். அவ்வாறு செய்வது தவறு என்றெல்லாம் ஒன்றும் இல்லை. சிவகங்கை தொகுதியில் உள்ள அனைத்து கிராமங்களுக்கு பணம் பட்டுவாடா செய்வது சாத்தியம் இல்லை என்று தான்.

கேபிளில் பெயர் குறிப்பிடாத தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் சென்னையில் உள்ள தூதரக குழுவிடம் கூறுகையில், சிவகங்கையில் கார்த்தி சிதம்பரம் சிறப்பாக செய்லபடுகிறார். அவர் சிலருக்கு பணம் கொடுத்துள்ளார். ஆனால் அவரது தந்தை அவ்வாறு செய்யமாட்டார் என்றார்.

தனது தந்தையை ஆதரிக்கும் சில கிராமவாசிகளுக்கு பணம் கொடுத்ததை கார்த்தி ஒப்புக் கொண்டுள்ளார். பெரும்பாலான கிராமங்கள் உள்ளூர் கோயில்களுக்கும், சத்திரங்களுக்கும் நன்கொடை கேட்டன என்றார்.

இது தவிர ஒவைசி வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததை ஒப்புக் கொண்டார். நான் கிணறு வெட்ட பணம் கேட்டவர்களுக்கு கட்சியினர் மூலம் ரூ. 25 ஆயிரம் கொடுத்து அவர்கள் கிணறு தான் வெட்டுகிறார்களா என்று கண்காணிக்குமாறு கூறினேன். நான் வாக்காளர்களுக்கு நேரடியாக பணம் கொடுக்கவில்லை, அவர்கள் தேவைகளை பூர்த்தி செய்தேன்.

நான் ஒரு அனாதைப் பெண்ணின் திருமணத்திற்கு ரூ. 35 ஆயிரம் கொடுத்தேன். இவ்வாறு பணம் கொடுப்பது சட்டவிரோதமில்லையா என்று கேட்டதற்கு ஆமாம், ஆனால் இது தான் ஜனநாயகம் என்று பதில் அளித்துள்ளார்.

No comments:

Post a Comment