Pages

Tuesday, 1 March 2011

குட்டக் குட்ட குனியக்கூடாது: தி.மு.க.வுக்கு கி. வீரமணி வேண்டுகோள்

கூட்டணி விஷயத்தில் குட்டக் குட்ட குனியாமல் சுதந்திரமாக முடிவெடுக்க வேண்டும் என்று திமுகவுக்கு திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:முதல்வர் கருணாநிதியின் தலைமையில் 5-வது முறையாக நடைபெற்ற திமுக ஆட்சியில் கருவறை முதல் கல்லறை வரை அனைத்துத் தரப்பு மக்களும் பயன்பெற்றுள்ளனர். சமதர்ம சகாப்தத்தை நிலைநாட்டும் ஒப்பற்ற ஆட்சி கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.தசரதனிடம் கைகேயி வரம் பெற்றதாக ராமாயணக் கதையில் வரும் நிகழ்வைப் போல, தோழமை உணர்வு காட்ட வேண்டிய சில கட்சிகள், தோள் மீது சவாரி செய்ய முயல்கின்றன. மிரட்டல் பாணி ஆயுதங்களைக் கையில் எடுத்துக் கொண்டு, கற்பனைக் குதிரைகள் மீது சவாரி செய்வது போன்ற நிபந்தனைகளை ஏற்படுத்தினால் அதற்கு திமுக இணங்க வேண்டியதில்லை.திமுக தேர்தல் கால நெருக்கடிகளைச் சந்திக்கும் கட்சி மட்டும் அல்ல. அரசியல் நெருக்கடி கால நெருப்பாற்றில் நீந்தி வந்த ஜனநாயக பீனிக்ஸ் பறவையாகும். தமிழ் மக்கள் திமுக பக்கம் உள்ளனர். தன்னிகரற்ற சாதனைகள் அதன் பலம். கட்டுப்பாட்டோடு பட்டிதொட்டியெல்லாம் படர்ந்துள்ள இயக்கம் இது. தி.மு.க.வின் பண்பாடு, மனிதநேயம், கண்ணியம் ஆகியவை கட்சிக்கு பலவீனமாகி விடக் கூடாது. குட்டக் குட்ட குனியும் போக்குக்கு திமுக ஆட்பட்டு விடுமோ என்கிற அச்சம் தமிழ் இன உணர்வாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தேவையற்ற கூடுதல் பாரத்தை இறக்கிவிட்டு, நிரந்தர சுமைதாங்கியாக ஆகாமல் சுயமரியாதையுடன் முடிவெடுக்க வேண்டும்.நட்பு பேசிக் கொண்டே கசப்பும், வெறுப்பும் மேலோங்கும் இரட்டை நிலைப்பாட்டை ஏற்றுக் கொண்டு களத்தில் இறங்குவது யாருக்கும் நல்லதல்ல. கூட்டணி அரசியலில் நான் உமி கொண்டு வருகிறேன், நீ நெல் கொண்டு வா. ஊதி ஊதி தின்போம் என்ற போக்கு நியாயமாகுமா?1980-ல் இப்படி விட்டுக் கொடுத்து கெட்டுபோன பழைய வரலாறு திரும்ப வேண்டாம். எனவே, திமுக சுதந்திரமாக முடிவெடுக்க வேண்டும் என்று கி. வீரமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.தில்லி அதிர்ச்சி!
புது தில்லி: கூட்டணி தொடர்பாக தி.மு.க.வுக்கு வேண்டுகோள் விடுத்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி விடுத்துள்ள அறிக்கை, தி.மு.க. தரப்பு சொல்லி வெளியிடப்பட்டதாக இருக்குமோ என்ற கருத்து தில்லி காங்கிரஸ் வட்டாரத்தில் நிலவுகிறது.தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை இன்னும் முடிவுறாத நிலையில் மூன்றாவது தரப்பில் இருந்து இதுபோன்ற அறிக்கை வெளியாகி இருப்பது காங்கிரஸ் மேலிடத்தை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.தங்களுடனான உறவை முறித்துக் கொண்டு தனியாகப் போட்டியிடத் தி.மு.க. தயாராகிவிட்டதோ என்ற சந்தேகம் காங்கிரஸ் கட்சிக்கு எழுந்துள்ளதாகத் தெரிகிறது.இதனிடையே, "முதல்வர் கருணாநிதி சொல்லித்தான் வீரமணியின் அறிக்கை வெளியாகி உள்ளது' என மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்ட பல்வேறு மூத்த காங்கிரஸ் பிரமுகர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment